Published:Updated:

`ஜே ஜே' ஜெயவர்தன்... `தடங்கல்' தமிழச்சி..! தென் சென்னை ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

`ஜே ஜே' ஜெயவர்தன்... `தடங்கல்' தமிழச்சி..! தென் சென்னை ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்
`ஜே ஜே' ஜெயவர்தன்... `தடங்கல்' தமிழச்சி..! தென் சென்னை ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

`ஜே ஜே' ஜெயவர்தன்... `தடங்கல்' தமிழச்சி..! தென் சென்னை ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்

தொகுதி: தென்சென்னை

மயிலாப்பூர், தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தொகுதி பற்றிய சுருக்க வரலாறு!

1957-ம் ஆண்டு தென்சென்னை தொகுதி உருவாக்கப்பட்டது. டி.டி.கிருஷ்ணமாச்சாரி, நாஞ்சில் மனோகரன், அறிஞர் அண்ணா, முரசொலி மாறன், வெங்கட்ராமன், வைஜெயந்தி மாலா போன்றவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த பெருமையை உடைய தொகுதி. இத்தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வென்றிருக்கிறார் தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு. 1967 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் அண்ணாதுரை. `தி.மு.க வெற்றிபெறும் என்ற நம்பிக்கை அண்ணாவுக்கே இல்லை' என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்த சம்பவங்களும் நடந்தன. தி.மு.கவிலிருந்து பிரிந்து தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கிய ஈ.வி.கே.சம்பத், தென்சென்னையில் களமிறங்கினார். அவரைத் தோற்கடித்த பெருமை நாஞ்சில் மனோகரனுக்கு வந்து சேர்ந்தது. இத்தொகுதியில் தி.மு.க 7 முறையும் அ.தி.மு.க 3 முறையும் காங்கிரஸ் கட்சி 5 முறையும் வென்றுள்ளன. 

கேள்வி கேட்கவே லஞ்சம்! 

தென்சென்னை தொகுதியில் நடைபெற்ற 10-வது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார் ஆர்.ஸ்ரீதரன். இவர் வெளிநாட்டிலிருந்து கணிப்பொறி உதிரிபாகங்களைக் கொள்முதல் செய்த வழக்கில் சிக்கினார். அதேபோல், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் வாங்கிய புகாரில் தென்சென்னை எம்.பியாக இருந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் சிக்கினார். இதுதொடர்பான, வீடியோ காட்சிகள் வெளியாகி, ஜெயலலிதாவுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக அடுத்து வந்த தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனுக்கு சீட் கொடுத்தார் ஜெயலலிதா. லஞ்ச பேரத்தால் கட்சியிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார் ராஜேந்திரன். 

`வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்ற முழக்கத்தை டெல்லியில் முன்வைப்பது தமிழக அரசியல் கட்சிகளின் வாடிக்கை. இதே வரிகளை சற்று திருத்தி, `தென்சென்னை வாழ்கிறது; வடசென்னை தேய்கிறது' என்ற முழக்கத்தை பூர்வகுடிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். அந்தளவுக்கு தென்சென்னையை குறிவைத்தே வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. `தென்சென்னையில் வீசப்படும் குப்பைகூட, வடசென்னையில்தான் வந்து விழுகிறது' என்பது அடிப்படையான குற்றச்சாட்டு. ஆனால், அந்த வளர்ச்சிப் பணிகளே எதிராக நின்றதை சென்னைப் பெருவெள்ளத்தில் காண முடிந்தது. அந்தளவுக்கு சென்னையின் உள்கட்டமைப்பே மாறிப் போன அவலத்தைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. 

தமிழ்நாட்டில் படித்தவர்கள் நிரம்பியிருக்கும் முதல் தொகுதியாக தென்சென்னை இருக்கிறது. இங்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறுவது கடினம் என்பதால், சாதனைகளையும் வளர்ச்சியையும் முன்வைத்தே வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பது வழக்கம்.

`தன்னம்பிக்கை' தென்சென்னை!

2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தென்சென்னை மூழ்கியது. வீடுகள், உடைமைகள், சேர்த்து வைத்த பொருள்கள் என அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. `தண்ணீரை அள்ளிச் செல்ல எப்போது வாகனம் வரும்?' என மக்கள் காத்திருந்த அவலமும் நடந்தது. சென்னை மக்களை துயரிலிருந்து காக்க, உலகெங்கிலும் உள்ள மக்கள் கரம் கொடுத்தனர். தி.நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை எனப் பல பகுதிகள் பாதிப்பிலிருந்து மீளவே முடியாது எனப் பலரும் முடிவுக்கு வந்த சூழலில், சுயமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் மீண்டெழுந்தது தென்சென்னை. 

தலையாய பிரச்னை? 

1. 15 வருடங்களாகச் செயல்பட்டு வரும் துரைப்பாக்கம் சுங்கச்சாவடியால், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுங்கச்சாவடி அவலம் எப்போது தீரும் எனத் தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

2. ஐ.டி நிறுவனங்கள் பெருகியிருக்கும் ராஜீவ்காந்தி சாலையில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அனைவரும் கழிவுநீர் லாரிகளைதான் பயன்படுத்துகின்றனர்.

3. ஐ.டி ஊழியர்களின் வசிப்பிடங்கள் பெரும்பாலும் தென்சென்னையை மையமிட்டே அமைந்துள்ளன. இதனால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

4. பிரதான தெருக்களில் பெண்களின் பாதுகாப்புக்காக சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், உட்புற பகுதிகளில் சி.சி.டி.வி. கண்காணிப்பு இல்லை. இதனால் குற்றங்கள் பெருகி வருகின்றன. உள்புற பகுதிகளுக்கான மினி பஸ் சேவையும் முடங்கிவிட்டது. 

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

தி.மு.க-வின் கோட்டையாக இருந்த இந்தத் தொகுதியில் கடந்தமுறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெயவர்தன் வெற்றி பெற்றார். தற்போது பா.ஜ.க கூட்டணியில் நிற்பது மைனஸ். காரணம், மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்புகள் தொகுதி முழுக்க இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்கிறார் ஜெயவர்தன். 

தி.மு.க. வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனுக்குக் கூட்டணிதான் பிளஸ். கல்வியாளராகவும் கவிஞராகவும் இருப்பதால், படித்தவர்கள் மத்தியில் வளர்ச்சியை முன்வைத்து வாக்கு சேகரிப்பது பிளஸ். 

அ.ம.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் இசக்கி சுப்பையா, தொகுதியில் உள்ள சொந்தச் சமூக வாக்குகளையும் சிறுபான்மையின வாக்குகளையும் பிரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், பிரதான கட்சி வேட்பாளர்களே சற்று மிரண்டு போய் உள்ளனர். மக்கள் நீதி மய்யத்தின் ரங்கராஜனும் நாம் தமிழர் கட்சியின் ஷெரினும் மக்கள் அபிமானத்தைப் பெறுவதற்குப் போராடி வருகின்றனர். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. போக்குவரத்து நெருக்கடி
2. திடக்கழிவு மேலாண்மை
3. மழைநீர் வடிகால்வாய்
4. கழிவுநீர்க் கால்வாய்
5. பெண்கள் பாதுகாப்பு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன் தன்னுடைய பிரசாரத்தில், ``தமிழச்சி தங்கபாண்டியன் வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறார். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க வேட்பாளர் கூறி வருகிறார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல், பெருங்குடி குப்பைக் கிடங்கை மேம்படுத்தவும் கழிவுகள் கலப்பதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" எனக் கடந்தகால சாதனைகளாகச் சிலவற்றை முன்வைக்கிறார். 

தமிழச்சி தங்கபாண்டியனோ, ``எங்கள் கூட்டணிக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொகுதியின் வளர்ச்சிக்கென அ.தி.மு.க எதையுமே செய்யவில்லை. இந்தத் தேர்தலில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி" என நம்பிக்கையோடு வலம் வருகிறார். 

அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையாவோ, ``தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டி சின்னத்தை வழங்கியுள்ளது. இந்தச் சின்னத்தை மக்கள் கொடுத்த பரிசாக நினைக்கிறோம். அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இந்தத் தொகுதியில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்" என வீதி வீதியாக வலம் வருகிறார். 

பூத் கமிட்டி வாரியாகவும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அ.தி.மு.க தரப்பு அள்ளி வீசுவதால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. தி.மு.க தரப்பில் எந்தவித பட்டுவாடாவும் நடக்காததால், தொண்டர்கள் வதங்கிப் போய் உள்ளனர். போட்டி கடுமையாக இதுவே முக்கியக் காரணமாகவுள்ளது. ஆனால், தொகுதியின் தேர்தல் முடிவை பணம் மாற்றி விடும் என்று சொல்ல முடியாது. ஜெயவர்தன் மீண்டும் ஜெயிப்பது எளிதாகத் தெரியவில்லை. தமிழச்சி தங்கபாண்டியன் தரப்பு, தீவிரமாகக் களப்பணியாற்றினால் வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.

 
அடுத்த கட்டுரைக்கு