Published:Updated:

மத உணர்வுகளைத் தூண்டும் பிரசாரங்கள்... தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?!

யோகி ஆதித்யாநாத் பேசிக்கொண்டிருக்கும்போது முதல் வரிசையில் அமர்ந்து கைதட்டிக் கொண்டிருக்கிறார், அதே வழக்கின் முதன்மை கொலைக் குற்றவாளி.

மத உணர்வுகளைத் தூண்டும் பிரசாரங்கள்... தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?!
மத உணர்வுகளைத் தூண்டும் பிரசாரங்கள்... தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன?!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடப்போவதாக அறிவித்த மறுநாள், ``இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் போட்டியிடப் பயப்படுகிறார் ராகுல் காந்தி” என, பிரசார மேடையில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. வயநாடு தொகுதியில் 50 சதவிகிதத்துக்குக் குறைவாக இந்துக்கள் இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய மோடி, ``உத்தரப்பிரதேசத்தின் அமேதியோடு ராகுல் காந்தி தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதியைப் பாருங்கள். இந்து பெரும்பான்மை இல்லாத இடத்தைத் தேடி அடைக்கலம் அடையவேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அமைதியை விரும்பும் இந்து சமூகத்தைக் குறித்து, தவறாகச் சித்திரிக்கப்படுகிறது. இனி வாக்காளர்கள் விழித்துக்கொண்டு காங்கிரஸைத் தண்டிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். 

ஒரு வாரத்துக்கு முன்பு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பிரசாரக் கூட்டத்தில், ``2015-ம் ஆண்டில் பசு மாமிசம் வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டு ஒரு குழுவால் நடத்தப்பட்ட கொலைச் சம்பவத்தை, மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்காக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்துகிறது” என்று பேசினார். படுகொலையை விமர்சிக்காமல், குற்றவாளிகளின் மீதான விமர்சனத்தைக் கண்டித்துக்கொண்டிருந்த யோகி ஆதித்யநாத்தின் பிரசாரக் கூட்டத்தில், முதல் வரிசையில் அமர்ந்து கைதட்டிக்கொண்டிருக்கிறார், அதே வழக்கின் முதன்மை கொலைக் குற்றவாளி. ``பா.ஜ.க தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்துக்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய குடிமக்கள் சட்டம் அமல்படுத்துவதற்கான முயற்சி எடுக்கப்படும்” என்று வெளிப்படையாகவே தெரிவிக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. 

மகாராஷ்டிராவின் வார்தா தொகுதியில் பிரதமர் பேசியிருக்கும் இந்த மத ரீதியான பிரசாரம், காங்கிரஸ் தலைமையை நோக்கிய தாக்குதல் அல்ல. மாறாக, இந்தியாவின் சமத்துவப் பண்பாட்டை நோக்கிய கருத்துத் தாக்குதல். `மதத்தின் பெயராலோ, சாதி, இன அல்லது மொழி அடிப்படையிலோ ஒரு வேட்பாளருக்கு வாக்கு அளிக்கவேண்டும் என்றோ, அதே காரணத்துக்காக வாக்களிக்கக் கூடாது என்றோ' சொல்வதை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123 பிரிவு விதிமீறலாகவும் அறமற்றதாகவும் வரையறுத்திருக்கிறது. பிரசாரங்களை மதரீதியாக, சாதிரீதியாக முன்னெடுக்கும் கட்சிகளின் மீதும் வேட்பாளர்களின் மீதும் தேர்தல் ஆணையம் என்னென்ன வழிமுறைகளை வைத்திருக்கிறது?

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான குரேஷி, ``இதுபோன்ற விதிமீறல்களின்போது தேர்தல் ஆணையத்தால் அதைக் கண்டிக்க மட்டுமே முடிகிறது. நீதிமன்றத்தால் பலமுறை வலியுறுத்தப்பட்டும், இதுபோன்ற நடவடிக்கையைப் பிரதமரே மேற்கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று தெரிவித்திருக்கிறார்.

``நாட்டின் விடுதலைப் போரை, தென் இந்தியாவை, இந்திய மக்களின் சமத்துவத்தை, பன்முகக் கலாசாரத்தை பிரதமர் மோடி அவமானப்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் அவர் வகித்துவரும் பதவிக்கும் களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தேர்தல் ஆணையம் பிரதமரின் மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சர்ஜ்வாலா.

முக்கிய அரசியல் விமர்சகர்கள் பலரும், முன்னாள் தூதரும், strategic affairs நிபுணருமான கே.சி.சிங்கும் வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்த பிறகும், பிரதமர் மோடி இன்னும் அவரது மதவாதப் பிரிவினைப் பிரசாரத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை. அந்தப் பேச்சை பாதகம் இல்லாத தொனியில் மாற்றிச் சமாளிக்கும் வேலையை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்துகொண்டிருக்கிறார்.