Published:Updated:

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி... கடுப்பில் கம்யூனிஸ்ட்... காங்கிரஸுக்கு சிக்கல்!

ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் கூட்டணி வைக்க முயன்று, அது தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் ராகுல், வயநாடு தொகுதியைப் போட்டியிடுவதற்காகத் தேர்ந்தெடுத்தது இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி... கடுப்பில் கம்யூனிஸ்ட்... காங்கிரஸுக்கு சிக்கல்!
வயநாடு தொகுதியில் ராகுல் போட்டி... கடுப்பில் கம்யூனிஸ்ட்... காங்கிரஸுக்கு சிக்கல்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து, அக்கட்சியினரிடையே உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசத்தின் அரசியல் பார்வையும் இத்தொகுதி மீது விழுந்துள்ளது. ராகுல் காந்தியின் இந்தப் போட்டியால், சில அரசியல் கணக்குகள் மாறும் என்பதால், பா.ஜ.க உற்சாகம் அடைந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளோ கடும் அதிருப்தியில் உள்ளன. 

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது, ராகுல் குடும்பத்தினர் ஆண்டாண்டுக் காலமாகப் போட்டியிட்டுவரும் தொகுதி. இந்த நிலையில், அமேதியில் மட்டுமல்லாது வயநாடு மக்களவைத் தொகுதியிலும் ராகுல் போட்டியிடுவார் என்ற அறிவிப்பை, காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்டார். இந்த அறிவிப்பு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கத்தில் வெளியிடப்பட்டது என்றே சொல்லலாம். கேரளா உட்பட தென்மாநிலங்களில் 130 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது, அந்தக் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொகுதி கண்ணோட்டம்

கேரள மாநிலத்தின் பிரதான விவசாயப் பகுதிகளில் வயநாடும் ஒன்று. வடக்குக் கேரளாவில் அமைந்துள்ள வயநாடு தொகுதி, கர்நாடகா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளைத் தொட்டபடி அமைந்துள்ளது. இந்தத் தொகுதியில் 3.86 சதவிகித மக்களே நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். மற்றவர்கள் பெரும்பாலும் விவசாயத்தைச் சார்ந்தே உள்ளனர் என்பதால், கிராமப்புறங்களுக்கே உண்டான சிரமங்களும் துன்பங்களும் இவர்களுக்கும் உண்டு. மிளகு மற்றும் காபி ஆகியவைதான் இங்கு பிரதானமாகப் பயிரிடப்படுகின்றன. 2018-ம் ஆண்டு வெள்ளத்தில் பயிர்கள் வெகுவாக சேதமடைந்ததால், அதன் பாதிப்பு கடுமையாக இருந்தது. 

இந்த நிலையில், ராகுல் இங்கே போட்டியிடுவது தென்னிந்தியாவில் காங்கிரஸ் வலுவாகத் தடம் பதிப்பதற்கான ஓர் உற்சாகத்தைக் கொடுக்கும் எனக் கேரள காங்கிரஸ் கருதுகிறது. வயநாடு, கோழிகோடு மற்றும் மலப்புரம் என மூன்று வருவாய் மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில், 7 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. தொகுதி சீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர், 2009-ம் ஆண்டு இந்தத் தொகுதி ஏற்படுத்தப்பட்டது. 

வயநாடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர், இத்தொகுதியிலிருந்து முதலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குச் சென்றது கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஐ.ஷாநவாஸ். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.ரஹ்மத்துல்லாவை சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதற்குப் பின்னர், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் ஷாநவாஸ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவரைத் தோற்கடித்தபோதிலும், வாக்குகள் வித்தியாசம் 20,000-ஆக குறைந்துபோனது. 

கடந்த நவம்பர் மாதம் ஷாநவாஸ் மரணமடைந்ததால் அத்தொகுதி காலியாகவே இருந்தது. இந்த நிலையில்தான், வயநாடு காங்கிரஸ் கட்சிக்குப் பாதுகாப்பான தொகுதியாகக் கருதப்பட்டதால், இங்கே போட்டியிடக் கட்சிக்குள்ளேயே பலத்தப் போட்டி நிலவிவந்தது. ஆனால், ராகுல் இங்கு போட்டியிட உள்ளார் என்ற அறிவிப்பு, உள்ளூர் அளவில் மட்டுமல்லாது, மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வயநாடு மற்றும் அதைச் சுற்றியுள்ள தொகுதிகளிலும், குறிப்பாக மலபார் பகுதியில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த முடியும் என அக்கட்சியினர் கருதுகிறார்கள். 

வெற்றி வாய்ப்பு

இத்தொகுதியில் பிரதான போட்டி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது சாரி ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் என்றாலும், 2014 தேர்தலில் இத்தொகுதியில் 80,752 வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க-வும் 10,684 வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சியும்தான் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வித்தியாசம் குறைவதற்கு  காரணமாக அமைந்தன. 

இந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ராகுலை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் பி.பி.சுனீர் மற்றும் பா.ஜ.க-வின் கூட்டணிக்கட்சியான பாரத் தர்மா ஜனசேனா தலைவர் துஷார் வெல்லப்பள்ளி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

வயநாடு தொகுதியைப் பொறுத்தவரை இந்துக்கள் சுமார் 50% உள்ளனர். இஸ்லாமியர்கள் 28.65 சதவிகிதமும், கிறிஸ்தவர்கள் 21 சதவிகிதத்துக்கும் அதிகமாகவும் உள்ளனர் என்பதால், ராகுலின் வெற்றி உறுதி என்றே கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். ஏனெனில், இந்த இரு சமுதாய வாக்குகளும் கடந்த காலங்களிலும் காங்கிரஸ் கட்சி அல்லது அதன் கூட்டணிக்கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாகவே விழுந்துள்ளன. 

அதே சமயம், கடந்த 2014 தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 20,000-மாகக் குறைந்துபோன நிலையில், `இந்தத் தொகுதி குறித்துக் கட்சி மேலிடத்துக்குத் தவறான தகவலைக் கொடுத்து ராகுலை இங்கே போட்டியிட வைத்துவிட்டார்கள்’ எனக் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக உள்ளூர் கட்சியினர் முணுமுணுத்து வருகின்றனர். ராகுலின் வெற்றி வாய்ப்புக்கு குந்தகம் இல்லை என்றாலும், வாக்கு வித்தியாசத்தை அதிகப்படுத்திக் காண்பிக்க வேண்டும் என அவர்கள் கருதுவதால், போட்டி கடுமையாக இருக்கும். 

பா.ஜ.க-வுக்கு ஏன்  உற்சாகம்?

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது காங்கிரஸ் வட்டாரத்தில் மட்டுமல்லாது, பா.ஜ.க வட்டாரத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகிழ்ச்சிக்குக் காரணம், இரண்டே இரண்டு விஷயங்கள்தான். ஒன்று, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாகச் செல்வாக்கு உள்ள கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான். பா.ஜ.க-வுக்குப் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இந்த நிலையில், ராகுல் இத்தொகுதியில் போட்டியிடுவதால் அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துக் காட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் வேலை பார்ப்பார்கள். இதன் காரணமாகக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையேயான மோதல் தீவிரமாகும். இதனால், பா.ஜ.க மீதான இந்துத்வா முத்திரை பிரசார வேகம் மட்டுப்படும். இரண்டாவது, அமேதி தொகுதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில்தான், ராகுல் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்று பா.ஜ.க பிரசாரம் செய்யவும் இது உதவும். 

கூடவே, வயநாட்டில் தற்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது, இதுநாள் வரை மோடிக்கு எதிராக இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இதர மதச்சார்பற்ற சக்திகள் மேற்கொண்ட பிரசாரத்தினால் ஏற்பட்ட பலனை அறுவடை செய்ய முடியாத நிலையை ஏற்படுத்திவிடும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் கூட்டணி வைக்க முயன்று, அது தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் ராகுல், வயநாடு தொகுதியைத் தேர்ந்தெடுத்தது இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதலை, மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

"கேரளாவில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.எஸ் நீண்ட நாள்களாக முயற்சி மேற்கொண்டு வந்தது. தற்போது ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் அதைச் செய்து முடித்துவிட்டார்கள். அப்படியே ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட வேண்டும் என விரும்பியிருந்தால், பா.ஜ.க-வுக்குச் செல்வாக்கு உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வைத்திருக்கலாம். இதன் மூலம், பா.ஜ.க மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பிரசாரம் மக்களிடம் இன்னும் வலுவாகச் சென்றடைந்திருக்கும்" என வருத்தப்படுகிறார்கள் கேரள காங்கிரஸின் மூத்த தலைவர்கள். 

கடுப்பில் கம்யூனிஸ்ட்  

இந்த நிலையில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது,  கம்யூனிஸ்ட் கட்சியினரைக்  கடுப்படைய வைத்துள்ளது. `ஒட்டுமொத்த தென்னிந்திய காங்கிரஸுக்கும் புத்துயிர் அளிக்கவே ராகுலை வயநாடு தொகுதியில் போட்டியிட வைத்துள்ளோம்’ என அக்கட்சி நிர்வாகிகள் கூறும் வாதத்தை கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை. ``வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவது என்பது கேரள மாநிலத்தை ஆளும் இடதுசாரி கட்சிகள் மீதான தாக்குதல்தானே தவிர, பா.ஜ.க-வுக்கு எதிரானதல்ல" என்று முதலமைச்சர் பினராய் விஜயனே குற்றம் சாட்டியுள்ளார். இது, டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே இணக்கமான உறவு காணப்பட்டாலும் கேரளாவில் இரு தரப்பினருக்கும் இடையே காணப்படும் கசப்பு உணர்வை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. 

இந்தக் கசப்பு உணர்வு தேர்தலின்போது அதிகரித்து பெரிய அளவில் மோதல் ஏற்பட்டால், அது தேர்தலுக்குப் பின்னர் ராகுலுக்குச் சிக்கலை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கர்நாடகாவைத் தவிர்த்து, பிற மாநிலங்களில் பா.ஜ.க-வுக்குப் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இப்படியான ஒரு சூழலில் கேரளாவில் கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக மோதுவது, ஒருவேளை பா.ஜ.க-வுக்குச் சாதகமானதாகவும் அமைந்துவிட வாய்ப்புண்டு.

மேலும், தேர்தலுக்குப் பின்னர் ஒருவேளை பாஜக-வும் ஆட்சியமைக்க முடியாமல், காங்கிரஸ் கட்சியும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற முடியாமல் போனால், அப்போது ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையைப் பெற, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவையும் கேட்டுப்பெற வேண்டிய நிலை உருவாகலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கேரளாவை மனதில் வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியை இடதுசாரிகள் பழிவாங்கவும், ராகுல் பிரதமராவதற்கு ஆதரவு தெரிவிக்க முடியாது என மறுத்து, வேறு ஒரு மாநில அளவிலான மதச்சார்பற்ற தலைவரைப் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கவும் வாய்ப்புள்ளது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது நிச்சயம் ராகுலுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பின்னடைவாகத்தான் அமையும்!