Published:Updated:

`வாங்க மாப்பிள்ளை; பைபாஸ் எம்.பி; பா.ஜ.க பல்டி!’ - தம்பிதுரையைக் கரைசேர்க்குமா கரூர்?

`வாங்க மாப்பிள்ளை; பைபாஸ் எம்.பி; பா.ஜ.க பல்டி!’ - தம்பிதுரையைக் கரைசேர்க்குமா கரூர்?
`வாங்க மாப்பிள்ளை; பைபாஸ் எம்.பி; பா.ஜ.க பல்டி!’ - தம்பிதுரையைக் கரைசேர்க்குமா கரூர்?

தம்பிதுரை போட்டியிடும் கரூர் தொகுதியில் `கை சின்னத்தின் ஆதிக்கத்தை இலை முறியடிக்குமா?' என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும். 

நட்சத்திர வேட்பாளர்: மு.தம்பிதுரை (கரூர்) 

வேட்பாளர் அறிமுகம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிந்தகம்பள்ளி என்ற கிராமத்தில் 1947-ம் வருடம், மார்ச் 15-ம் தேதி பிறந்தார். விவசாயக் குடும்பம் என்றாலும், பொருளாதாரத்தில் எம்.ஏ., எம்.பில்., எம்.லிட்., பிஹெச்.டி எனப் பட்டங்களை வாரிக்குவித்தவர். கரூர் நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்தாலும், இந்தத் தொகுதிக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது. அரசியல் பிரதானமாக இருந்தாலும் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் ஒருகாலத்தில் அவருடைய லட்சியமாக இருந்தது. கல்லூரிக் காலங்களில் தி.மு.க-வின் இளைஞர் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வந்திருக்கிறார். 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் தம்பிதுரையின் பங்களிப்பு இருந்தது. பட்டப் படிப்பை நிறைவு செய்ததும் தன்னுடைய லட்சியமான கல்லூரி ஆசிரியர் பணியில் 1980-ம் ஆண்டு வாக்கில் இணைந்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் இஸ்லாமியக் கல்லூரியில்தான் தனது முதல் பணியைத் தொடங்கினார். ஆனால், எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பு, அவரை அரசியலுக்குள் கொண்டு வந்தது. 

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு படித்த வேட்பாளர் ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். அந்த வகையில், 1984-ம் ஆண்டு தேர்தலில் முன்னிறுத்தப்பட்டவர்தான் தம்பிதுரை. அந்தத் தேர்தலில் ஜெயித்த கையோடு மக்களவைத் துணை சபாநாயகர் பதவி அவரைத் தேடி வந்தது. அந்த வகையில் தம்பிதுரையின் அரசியலுக்குப் பிள்ளையார் சுழி போட்டது சைதை துரைசாமி. இந்தக் காட்சிகள் அரங்கேறுவதற்கு முன்னதாக, சைதை துரைசாமியின் சொந்த ஊரான தும்பிவாடியைச் சேர்ந்த மருத்துவர் பானுமதி என்பவரைத் தம்பிதுரைக்குத் திருமணம் செய்து வைத்தார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள், தம்பிதுரையின் எதிர்ப்பையும் மீறி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் மகனைத் திருமணம் செய்துகொண்டார். 

ஏற்கெனவே அவர் போட்டியிட்டிருந்ததால், அதைப் பற்றிய சுருக்கமான விவரம்:

சைதை துரைசாமியின் வழிகாட்டுதலோடு 1989-ம் ஆண்டு கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து 1996-ம் ஆண்டு மீண்டும் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கினார். இந்த முறை தோற்றுப்போனார். ஆனாலும் விடாமுயற்சியாக 1998-ம் ஆண்டு தேர்தலில் கரூர் தொகுதியில் நின்று இரண்டாவது வெற்றியைப் பெற்றார். இதன் காரணமாக, மத்திய சட்டத்துறை இணை அமைச்சராகப் பதவியேற்றார். தம்பிதுரையின் அரசியல் எதிரியான கே.பி.முனுசாமியின் திருவிளையாடலால், 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. இதன் பிறகும் சோர்ந்து போகாமல் 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் சீட் வாங்கி ஜெயித்தார். அந்த ஐந்து வருடமும் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதன் பிறகு, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தொடர்ந்து எம்.பி-யாகப் பணியாற்றி வந்தார். இரண்டாவது முறையாக துணை சபாநாயகர் பதவி அவரைத் தேடி வந்தது. 

சிட்டிங் எம்.பி-யாகத் தம்பிதுரையின் செயல்பாடுகள்:

கரூரில் இந்த முறை வென்றால், அது தம்பிதுரையின் ஹாட்ரிக் வெற்றியாகும். ஆனால், தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கான எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. பேருந்துகளுக்கு பாடி கட்டுதல், கொசுவலை உற்பத்தி, டெக்ஸ்டைல் ஏற்றுமதி என ஏராளமான தொழில்கள் கரூரில் உள்ளன. 'நான் ஜெயித்தால், ஆறு மாதத்துக்கு ஒருமுறை தொழில் அதிபர்களை அழைத்துப் பேசுவேன்' என்று வாக்குறுதி கொடுத்தார். அமராவதி ஆற்றில் சாயப்பட்டறைகளின் கழிவுநீர் கலந்து, விவசாயம் பாழ்பட்டுவிட்டது. நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. இதற்குத் தீர்வாக சாயப்பூங்கா அமைப்பதாக உத்தரவாதம் கொடுத்தார். தொகுதி முழுக்க நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க பாடுபடுவதாகவும் வாக்காளர்களுக்கு நம்பிக்கையை அளித்தார். ஆனால், அத்தனையும் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே உள்ளன எனக் கொந்தளிக்கின்றனர் மக்கள். ஊருக்கு ஊர் பேரூந்து நிறுத்தங்களையும் நாடக மேடைகளையும் மட்டுமே கட்டி வைத்திருப்பதே தம்பிதுரையின் ஆகப் பெரும் சாதனையாக இருக்கிறது. 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தம்பிதுரைக்கு ஜெயலலிதா சீட் வழங்கவில்லை. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை தம்பிதுரைக்காக விட்டுக்கொடுத்தது காங்கிரஸ். இந்தத் தேர்தலில் சைதை துரைசாமியின் வழிகாட்டுதலில் வென்றார். 

2. கரூரில் பெண் எடுத்தவர் என்பதால், மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அ.தி.மு.க-வினர் பலரும், 'வாங்க கரூர் மாப்பிள்ளை' என்றுதான் தம்பிதுரையைச் செல்லமாக அழைக்கின்றனர். இதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், 'தொகுதி மக்களை சந்திக்க மாட்டார்' எனப் பொருள்படும்படி, 'பைபாஸ் எம்.பி' என அழைக்கிறார்கள். 

3. எந்தக் கெட்டப்பழக்கங்களும் இல்லாதவர். அசைவம் சாப்பிடுவார். காலையில் நான்கு இட்லி அல்லது இரண்டு தோசை. பகல் 11 மணிபோல் ஒரு முழு ஆப்பிள். சாதம் குறைவாகவும் காய்கறிகள் அதிகமாகவும் உணவில் எடுத்துக் கொள்வார். அதேபோல், மாலையில் ஒரு முழு ஆப்பிளைச் சாப்பிடுவார்; இரவு 3 இட்லி. இதுதான் தம்பிதுரையின் அன்றாட மெனு.

4. நேரம் தவறாமையை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். 8 மணிக்கு கிளம்ப வேண்டிய நிகழ்ச்சி என்றால், 7.30 மணிக்கே தயார் நிலையில் இருப்பார். 

5. மனைவி மீது அதீத மரியாதை வைத்திருப்பவர். 'என் மனைவி பானுமதியால்தான் இத்தனை உயரத்தையும் அடைந்தேன்' என்று அடிக்கடி சொல்வார். மனைவி சென்டிமென்ட்காகத்தான் கரூரில் தொடர்ச்சியாகப் போட்டியிடுகிறார். 

டாப் 3 சர்ச்சைகள்: 

1. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது, மத்திய அரசின் உதவியோடு பைபாஸ் வழியில் முதல்வராக முயன்றவர் என்ற குற்றச்சாட்டு. 

2. 'எங்களுக்கு என்ன தலையெழுத்தா, பா.ஜ.க-வைத் தோளில் சுமப்பதற்கு' எனக் கூட்டணி அமையும் வரையில் விமர்சனம் செய்தவர், பின்னர், `பா.ஜ.க-வோடு சேர்ந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும்' எனப் பல்டியடித்தது. 

3. 'இ.பி.எஸ். ஓ.பி.எஸ்-ஸைக்கூட சமாளித்துவிடலாம், பல விவகாரங்களில் தனி ரூட்டில் பயணிக்கிறார் தம்பிதுரை' என லோக்கல் அ.தி.மு.க-வினரே புலம்புவது.

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்: 

தம்பிதுரையை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் ஜோதிமணி. பெண் வேட்பாளர்; திருமணம் செய்துகொள்ளாமல், பொதுவாழ்க்கையின் நேர்மையைக் கடைப்பிடித்து வருபவர். பழகுவதற்கும் எளிமையானவர் என்பதோடு மட்டுமல்லாமல் கூட்டணியும் அவருக்குப் ப்ளஸ் 

கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கென்று சொல்லிக்கொள்ளும்படி வாக்குவங்கி இல்லாதது, உட்கட்சி மோதல்கள், பணம் செலவு செய்ய வழி இல்லாதது போன்றவை மைனஸ். இருப்பினும், இளைஞர்களையும் பெண்களையும் பிரசாரத்தில் கவர்ந்து வருகிறார் ஜோதிமணி. 

அ.ம.மு.க வேட்பாளராக மாவட்டச் செயலாளர் பி.எஸ்.என்.தங்கவேல் களமிறங்கியிருக்கிறார். தொகுதி முழுக்க நிரம்பியிருக்கும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர், எளிமையானவர் என்பது இவரது பலம். கரூர் அ.ம.மு.க-வைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த செந்தில்பாலாஜி, தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் முடங்கிக் கிடக்கிறது அ.ம.மு.க. 

ஜோதிமணியின் பிரசார வியூகமும் தம்பிதுரை மீதான தொகுதி மக்களின் அதிருப்தியும் மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பும் அ.தி.மு.க-வுக்கான வாக்குவங்கியில் சரிவை ஏற்படுத்தியுள்ளன. இதை ஈடுகட்டுவதற்காக, `ஓட்டுக்கு 1,000 ரூபாயையாவது கொடுத்து வெற்றி பெற வேண்டும்' என தம்பிதுரைக்காகத் தீயாய் வேலை பார்த்து வருகின்றனர் அ.தி.மு.க-வினர். `கை சின்னத்தின் ஆதிக்கத்தை இலை முறியடிக்குமா?' என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும். 

அடுத்த கட்டுரைக்கு