Published:Updated:

கார் பேட்டரி வெடிப்பு; தினம் தினம் அபசகுனம்! - அ.தி.மு.க.வினால் மெர்சலாகும் மயிலாடுதுறை

தோழமை கட்சிகளுக்கே தொடர்ந்து மயிலாடுதுறை தொகுதியை ஒதுக்கியதால், கடந்த இரண்டு முறையும் அ.தி.மு.க. வென்றது. இந்த முறை இங்கே தி.மு.க. - அ.தி.மு.க. நேரடி போட்டி!

கார் பேட்டரி வெடிப்பு; தினம் தினம் அபசகுனம்! - அ.தி.மு.க.வினால் மெர்சலாகும் மயிலாடுதுறை
கார் பேட்டரி வெடிப்பு; தினம் தினம் அபசகுனம்! - அ.தி.மு.க.வினால் மெர்சலாகும் மயிலாடுதுறை

தொகுதி: மயிலாடுதுறை

பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தொகுதியைப் பற்றிய சுருக்கமான வரலாறு:

கோயில் மாநகரம் என்றழைக்கப்படும் கும்பகோணம், சிவ, வைணவ ஸ்தலங்கள் நிறைந்த தொகுதி. நவக்கிரக கோயில்கள், ஆன்மிகச் சுற்றுலாதளங்கள் என பழைமையான தொகுதியாக இருக்கிறது. இதனால் இப்பகுதி மக்களுக்குத் தெய்வ நம்பிக்கை அதிகம். தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களின் சந்திப்பாக விளங்குகிறது. தமிழகத்தின் பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது சிறிய நகரமாய் இருந்தாலும் உலக அளவில் அறியப்பட்டுள்ள தொகுதியாக மயிலாடுதுறை இருக்கிறது. வடக்கின் கும்பமேளா போல் கும்பகோணத்தின் மகாமகம் மிகப் பிரசித்தி பெற்றது. 

ஒரு சுவாரஸ்ய கதை: 

ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் எதிரெதிர் கட்சிகளில் இருப்பதால் தேர்தல் காலங்களில் பெரிய அளவில் சண்டைகள் ஏற்படாத தொகுதி. இன்னமும் சில குக்கிராமங்களில் ஊர்க் கட்டுப்பாடாக ஒரே வேட்பாளருக்கு மட்டும் ரகசியமாய் வாக்களிக்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர். 

மணிசங்கர் அய்யர் இத்தொகுதியின் எம்.பியாக இருந்தபோது ஷூ மார்ட் உரிமையாளர் ராம.சிதம்பரம் அவருக்கு உதவியாளராக இருந்தார். அப்போது ஒரு மாதகால விடுப்பில் சிதம்பரம் சென்றபோது, தனது கடைசியில் வேலை பார்த்த ராஜ்குமாரை உதவியாளர் பணிக்காக அனுப்பியிருந்தார். அந்த ஒரே மாதத்தில் மணிசங்கர் அய்யர் மனதில் இடம்பிடித்துவிட்டார் ராஜ்குமார். இதன் பலனாக மயிலாடுதுறை தொகுதியின் எம்.எல்.ஏவாகி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலர், மாவட்டத் தலைவர் எனக் கோடீஸ்வரர் பட்டியலில் சேர்ந்துவிட்டார். அவரை அறிமுகப்படுத்திய ராம.சிதம்பரம் அதே ஷூ மார்ட் கடையைக் கவனித்து வருகிறார். 

அரசியல் வரலாறு:

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் கட்டுப்பாட்டில் இந்தத் தொகுதி நீண்டகாலமாக இருந்து வந்தது. தோழமை கட்சிகளுக்கே தொடர்ந்து இந்தத் தொகுதியை ஒதுக்கியதால், கடந்த இரண்டு முறையும் அ.தி.மு.க. வென்றது. இந்த முறை உள்ளூர் தி.மு.க வேட்பாளருக்கும் வெளியூர் அ.தி.மு.க. வேட்பாளருக்கும் நேரடி போட்டி என்பதால் களநிலவரம் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது. 

நீண்டகால பிரச்னை:

காவிரி கரையோரத்தின் நகரமாக இருந்தாலும் குறிப்பிடும்படியான தொழில் வளங்கள் இல்லை. விவசாயமே பிரதான தொழிலாக இருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறை நீண்டகாலமாக இருந்து வருகிறது. 

கொள்ளிடத்தில் இருந்து சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் குடிதண்ணீர் செல்கிறது. ஆனால் கொள்ளிடக் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடு தொடர்கதையாகி வருகிறது. காவிரி நீர் கிடைக்காத போதும் நிலத்தடி நீர் ஆதாரம் கைகொடுப்பதால் இன்றும் முப்போகம் விளையக்கூடிய பகுதிகள் அதிகம். ஆனால் அரசே குவாரிகள் அமைத்து மணல் அள்ளி வருவதால் நிலத்தடி நீருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தொழில்வளம் என்பதே சுத்தமாக இல்லை. தலைஞாயிறு பகுதியில் இருந்த ஒரே ஒரு சர்க்கரை ஆலைதான், மிகப் பெரிய தொழிற்சாலை. ஆசியாவிலேயே நம்பர் ஒன்னாக இருந்த இந்த ஆலையை தனியார் தொழிற்சாலைகளின் நலனுக்காக மெள்ள மெள்ள மூடிவிட்டதால் அதுவும் முடங்கிவிட்டது. இதனால் கரும்பு விவசாயிகள் கடன் உட்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கான நிலுவை தொகை பெற்று தருவதாக தொகுதிக்குள் வந்துபோகும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உறுதி சொல்லிவிட்டுச் செல்வது மட்டுமே நடக்கிறது. இதில், ஹைட்ரோகார்பன் திட்டமும் சேர்ந்துவிட்டதால், கொந்தளிப்பில் உள்ளனர் விவசாயிகள். 

கும்பகோண மகாமக குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும்படி செய்தார் மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி. திட்டம் அமலுக்கு வந்த ஆண்டு மட்டுமே குளத்தில் தண்ணீர் இருந்தது. அதன்பிறகு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஆன்மிக தளங்கள் உள்ள அதிகம் உள்ள பகுதி. இதனால் பக்தர்களின் வசதிக்காக தனிப்பேருந்து கொண்டுவரப்படும் என்ற திட்டமும் வாக்குறுதியாக மட்டுமே உள்ளது. 

கட்சிகளின் செல்வாக்கு:

10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நேரடியான மோதலைச் சந்திக்கிறது. தி.மு.க சார்பில் ராமலிங்கமும் அ.தி.மு.க சார்பில் ஆசை மணியும் களமிறங்கியுள்ளனர். தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகமாக இருப்பதால் பிரதானக் கட்சிகளின் சார்பிலும் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே சேர்ந்தவர்களாகவே களமிறக்கப்பட்டுள்ளனர். இது ஒரு சாதகமாக இருந்தாலும், மக்களின் பிரச்னைகளை வாக்குறுதிகளாக முன்னிறுத்துகிறது தி.மு.க. திமுக வேட்பாளருக்கு சொந்தத் தொகுதி என்பது பிளஸ். 

சிட்டிங் அ.தி.மு.க எம்.பி பாரதி மோகன் இந்தத் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அண்மையில் அளித்த பேட்டியிலும், ``என் சக்திக்கு முடிந்ததை செய்து இருக்கிறேன். தொகுதிக்குள் நான் செல்லவில்லை" எனக் கூறியுள்ளார். இந்த வெளிப்படையான பேட்டி, பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதவிர, உட்கட்சி அரசியலும் அவருக்குப் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அ.ம.மு.க வேட்பாளரின் பிரசாரத்தால், அ.தி.மு.கவின் அடிப்படை வாக்குகளுகளும் சிதறக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தி.மு.க வேட்பாளர் உற்சாகமாக வலம் வருகிறார். 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

தொகுதி மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தி தி.மு.க வேட்பாளர் ராமலிங்கம் பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க வேட்பாளர் ஆசைமணி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கேள்வி கேட்பதால், லோக்கல் எம்.எல்.ஏ-க்கள் அவருடன் செல்லவே தயக்கம் காட்டுகின்றனர். அவர்களை அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் தயக்கம் காட்டுகிறார். இதனால் அ.தி.மு.க பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மனுத்தாக்கல் செய்ததில் ஏற்பட்ட தாமதம், பிரசாரத்தின் போது காரின் பேட்டரி வெடித்தது உள்ளிட்டவற்றை அபசகுனமாக கருதுகிறார்கள். தினம்தோறும் எதாவது அசம்பாவிதம் நடப்பதால், பெரும் குழப்பத்தில் இருக்கிறார் ஆசைமணி. 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள் 

1. ஹைட்ரோகார்பன் திட்டம்
2. தண்ணீர் பிரச்னை
3. தரங்கம்பாடி மீன் துறைமுகம்
4. காவிரி பிரச்னை
5. மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அமைத்தல்

படங்கள்: பிரசன்னா

தண்ணீர் பிரச்னை, மணல் அள்ளுதல், கரும்பு விவசாயிகளின் கண்ணீர் என காவிரிக் கரையோர மக்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. `நாங்கள் தீர்த்து வைப்போம்' என்ற வெற்று வாக்குறுதிகளைக் கேட்டுக் கேட்டு அவர்களுக்கும் பழகிப் போய்விட்டது. இருப்பினும், சிட்டிங் எம்.பி மீதான எதிர்ப்பு, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் ஏற்பட்டுள்ள அதிருப்தி போன்றவை தி.மு.க வேட்பாளருக்குச் சாதகமாக உள்ளன. இரட்டை இலையா...சூரியனா...என்ற மோதலில், சூரிய வெளிச்சம் படர்ந்து கொண்டிருப்பதாக உற்சாகப்படுகின்றனர் உடன்பிறப்புகள்.