Published:Updated:

கே.பி.முனுசாமி Vs செல்லக்குமார்..! - கிருஷ்ணகிரியில் யார் யானை... யார் எறும்பு?

கிருஷ்ணகிரியில் கூட்டணிக் கட்சிகளின் பலம் பிளஸ் வன்னியர் சமூக வாக்குகள் ஆகியவற்றை அ.தி.மு.க அதிகம் நம்பியுள்ளது. சிறுபான்மையினரின் வாக்குகளை அதிகம் நம்பியுள்ளது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி.

கே.பி.முனுசாமி Vs செல்லக்குமார்..!  - கிருஷ்ணகிரியில் யார் யானை... யார் எறும்பு?
கே.பி.முனுசாமி Vs செல்லக்குமார்..! - கிருஷ்ணகிரியில் யார் யானை... யார் எறும்பு?

தொகுதி: கிருஷ்ணகிரி 

கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது

கிருஷ்ணகிரியின் கதை:

கி.பி. 15-ம் நூற்றாண்டில், மைசூர் அரச வம்சத்தைச் சேர்ந்த பெண்ணை ஜெகதேவிராயன் என்பவர் மணந்துகொண்டதால், ஜெகதேவிராயனுக்கு மைசூர் அரச வம்சம் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில், ஒரு பகுதியையும் போர்ப் படைகளையும் அளித்து, ஆட்சிசெய்யும் உரிமை வழங்கியது. அந்த நிலப்பகுதியில் குடியேறிய ஜெகதேவிராயன், ஜெகதேவி என்னும் ஊரில் கோட்டை அமைத்து ஆட்சிசெய்யத் தொடங்கினார். தனது திறமையான ஆட்சி நிர்வாகத்தால் பாராமகால் என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்களை அமைத்து, ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்துகிறார். அவரது ஆட்சியின் பெருமைகளை இன்றளவும் தாங்கி நிற்கின்றன வரலாற்றுச் சின்னங்கள். அப்படி ஜெகதேவிராயன் ஆட்சிசெய்த நிலப்பகுதியே இன்றைய கிருஷ்ணகிரி.

தொகுதி பற்றிய குட்டிக் கதை:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, இந்திரா காந்தி மற்றும் காமராஜர் தலைமையில் இரண்டாகப் பிளவுபட்ட நேரம், 1971-ம் ஆண்டு தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார் இந்திரா காந்தி. அப்போது, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில், தீர்த்தகிரி கவுண்டர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆனால், இந்திரா காந்திக்கு தமிழகத்தில் தகுதி வாய்ந்த சி.சுப்பிரமணியத்தை மத்திய அமைச்சர் ஆக்க வேண்டும் என விரும்பினார். தனது விருப்பத்தை கருணாநிதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, கிருஷ்ணகிரியில் வெற்றிபெற்ற தீர்த்தகிரி கவுண்டர், தலைமையின் உத்தரவை அடுத்து, எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கிருஷ்ணகிரியில் போட்டியிட்டார் சி.எஸ். இதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த காமராஜரின் ஆதரவாளர்கள், `நாம் போட்டியிட்டால் வெற்றிபெறலாம்' என ஆலோசனை தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த காமராஜர், `இந்திரா காந்திடம் நல்ல மதிப்புப் பெற்றவராக இருக்கிறார் சி.சுப்ரமணியம். அவர் வெற்றிபெற்று மத்திய அமைச்சர் ஆவார். இதனால், தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும். அதை நாம் கெடுக்க வேண்டுமா?' எனக் கோபத்தைக் காட்டினார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற சி.எஸ், ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டையை அமைத்தார். கிருஷ்ணகிரி வளம்பெறத் தொடங்கியதும் இந்த காலகட்டத்தில்தான். 

தொகுதியின் அரசியல் வரலாறு:

தமிழக அரசியல் வரலாற்றில், கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு என தனிச் சிறப்புகள் உண்டு. தமிழக முதல்வராக இருந்த மூதறிஞர் ராஜாஜியின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி, தொரப்பள்ளி.

1991-ல் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று, முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா. மீண்டும் அதே பர்கூர் சட்டமன்றத் தொகுதியில், 1996-ல் போட்டியிட்டு தி.மு.க வேட்பாளர் இ.ஜி.சுகவனத்திடம் தோல்வியைத் தழுவினார் ஜெயலலிதா. இந்தத் தோல்வியை, `யானை காதில் புகுந்த கட்டெறும்பு' என வர்ணித்தார் கருணாநிதி. 

காங்கிரஸ் மூத்த தலைவரான வாழப்பாடி ராமமூர்த்தி, தொடர்ச்சியாக நான்கு முறை கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நன்றியைத் தொகுதி மக்களிடமும் தொடர்ந்து காட்டிவந்தார். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராமமூர்த்தி, அறுவைசிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது, `நான் இறக்க நேரிட்டால், எனது உடலை எரித்து, அந்தச் சாம்பலை கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள பையூர் வேளாண்மைப் பண்ணையில் தெளித்துவிடுங்கள்' எனக் குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

தலையாய பிரச்னை: 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதிகளாக அறியப்பட்டுள்ள பர்கூர் மற்றும் ஊத்தங்கரை பகுதிகளுக்கு, தென்பெண்ணை ஆற்றின் கிளைக் கால்வாய்களை நீட்டிப்பு செய்து, 70 ஏரிகளை இணைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை.

10 ஆண்டுகளுக்கும் மேலாக, கிருஷ்ணகிரி டு திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை 66 சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் திருவண்ணாமலை, மேல்மருவத்தூர், பாண்டிச்சேரி செல்லும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு சிரமத்தைச் சந்திக்கின்றனர்.

சட்டமன்றத்துக்கு ஒரு கலைக் கல்லூரி என்பது குறைந்தபட்ச திட்டமாக இருந்தபோதும், ஊத்தங்கரை மற்றும் பர்கூரில் அரசு கலைக் கல்லூரி ஏற்படுத்தப்படவில்லை. 

நீண்டகால பிரச்னை: 

கிருஷ்ணகிரி மக்களின் 77 ஆண்டு கால கனவுத் திட்டமாக இருப்பது, ஜோலார்பேட்டை டு ஓசூர் ரயில்வே திட்டம். ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி வரை 1905-ம் ஆண்டு முதல் 1936-ம் ஆண்டு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டுவந்துள்ளது. 1942-ம் ஆண்டுக்குப் பிறகு, முற்றிலுமாக சேவை நிறுத்தப்பட்டது. இந்தத் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு அவசியமான ஒன்று. தொழில் நகரமான ஓசூரில் இந்த திட்டம் நிறைவேறினால், போக்குவரத்துக்காக செலவிடப்படும் பெரும் தொகை, சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் பெட்ரோல், டீசல் எனப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்திவருகின்றன. 

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமாரும் அ.தி.மு.க சார்பில் கே.பி.முனுசாமியும் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளர் கணேஷ்குமாரும் களமிறங்கியுள்ளனர். 

அ.தி.மு.க-வில் சீனியர் லீடரான கே.பி.முனுசாமி தேர்தல் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். தொகுதியின் பலம் பலவீனத்தையும் கைக்குள் வைத்திருப்பவர். கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை அவரே திட்டமிட்டுச் செயல்படுத்திவருகிறார். தம்பிதுரை ஆதரவு ஒன்றியச் செயலாளர்களை ஓரம் கட்டிவிட்டு, தனது ஆதரவாளர்கள் மூலமாகத் தேர்தல் பணிகளைச் செய்துவருகிறார். கே.பி.முனுசாமியை ஒரு தலைவராக வன்னிய மக்கள் பார்க்கிறார்கள். இங்கு, அ.தி.மு.க-வைவிடவும், கூட்டணிக் கட்சியான பா.ம.க-வினர்தான் சுறுசுறுப்புடன் தேர்தல் வேலைபார்த்துவருகிறார்கள். இது, அ.தி.மு.க வேட்பாளர் முனுசாமிக்கு கூடுதல் ப்ளஸ்.

ராகுல் காந்தியின் நேரடி செல்வாக்கில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியின் சீட்டைப் பெற்றார், காங்கிரஸ் செல்லக்குமார். இது, உள்ளூரில் சீட் பெற முடியாத காங்கிரஸாருக்கும் தி.மு.க நிர்வாகிகளுக்கும் சற்று வருத்தத்தை அளித்துள்ளது. தொழில் நகரமான ஓசூரில் ஜிஎஸ்டி பாதிப்பு, அரசு ஊழியர்கள் ஆதரவு, தொழிற்சங்க நிர்வாகிகள் ஆதரவு, விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, 100 நாள் வேலைவாய்ப்பு, சிறுபான்மையினர் வாக்குகள் என காங்கிரஸின் கை ஓங்கி நிற்பது ப்ளஸ். ஆனால், மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு வாக்குகளை காங்கிரஸ் பக்கம் கொண்டுவருவதற்கு கூட்டணிக் கட்சிகள் எந்த ஆர்வத்தைக் காட்டாமல் இருப்பது செல்லக்குமாருக்கு பெரிய மைனஸ். 

அதேபோல, அ.ம.மு.க வேட்பாளரான கணேஷ்குமார், வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனாலும், கட்சியில் உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுவதற்குத் தீவிரம்காட்டிவருகிறார். அ.தி.மு.க வாக்குகளை இவர் ஓரளவுக்குப் பிரிப்பது கே.பி.முனுசாமிக்கு மைனஸ். கார் பந்தய வீரரான மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காருண்யா, சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர். தற்போது பெங்களூருவில் வசித்துவருகிறார். கணிசமான வாக்குகளைப் பெற்றுக் காட்ட வேண்டும் எனத் தீர்மானமாகத் தேர்தல் பணிகளைச் செய்துவருகிறார். மறுபுறம், நாம் தமிழர் கட்சி வேட்பாளரான மதுசூதனனும் களத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்

1. கிருஷ்ணகிரி தொகுதியை வளப்படுத்தும் நீர் மேலாண்மை திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகள்.

2. அதிக அளவு வாக்கு வங்கியைக் கொண்டுள்ள அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளின் கூட்டணி.

3. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு 

4. உள்ளூர் வெளியூர் வேட்பாளர் என்ற முன்னுரிமை.

5. பண விநியோகம் 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

அ.தி.மு.க வேட்பாளர் கே.பி.முனுசாமி, `கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜோலார்பேட்டை டு ஓசூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றித் தருவேன். பெங்களூரு டு அத்திப்பள்ளி வரை செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டம், ஓசூர் வரை நீட்டிப்பு செய்து நிறைவேற்றித் தருவேன். ஊத்தங்கரை மக்களின் தென்பெண்ணை ஆற்றுக் கிளை கால்வாயை நீட்டிப்புசெய்து 70 ஏரிகளுடன் இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவேன்' என வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். 

காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரோ, `ஒரு வருடத்துக்குள் ஜோலார்பேட்டை டு ஓசூர் ரயில்வே திட்டத்தை நிறைவேற்றித் தருவேன் இல்லை என்றால், எனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வேன்' என ஆவேசத்தைக் காட்டிவருகிறார். 

அ.ம.மு.க வேட்பாளர் கணேஷ்குமாரோ, `எங்கள் கட்சி ஆதரவுடன்தான் மத்தியில் ஆட்சி அமையும். ஒரே வருடத்தில் ஜோலார்பேட்டை டு ஓசூர் ரயில் திட்டத்தை நிறைவேற்றித் தருவேன்' என்கிறார். 

கூட்டணிக் கட்சிகளின் பலம் பிளஸ் வன்னியர் சமூக வாக்குகள் ஆகியவற்றை அ.தி.மு.க அதிகம் நம்பியுள்ளது. சிறுபான்மையினரின் வாக்குகளை அதிகம் நம்பியுள்ளது காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி. `பா.ஜ.க, அ.தி.மு.க கட்சிகளின்மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி தங்களுக்கு சாதகமாக அமையும்' என தி.மு.க நினைக்கிறது. `தேர்தலில் வெற்றிபெறப்போவது இலையா...கையா?' என்பதற்கான விடை விரைவில் தெரிந்துவிடும்.