Published:Updated:

பாலியல் பிரளயம், தேயிலை-தென்னை விவகாரம்..!  அ.தி.மு.கவுக்கு இரட்டை செக்! பொள்ளாச்சி கள நிலவரம்

இரு கட்சிகளிலும் உட்கட்சி புகைச்சல் இருந்தாலும் பாலியல் வழக்கு விவகாரத்தின் மூலமாக, எந்தளவுக்கு வாக்குகளாக அறுவடை செய்யப் போகிறார்கள் என்பதுதான் தி.மு.க முன்நிற்கும் சவால். பொள்ளாச்சி தங்களின் எஃகுக் கோட்டை என்பதை நிறுவும் சவால் அ.தி.மு.க-வுக்கு. யாருடைய சவால் வெல்லப்போகிறது?

பாலியல் பிரளயம், தேயிலை-தென்னை விவகாரம்..!  அ.தி.மு.கவுக்கு இரட்டை செக்! பொள்ளாச்சி கள நிலவரம்
பாலியல் பிரளயம், தேயிலை-தென்னை விவகாரம்..!  அ.தி.மு.கவுக்கு இரட்டை செக்! பொள்ளாச்சி கள நிலவரம்

பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

சுருக்கமான வரலாறு!

கொஞ்சும் கொங்கு தமிழுக்கும் இனிக்கும் இளநீருக்கும் பெயர் பெற்றது பொள்ளாச்சி. இதமான சூழல், திரும்பிய பக்கமெல்லாம் தென்னை மரங்கள் நிறைந்திருப்பதால் சினிமா படப்பிடிப்புகளுக்குப் பேர் போன ஊர். கொங்கு மண்டலத்தின் கோடம்பாக்கம் என்ற பெயரும் பொள்ளாச்சிக்கு உண்டு. தென்னை விவசாயிகள், தேயிலைத் தொழிலாளர்கள், சிறு குறு தொழிலாளர்களை அதிகளவு கொண்ட தொகுதி இது. ஆழியாறு அணை, குரங்கருவி, கோவை குற்றலாம் எனச் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்றது. குறிப்பாக, `ஏழைகளின் ஸ்விட்சர்லாந்து' என்றழைக்கப்படுகிறது வால்பாறை.  

அரசியல் வரலாறு!

அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை. பொள்ளாச்சியில் 7 முறை வெற்றி வாகை சூடியிருக்கிறது அ.தி.மு.க. இங்கு தி.மு.க 3 முறையும் ம.தி.மு.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. கவுண்டர் இன மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி. தனித்தொகுதியாக இருந்த பொள்ளாச்சி, 2009-ம் ஆண்டு பொதுத் தொகுதியாக மாறியது. பொதுவாகவே, மண்ணின் மைந்தர்கள்தான் இங்கு அதிகம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 

தற்போதைய தலையாய பிரச்னை?

2. வால்பாறையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தாதது.

3. தேயிலை தோட்டத் தொழிலாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாதது.

4. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அமையாதது

நீண்டகால பிரச்னைகள்: 

பொள்ளாச்சியில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை குறைவாக இருப்பதாக வேதனையில் உள்ளனர் விவசாயிகள். அதேபோல, கொப்பரைக்கு நியாய விலை கிடைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. 

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

சிட்டிங் எம்.பி மகேந்திரனுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு எதிர்ப்புகள் இல்லை. அணுகுவதில் எளிமை என்பது அவரது பெரிய பிளஸ். ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஐந்து சட்டமன்ற தொகுதிகள் அ.தி.மு.க வசமே உள்ளன. அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இருப்பது அ.தி.மு.க-வின் மற்றொரு பிளஸ். கொங்கு மண்டலத்தில் முழுமையான வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என முடிவெடுத்துக் களமிறங்கியுள்ளனர் அ.தி.முக-வினர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவால் இங்கு மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு காரணமாக, அ.தி.மு.க-வுக்கு இறங்குமுகமாகவும், தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரத்துக்கு சற்று ஏறுமுகமாகவும் இருக்கிறது. தி.மு.க-வினர் பிரதானமாகக் கையில் எடுத்திருப்பதே பாலியல் வழக்கைத்தான். 

தி.மு.க-வில் இருந்து பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேயிலை தொழிலாளர்கள் பிரச்னையை சரியாக கையாளாதது, அ.தி.மு.க திருப்பூர் புறநகர் மா.செ. பதவியைப் அதிருப்தியில் இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் போன்ற விஷயங்கள் எல்லாம் தி.மு.க-வுக்கு பிளஸ். அதே நேரத்தில், உட்கட்சி பூசலை சமாளிப்பதே தி.மு.க-வுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் களமிறங்கும் மூகாம்பிகா, பொள்ளாச்சி பாலியல் வழக்கை வெளியில் கொண்டு வந்தவர்களில் ஒருவர். முதல் தலைமுறை வாக்காளர்களைக் குறிவைத்துப் பிரசாரம் செய்து வருகிறார். தவிர, அ.ம.மு.க வேட்பாளர் முத்துக்குமார் அ.தி.மு.க வாக்குகளை பிரித்தாலும், அதனால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை. 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள் 

1. பொள்ளாச்சி பாலியல் வழக்கு 
2. தென்னை விவசாயிகள் பிரச்னை 
3. தேயிலை விவசாயிகளின் குமுறல்
4. பணப்பட்டுவாடா
5. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம், தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் தி.மு.க உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் அதனை மையப்படுத்தியே பிரசாரம் செய்து வருகின்றன. `பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்' என்பதே தி.மு.க, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் பிரசாரமாக இருக்கிறது. `தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்' என்பதை பிரதானமாக முன்னிறுத்துகிறது தி.மு.க. அ.தி.மு.கவின் சிட்டிங் எம்.பி மகேந்திரனோ, தங்கள் ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். 

மகேந்திரனுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு எதிர்ப்புகள் இல்லாதது அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ். உட்கட்சி பூசல் அவருக்கான மைனஸாக இருக்கிறது. தி.மு.க-விலும் உட்கட்சி புகைச்சல் இருந்தாலும் பாலியல் வழக்கு விவகாரத்தின் மூலமாக, எந்தளவுக்கு வாக்குகளாக அறுவடை செய்யப் போகிறார்கள் என்பதுதான் தி.மு.க முன்நிற்கும் சவாலாக இருக்கிறது. இதில் கோட்டை விட்டுவிட்டால், அ.தி.மு.கவின் எஃகு கோட்டை பொள்ளாச்சி என்பது மீண்டும் நிறுவப்பட்டுவிடும் என்பதே களநிலவரமாக இருக்கிறது.