Election bannerElection banner
Published:Updated:

மதுரையில் அழகருக்கும் அரசியல் கட்சிகளுக்கும்தான் போட்டி! - இது புது களேபரம்

மதுரையில் அழகருக்கும் அரசியல் கட்சிகளுக்கும்தான் போட்டி! - இது புது களேபரம்
மதுரையில் அழகருக்கும் அரசியல் கட்சிகளுக்கும்தான் போட்டி! - இது புது களேபரம்

சாதி, மத பாகுபாடு இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேரும் சித்திரைத் திருவிழா அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுபோன்ற கொண்டாட்ட காலங்களில் மதுரை மக்கள் தங்கள் மகிழ்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பதிவாகும் வாக்குகளின் சதவிகிதத்தை அழகர்தான் தீர்மானிப்பாரா?

தொகுதி: மதுரை

மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தொகுதி பற்றிய சுருக்கமான வரலாறு:

தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகர், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தொன்மையான நகரம், தூங்கா நகரம் என மதுரையில் அடையாளங்கள் கணக்கில் அடங்காதது. தொகுதியில் மதுரை மாநகரம் மட்டும் 75 சதவிகிதம் பரவியிருக்கிறது. பாண்டியர்கள் காலத்துக்குப்பின், மொகலாயர்கள், நாயக்கர்கள் ஆகியோர் ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர்களின் முக்கியத் தலைநகரமாக விளங்கியது மதுரை. மகாத்மா காந்தி அரை ஆடை உடுத்தக் காரணமானதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாகக் கால் ஊன்றியதும் மதுரையில்தான். பல்வேறுபட்ட சமூகத்தினரும் பூர்விக தமிழ் மொழியுடன், சௌராஷ்டிரா, உருது, தெலுங்கு மொழி பேசுவோரும் கலந்து வாழும் நகரம். தினந்தோறும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படும். சித்திரை திருவிழாதான் மதுரையின் ஹைலைட். லட்சக்கணக்கில் மக்கள் கூடும்  சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சங்களான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்றவை ஸ்பெஷல். கொளுத்தும் வெயில் என்றும் பாராமல், மக்கள் அலையலையாக சித்திரை திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். 

தமிழகத்தை அதிரவைத்த சம்பவங்கள் மட்டும் அல்ல, அரசியலைத் தீர்மானிக்கிற நகரமாகவும் மதுரை உள்ளது. கலைகளையும் அரசியலையும் அலசி ஆராய்கின்ற தெளிவான இவர்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதிலும் வல்லவர்கள். புதிதாகக் கட்சி தொடங்குகிறவர்கள், தங்களுடைய முதல் நிகழ்ச்சியை மதுரையில் நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றளவும் உண்டு. அதுபோல், மதுரை ரசிகர்கள் தங்களை அங்கீகரித்தால் போதும் என விரும்புகிற கலைஞர்களும் இருக்கிறார்கள். தமிழர் மரபுக்குச் சான்றாக விளங்கும் மதுரை, உணவுக்கும் பிரபலம். 

தொகுதி பற்றிய குட்டிக் கதை ஒன்று:

1950-ல் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது மதுரையில்தான். 1972-ல் தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டதும் அதனைக் கண்டித்து மதுரையில் மிகப்பெரிய கூட்டம் நடத்திய மதுரை ரசிகர்கள், அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கும் காரணமாக இருந்தார்கள். அதனால்தான் அரசியலில் எந்த முடிவு எடுத்தாலும் அதை மதுரையில் வைத்து எடுக்கும் பழக்கத்துக்கு ஆளானார் எம்.ஜி.ஆர். 

அரசியல் வரலாறு:

ஆரம்ப காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சியே இங்கு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை 8 முறை வென்றுள்ளது. எளிமைக்குப் பெயர் போன கக்கன் இங்கிருந்துதான் எம்.பி ஆனார். அதுபோல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இங்கு தவிர்க்க முடியாத சக்தி. மதுரை தொகுதியில் நான்கு முறை கம்யூனிஸ்டுகள் வென்றுள்ளனர். கே.டி.கே.தங்கமணி, பி.ராமமூர்த்தி, பி.மோகன் ஆகியோர் தொகுதிக்கு சிறப்பு சேர்த்தவர்கள். காங்கிரஸ் மற்றும் த.மா.கா சார்பில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு. சுப்ரமணியன் சுவாமி ஒருமுறை வெற்றி பெற்று ஒரே ஒரு வருடம் மட்டும் எம்.பியாக இருந்தார். தி.மு.க சார்பில் அழகிரியும் அ.தி.மு.க சார்பில் கோபாலகிருஷ்ணனும் எம்.பி பதவியை அலங்கரித்தனர். தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே இங்கு அதிகமுறை வெற்றி பெற்றுள்ளனர். மாநிலக்கட்சியான தி.மு.கவும் அ.தி.மு.கவும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை அ.தி.மு.கவை நேரடியாக எதிர்கொள்கிறது தி.மு.க கூட்டணியில் உள்ள சி.பி.எம் கட்சி. 

தலையாய பிரச்னை: 

1. குடிநீர் பிரச்னை - மூல வைகை வறண்டு விட்டது. முல்லைப் பெரியாறிலிருந்து திறந்து விடும் தண்ணீர் விவசாயத்துக்கே போதாமல் இருக்கிறது.

2. தொழில் வாய்ப்புகள் அதிகம் இல்லை. வேலைக்காக இடம்பெயரும் மக்கள்.

3. முக்கிய நகரங்களை இணைப்பதற்குப் போதிய ரயில் வசதிகள் இல்லை. இரட்டை ரயில் பாதை வேலை முடிவடையவில்லை. அதுபோல், பன்னாட்டு விமானங்கள் அதிகம் வருவதில்லை. 

நீண்டகால பிரச்னைகள்: 

மதுரை மக்களின் பிரதானப் பிரச்னையே தண்ணீர் தான். தட்டுப்பாடு இல்லாமல் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை

கட்சிகளின் செல்வாக்கு: 

மதுரை தொகுதியைப் பொருத்தவரையில் அ.தி.மு.க வலுவாக உள்ளது. அதற்கு அடுத்தநிலையில் செல்வாக்குடன் தி.மு.க வலம் வருகிறது. இடதுசாரிகளின் உள்கட்டமைப்பு பலத்துடன் இருப்பது சி.பி.எம் கட்சிக்குப் பிளஸ். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுக்கு பெரிய அளவுக்கு செல்வாக்கு இல்லை. அ.தி.மு.க வாக்குகளை சில பகுதிகளில் அ.ம.மு.க பிரிப்பது ராஜ்சத்யனுக்கு மைனஸ். சௌராஷ்ட்ரா உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மொழிவழி சிறுபான்மை மக்களும் இஸ்லாமிய, கிறிஸ்துவ சமூகங்களும் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் நிற்பது சி.பி.எம் வேட்பாளருக்குக் கூடுதல் பிளஸ். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள்

1. பணப்பட்டுவாடா 
2. சாதி 
3. மொழி 
4. வேட்பாளர் 
5. சித்திரைத் திருவிழா

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

"மதுரை நகருக்கு நவீன வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருவேன், சென்னையைப் போன்று அனைத்து வசதிகளும் நிறைந்த நகரமாக மதுரையை மாற்றி, உலக அளவில் சுற்றுலா நகரமாக மாற்றுவேன்" என வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யன். மேலும், "குடும்பத்தில் ஒருவருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும், இன்னொருவருக்கு தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதுதான் தன்னுடைய முக்கிய நோக்கம்" என்கிறார். "சி.பி.எம் வென்றால், சொந்தக் கூட்டணியில் கூட இணக்கமாக இருக்க மாட்டார்கள். அதனால், தொகுதிக்கு எந்த திட்டமும் வராது" எனப் பிரசாரம் செய்து வருகிறது அ.தி.மு.க. 

சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனோ, "மதுரையின் வரலாறு கெடாமல் வளர்ச்சியுடன் நவீனப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கம். மதுரையின் பாரம்பரிய தொழில்களை பாதுகாக்கவும் ரப்பர் தொழிற்பூங்கா கொண்டு வரவும் கோயில் நகரத்தை தொழில் நகரமாகவும் நவீன நகரமாகவும் மாற்றுவோம்" என நம்பிக்கையோடு வாக்கு சேகரித்து வருகிறார். 

சாதி, மத பாகுபாடு இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேரும் சித்திரைத் திருவிழா அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுபோன்ற கொண்டாட்ட காலங்களில் மதுரை மக்கள் தங்கள் மகிழ்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களுக்கு தேர்தல் என்பது இரண்டாம் பட்சம்தான். சித்திரை திருவிழாவால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். பதிவாகும் வாக்குகளின் சதவிகிதத்தை அழகர்தான் தீர்மானிப்பார். அந்த வாக்குகளில் வெற்றியைப் பறிப்பது வேட்பாளர்களின் சாமர்த்தியம். வாக்குப்பதிவு தேதியைத் தள்ளி வைப்பதற்கும் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் முழுமையான அளவில் வாக்குப்பதிவு நடக்குமா என்ற சந்தேகம் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், யாருக்கு சாதகம்... யாருக்குப் பாதகம் என்பதற்கான விடை, வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.

 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு