Published:Updated:

`ஒரு வேட்பாளர் இருக்கிறார், அவர் சேராத கட்சியே இல்லை!'- யாரைச் சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

`ஒரு வேட்பாளர் இருக்கிறார், அவர் சேராத கட்சியே இல்லை!'- யாரைச் சொல்கிறார் டி.டி.வி.தினகரன்
`ஒரு வேட்பாளர் இருக்கிறார், அவர் சேராத கட்சியே இல்லை!'- யாரைச் சொல்கிறார் டி.டி.வி.தினகரன்

``காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் பா.ஜ.க-வுடன் கூட்டணி பேசினார்'' என்று அ.ம.மு.க  துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார். திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், வடக்கு மாவட்டச் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் சகிதமாக திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருச்சி காந்தி மார்க்கெட், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட டி.டி.வி.தினகரன், அவருக்காகக் காத்திருந்த மக்களிடையே பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தினகரன், ``நாடு முழுவதும் உள்ள மக்கள் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, லேடியா மோடியா என்ற முழக்கத்தை முன் வைத்தார். அதை நம்பி தமிழக மக்கள் வாக்களித்தனர். அதனால்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதுகூட அவரை நேரில் வந்து பிரதமர் மோடி பார்க்க வரவில்லை. அவர் இறந்த பிறகு மோடி அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய நினைத்தார். அதற்கேற்ப முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மோடிக்கு அடிமையாகிவிட்டனர். அதனால்தான் அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும், ஆட்சி அதிகார மிரட்டலுக்குப் பயப்படாமல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அளிக்கவும், மீத்தேன் உள்ளிட்ட வளங்களை அழிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய மோடி அரசு துடிக்கிறது. ஜெயலலிதாவை விமர்சித்தவர்களையும், தங்களைக் கேவலமாக விமர்சித்தவர்களுடனும் அ.தி.மு.க., வெட்கமே இல்லாமல் கூட்டணி வைத்து இந்தத் தேர்தலை சந்திக்கிறது. கடந்த 2011 முதல் தொடர் தோல்வியைச் சந்தித்து வரும் தி.மு.க., இந்தத் தேர்தலில் எங்கள் அணியில் பிரதமர் வேட்பாளர் இருக்கிறார் என்று கூறுகிறது. இந்த முழக்கத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளே அதுகுறித்து வாய் திறக்கவில்லை. இந்துமதத்தைப் பற்றி கண்டபடி பேசிவிட்டு, இப்போது திடீரென நான் இந்து மதத்துக்கு எதிரி இல்லை என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். அரசியலுக்கு மத சாதி துவேஷங்கள் தேவையில்லை.

தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமானை வெற்றி பெறச் செய்ய வேண்டும். சாருபாலா தொண்டைமான் திருச்சி மாநகர மேயராக இருந்தபோது, கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த திருச்சி மாநகராட்சியை மீட்டு, பல்வேறு நலத்திட்டங்களையும், மாநகராட்சிக்கு 40 கோடி நிதி ஆதாரத்தையும் சேர்த்து வைத்தவர், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்து திருச்சி மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்தவர், இதேபோல் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ பாவம் விஜயகாந்த் கட்சியிலிருந்து ஒருவரைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து திருச்சியில் நிற்க வைத்துள்ளார். அவருக்குத் திருச்சி தொகுதியைப் பற்றி எதுவுமே தெரியாது. ஜெயலலிதாவை பெயரைச் சொல்லி அழைத்தவர் பிரேமலதா விஜயகாந்த். ஆனால், இப்போது அவரோடு இவர்கள் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு கூட்டணியில் ஒரு வேட்பாளர் இருக்கிறார். அவர் சேராத கட்சியே கிடையாது. அவர் ஜெயலலிதாவை எப்படி எல்லாம் எதிர்த்து அரசியல் செய்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பா.ஜ.க.வுக்குச் சென்று பார்த்தார். பின்னர் காங்கிரஸ் வந்துவிட்டார். தற்போது காங்கிரஸில் சீட்டு வாங்கி நிற்கிறார். ஒருவேளை சீட் தராமல் இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சென்றிருப்பார். அவர் நம்மை அங்கீகரிக்கப்படாத கட்சி என்று கூறுகிறார். இவர்கள் யார் நம்மை அங்கீகரிக்க மக்கள்தான் அங்கீகரிக்க வேண்டும். திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக்கூடாது என்று வியாபாரிகள் மார்க்கெட் முன்னேற்றக் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாங்கள் வெற்றிபெற்ற பிறகு, காந்தி மார்க்கெட்டை மேம்படுத்தித் தருவோமே தவிர காந்தி மார்க்கெட் இருக்கிற இடத்தை விட்டு அகற்ற மாட்டோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு முன்பு பா.ஜ.க-வையும் கூட்டணிக்காகக் கணக்குப் போட்டு வைத்திருந்தார்.

தி.மு.க., தன்னிடமிருந்த முஸ்லிம், கிறிஸ்துவர்கள் வாக்கு வங்கியை இழந்துவிட்டது. டெல்டா மாவட்டங்களில் போட்டியிட தைரியம் இல்லாத தி.மு.க., தற்போது திருச்சி, கரூர், பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் போட்டியிடாமல் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிவிட்டார்கள். ஏனென்றால் தி.மு.க-வுக்கு தேர்தலில் நிற்க பயம். தமிழக இளைஞர்கள் எல்லாம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கிறார்கள். இந்தத் தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும், குக்கர் சின்னம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தற்போது அதைவிடச் சிறந்த சின்னமான பரிசுப் பெட்டகம் கிடைத்துள்ளது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். தமிழகத்தைப் புறக்கணிக்கின்ற மோடியை ஓட ஓட விரட்ட நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசுப் பெட்டகம். 18 தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியின் மூலம் தமிழகத்தின் நலன் காக்கும் இந்தியப் பிரதமரை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள்” என்றார்.