Published:Updated:

கடவுளின் எருமை, 100 கிளாஸ் டீ, கைக்காசு கெடுபிடி! நீலகிரியின் நிஜ நிலவரம்

கடவுளின் எருமை, 100 கிளாஸ் டீ, கைக்காசு கெடுபிடி! நீலகிரியின் நிஜ நிலவரம்
கடவுளின் எருமை, 100 கிளாஸ் டீ, கைக்காசு கெடுபிடி! நீலகிரியின் நிஜ நிலவரம்

ராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. தேர்தல் ஆணையம், அ.தி.மு.க, உள்கட்சி பூசல், பணம் என அனைத்தையும் பக்குவமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க இருக்கிறது. அத்தனை சவால்களையும் தி.மு.க. கடந்து வெற்றி பெறுமா?

தொகுதி: நீலகிரி

கூடலூர், ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது 

சுருக்கமான வரலாறு:

நீலமலை தொகுதியின் எல்லை 4 மாவட்டங்களில் பரவியிருக்கிறது. நீலகிரியில் 3 சட்டமன்றத் தொகுதிகளும், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்திலிருந்து தலா ஒரு சட்டமன்றத் தொகுதியும் நீலகிரி தொகுதிக்குள் வருகின்றன. பழங்குடியின மக்கள், படுகர்கள், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு குறு தொழிலாளிகள் எனப் பல தரப்பினர் கலந்து கட்டி வாழ்ந்து வருகின்றனர். 2009-ம் ஆண்டு தனித்தொகுதியாக மாற்றப்பட்டது. அருந்ததியர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருக்கிறது. தோடர்கள், பணியர்கள், குறும்பர், பெட்ட குறும்பர், கசவர், கோத்தர், இருளர்கள் எனப் பல்வேறு பிரிவு மக்களின் சங்கமமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையால், இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்ட முதல் பகுதி நீலகிரிதான். முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என வளமான வனப்பரப்புகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறாள் நீலமலை அரசி. நூறு ஆண்டுகளைக் கடந்தும் இயங்கி வருகிறது மலை ரயில். தமிழக மக்களின் இதயத்துக்கு நெருக்கமான சுற்றுலாத் தலங்களில் நீலகிரிக்கு என்றுமே முதலிடம்.

குட்டிக் கதை ஒன்று:

பழங்குடிகள் இந்த மண்ணின் பூர்வகுடிகள். மிகப் பழைமையான பழங்குடி தோடர் இனம். `கடவுளால் முதன்முதலில் படைக்கப்பட்டது நாங்கள்தான். நாங்கள் எங்கிருந்தும் புலம் பெயர்ந்து வரவில்லை. எங்களின் வாழ்வாதாரத்துக்காக கடவுளால் உருவாக்கப்பட்ட மற்றொரு உயிரினம் எருமை' என்பது தோடர் மக்களின் பெருமை. எருமைதான் இவர்களது கால்நடை. அதுதான் அவர்களின் வாழ்வாதாரமும் கூட. எருமை மாடுகளை தங்களது வீட்டில் ஓர் உயிராகத்தான் பார்க்கின்றனர். அதிகக் கடவுள் பக்தி நிறைந்தவர்கள். ஆனால், இவர்கள் கடவுளாக வழிபடுவது இயற்கையைத்தான். பஞ்ச பூதங்களைத்தான் தினசரி வழிபடுகின்றனர். டிஜிட்டல் இந்தியாவிலும் தங்களின் அடையாளத்தை மாற்றிக் கொள்ளாதவர்கள் இன்னும் இங்கிருக்கிறார்கள். ஆனால், இந்த மலை மாவட்டத்தின் இயற்கைதான் வெகுவாகக் காயப்படுத்தப்பட்டு வருகிறது. 

அரசியல் வரலாறு:

காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத கோட்டை. இங்கு 8 முறை வெற்றி பெற்றுள்ள கட்சியும் காங்கிரஸ்தான். இதுதவிர பி.ஜே.பி, அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகள் அ.தி.மு.க வசம் உள்ளன. 2 தொகுதிகளில் மட்டும் தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். கூடலூர், குன்னூரில் தி.மு.க சற்று வலுவாக உள்ளது. ஊட்டி இன்றும் காங்கிரஸ் கோட்டைதான். அதேநேரம், பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவிநாசி தொகுதிகளில் அ.தி.மு.க வலுவாக இருக்கிறது. 2 ஜி வழக்கு காரணமாக, கடந்த தேர்தலில் ராசாவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பா.ஜ.க வேட்பாளராக நியமிக்கப்பட்ட குருமூர்த்தியும் வேட்புமனுவில் சொதப்பியதால் தேர்தல் களத்திலிருந்து வெளியேறினார். இதனால், அறிமுகம் இல்லாத வேட்பாளராக இருந்தாலும் அ.தி.மு.க. கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதும் கோபாலகிருஷ்ணனுக்கு பிளஸ்ஸாக அமைந்தது. 

தலையாய பிரச்னை?

செக்சன் 17 பிரிவு நிலப்பிரச்னைக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை. மிகப்பெரிய சுற்றுலாதலமாக இருப்பதால், ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், சுற்றுலா மையங்களில் `பார்க்கிங்’ பிரச்னை விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது உள்ளூர் மக்கள்தாம். இந்த மண்ணின் மைந்தர்களே வாகனங்களை நிறுத்துவதற்கு அலையும் அளவிற்கு இவர்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. குளிர்ப்பிரதேசமாக இருந்தாலும் குடிநீர்ப் பிரச்னை வாட்டியெடுத்து வருகிறது. அரசு புறம்போக்கு நிலங்கள், சதுப்பு நிலங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகம் இருக்கின்றன. இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் மூடப்பட்டது, அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உற்பத்தி குறைப்பு போன்றவை தலையாய பிரச்னைகள். 

நீண்டகால பிரச்னை? 

ஒரு கிலோ தேயிலையின் மூலம் 100 கிளாஸ் டீ போடலாம். ஒரு டீயை 10 ரூபாய்க்கு விற்கின்றனர். ஆனால், தேயிலை பறிக்கும் விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலைக்கு கிலோவுக்கு 5 ரூபாய்தான் கொடுக்கின்றனர். அரசு கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகளுக்கு மட்டும்தான் அரசுத் தரப்பிலிருந்து மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. 4 லட்சம் விவசாயிகளும் தேயிலையை நம்பித்தான் இருக்கின்றனர். இதனால், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி விட்டனர். தேயிலைத் தோட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. பசுந்தேயிலை விலை வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, மனித - வன உயிரின மோதல்கள், இயற்கைப் பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் ஏற்படும் சிக்கல்கள் எனப் பலவிதக் காரணங்களால் நீலகிரி மலைமாவட்டத்தின் மக்கள் தொகை குறைந்து கொண்டிருக்கிறது. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த முயற்சியையும் எந்த எம்.பி, எம்.எல்.ஏ–வும் எடுக்கவில்லை என்பது இங்குள்ள மக்களே அறியாத உண்மையாக இருக்கிறது.

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

அ.தி.மு.க -வில் களமிறங்கும் தியாகராஜன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இது அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய பிளஸ். அருந்ததியர் வேட்பாளர் இல்லாதது தி.மு.க-வுக்கு மைனஸ். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் இதன் மூலம் கிடைக்கும். உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், இரண்டு ராஜ்யசபா எம்.பிக்களான கே.ஆர்.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ் என சீனியர்கள் பலரும் தொகுதிக்குள் இருந்து பணி செய்வது, தியாகராஜனுக்கு பெரும் பலம். பணப்பட்டுவாடாவில் தி.மு.க-வைவிட, அ.தி.மு.க படுஸ்பீடாக இருக்கிறது. அதேநேரத்தில், 2 ஜி வழக்கிலிருந்து விடுதலையானது, எம்.பி-யாக இல்லாவிடினும் தொகுதிக்குள் அடிக்கடி தலை காட்டியது போன்றவை ராசாவுக்கு பிளஸ். அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் ஒருபக்கம், பரிச்சயம் இல்லாத வேட்பாளர், வாக்குகளைப் பிரிக்கும் அ.ம.மு.க போன்றவை ராசாவுக்குக் கூடுதல் பிளஸ். அ.ம.மு.க வேட்பாளராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமசாமி போட்டியிடுகிறார். அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க கணிசமாகப் பிரிக்கும் வாய்ப்பு இருப்பதால் தி.மு.க தரப்பு உற்சாகத்தில் தேர்தல் வேலை பார்க்கிறது. 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. அருந்ததியர் மற்றும் படுக மக்களின் வாக்குகள் 
2. தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் பிரச்னைகள்
3. உள் கட்சி பூசலை சமாளிப்பது
4. சுற்றுலா தலமாக இருந்தாலும் குடிநீர், பார்க்கிங் பிரச்னைகள் 
5. பணப்பட்டுவாடா

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

`வேட்பாளர் ஆ.ராசாதான்' எனத் தி.மு.க தலைமை அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டனர் உடன்பிறப்புகள். மூன்றாவது முறையாக நீலகிரியில் களம் காணும் அவர் 2 ஜி வழக்கிலிருந்து விடுதலையானதை முன்னிறுத்திப் பிரசாரம் செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் இதை பிரதானமாக்கி வாக்கு சேகரித்து வருகிறது தி.மு.க. இதுதவிர, 2009-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு மீட்புப் பணிகளில் தான் நேரடியாக களமிறங்கி வேலை செய்ததை பிரசாரத்தில் நினைவுபடுத்துகிறார் ஆ.ராசா. 

அ.தி.மு.க தரப்பிலோ, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியது, தொகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொண்டது போன்றவற்றை பிரசாரத்தில் முன்னிறுத்துகின்றனர். தவிர, தொகுதியில் பெரும்பான்மையாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதால் உற்சாகத்தோடு வலம் வருகிறார் தியாகராஜன். பொங்கல் பரிசு திட்டம், 2000 ரூபாய் திட்டம் ஆகியவை தொகுதியில் உள்ள 90 சதவிகிதம் மக்களுக்குச் சென்றடைந்துள்ளது. அ.ம.மு.க தரப்பில் சொல்லிக்கொள்ளும்படி பிரசார யுக்திகளை கையாளவில்லை. நீலகிரியில் சப் கலெக்டராக இருந்ததால் `தொகுதியின் நிலவரங்கள் எனக்குத் தெரியும்' எனக் கூறி ஓட்டு கேட்டு வருகிறார் அ.ம.மு.க வேட்பாளர். 

ராசா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. தேர்தல் ஆணையம், அ.தி.மு.க, உள்கட்சி பூசல், பணம் என அனைத்தையும் பக்குவமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க இருக்கிறது. இதில், எங்கு கோட்டை விட்டாலும் கடைசி நேர மேஜிக்கில் அ.தி.மு.க வெற்றி வாகை சூடவும் வாய்ப்புள்ளது.

 
அடுத்த கட்டுரைக்கு