Election bannerElection banner
Published:Updated:

வீரப்பன் வியூகம், துரைமுருகன் ரெய்டு, சோளிங்கர் நரசிம்மர், கோடி முதலீடு!  - அரக்கோணத்தை வெல்வாரா ஜெகத்ரட்சகன்?

வீரப்பன் வியூகம், துரைமுருகன் ரெய்டு, சோளிங்கர் நரசிம்மர், கோடி முதலீடு!  - அரக்கோணத்தை வெல்வாரா ஜெகத்ரட்சகன்?
வீரப்பன் வியூகம், துரைமுருகன் ரெய்டு, சோளிங்கர் நரசிம்மர், கோடி முதலீடு!  - அரக்கோணத்தை வெல்வாரா ஜெகத்ரட்சகன்?

அரக்கோணத்தில் சூரியன் உதிக்குமா... மாம்பழம் பழுக்குமா..?

நட்சத்திர வேட்பாளர்: 

எஸ்.ஜெகத்ரட்சகன், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி

வேட்பாளர் அறிமுகம்:

விழுப்புரம் மாவட்டம், கலிங்கமலை கிராமத்தில் 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில், சாமிக்கண்ணு என்பவருக்கு மகனாகப் பிறந்தார் ஜெகத்ரட்சகன். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். எம்.ஏ. பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். வணிகத்தில் முதலீடு, கல்வி நிறுவனங்கள், மதுபான ஆலை, நட்சத்திர விடுதிகள் என கரன்ஸிக்குப் பஞ்சமில்லாத பெரும் பணக்காரர். எம்.ஜி.ஆரின் நட்பு, ஜெகத்ரட்சகனை உயரத்துக்குக் கொண்டு சென்றது. 1980-ம் ஆண்டு எம்.எல்.ஏ., 1984-ல் எம்.பி. என அடுத்தடுத்த பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி தி.மு.க-வில் ஐக்கியமானார்.

1999 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் அரக்கோணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராகவும் இருந்தார். இதனிடையே, ‘வீர வன்னியர் பேரவை’ என்ற தனி இயக்கத்தைத் தொடங்கினார். பின்னர், அந்த இயக்கத்தை தி.மு.க-வில் இணைத்துவிட்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனால், ஏற்கெனவே இரண்டு முறை வெற்றிபெற்ற அரக்கோணம் தொகுதியையே மீண்டும் இந்த முறை தேர்ந்தெடுத்திருக்கிறார். தி.மு.க-வின் இரண்டாம்கட்டத் தலைவர்களில் ஒருவராக வலம்வரும் ஜெகத்ரட்சகனுக்கு அனுசுயா என்ற மனைவி, லட்சுமி நாராயணா என்ற மகனும் ஸ்ரீநிஷா என்ற மகளும் உள்ளனர். 

பணபலத்தாலும் வன்னியர்களின் வாக்குவங்கியாலும் இரண்டு முறை அரக்கோணம் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார் ஜெகத்ரட்சகன். வடமாவட்டங்களில் சாதியை மையமாகக் கொண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதிகளில் அரக்கோணமும் ஒன்று. சொந்த சமூக வாக்குகளை நம்பிக் களமிறங்கியிருக்கிறார். 

டாப் 5 சுவாரஸ்ய தகவல்கள்: 

1. ஆன்மிகவாதியான ஜெகத்தின் இஷ்ட தெய்வம் நரசிம்மர். கோயில்களுக்குச் சென்றால் சாமிக்குத் தன் கையால் தீபாராதனை காட்டுவது.

2. சொகுசு வாழ்க்கையை விரும்புவது.

3. ட்விட்டர், வாட்ஸ்-அப் பயன்படுத்துவதில்லை. சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக்கில் மட்டும் கணக்கு வைத்திருப்பது. 

4. கவிதையில் நகைச்சுவையைப் புகுத்துவது.

5. காரியத்தைச் செய்துமுடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வது. 

டாப் 3 சர்ச்சைகள்: 

1. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு.

2. சிங்கப்பூர் நிறுவனம் மூலம் இலங்கையில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ரூ. 27,000 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாகப் கூறப்படும் புகார். 

3. இரண்டு குற்ற வழக்குகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருப்பது.

சக வேட்பாளர்களின் ப்ளஸ், மைனஸ்: 

ஜெகத்ரட்சகனை எதிர்த்து, பா.ம.க வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி களமிறங்குகிறார். ஏற்கெனவே, ஒருமுறை அரக்கோணம் தொகுதியைப் பா.ம.க கைப்பற்றியிருப்பதைப் ப்ளஸ்ஸாகப் பார்க்கிறார் மூர்த்தி. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சேர்ந்திருப்பதால் வன்னியர் சமுதாயம் மத்தியில் அதிருப்தி தென்படுவதை மிகப்பெரிய மைனஸ்ஸாகப் பார்க்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அரக்கோணம் தொகுதியில் அடுத்தடுத்து பிரசாரம் செய்ததால் உற்சாகத்தில் இருக்கிறார் ஏ.கே.மூர்த்தி. 

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. பார்த்திபன், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தொகுதியில் இவருக்கு ஓரளவு செல்வாக்கு இருப்பதால், அ.தி.மு.க. வாக்குவங்கியைப் பிரித்துவிடுவார் என்பது ஜெகத்ரட்சகனின் வெற்றிக் கணக்கு. தி.மு.க பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ-வாக இருக்கும் காட்பாடியும் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருவதை கூடுதல் ப்ளஸ்ஸாகப் பார்க்கிறார் ஜெகத்ரட்சகன். 

அதே நேரத்தில், துரைமுருகனின் வீடு, கல்லூரியில் ரெய்டு நடத்திய வருமானவரித் துறையினர், துரைமுருகனின் ஆதரவாளர்கள் வீட்டிலிருந்து மூட்டை மூட்டையாகப் பணத்தைக் கைப்பற்றினர். இந்த விவகாரத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த்தின் பெயர் அடிபட்டாலும், அரக்கோணம் தொகுதிக்குள் பணம் சிக்கியிருப்பதால் ஜெகத்ரட்சகனுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. வருமானவரித் துறையினர், துரைமுருகன் வீட்டுக்கு ஜெகத்ரட்சகனை வரவழைத்துத் துருவித் துருவி விசாரணை நடத்தியதால் அவர் ஆடிப்போயிருக்கிறார்.

தனக்கு ரூ.115 கோடி சொத்து இருப்பதாக வேட்புமனுவில் கூறியிருக்கிறார். இலங்கையில் ரூ.27,000 கோடி முதலீடு செய்ததாகக் கூறப்படும் புகாரில் அது சம்பந்தமான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால் ஜெகத்ரட்சகனைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று பா.ம.க., புகார் மேல் புகார் கொடுத்து அலறவிடுகிறது. எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் இருப்பதற்காக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில், திருத்தணி முருகன் கோயில் உட்படத் தொகுதியில் உள்ள பிரசித்திபெற்ற பல்வேறு கோயில்களில் திருநீரைப் பூசிக்கொண்டு பயபக்தியுடன் தரிசனம் செய்து வருகிறார் ஜெகத்ரட்சகன். 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

2009 நாடாளுமன்றத் தேர்தலில், ‘சந்தன’ வீரப்பனின் மகள்கள் வித்யாராணி, விஜயலட்சுமி இருவரும் ஜெகத்ரட்சகனுக்கு நேரடியாக ஆதரவு கொடுத்து பிரசாரம் செய்தனர். அதில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் சகோதரி சின்னபொண்ணுவும் பங்கேற்றிருந்தனர். அந்தத் தேர்தலில் ஜெகத்ரட்சகன் பிரமாண்டமாக வெற்றிபெற்றார். இந்த முறையும், `வீரப்பனின் மனைவி, மகள்களைப் பிரசாரத்துக்கு அழைத்துவரலாமா?' என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு முறை வெற்றிபெற்றும், அரக்கோணம் தொகுதியில் எம்.பி. அலுவலகம் திறக்கப்படாததால் ஜெகத்ரட்சகன் மீதான அதிருப்தி நிலவுகிறது. `வெற்றி பெற்ற பிறகு, தொகுதிப் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை' எனப் பொதுமக்கள் கடிந்துகொள்வதால், ‘கரன்சி’ மழையைப் பொழியவைத்து, விழுந்து விழுந்து கும்பிடுகிறார் ஜெகத்ரட்சகன். 

அரக்கோணம் தொகுதிக்குச் செய்யப்போகும் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார் ஏ.கே.மூர்த்தி. வன்னிய மக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும், தொகுதியின் உண்மையான ஆக்சன் கிங்காக இருப்பேன் என நம்பிக்கைகளை பிரசாரத்தில் விதைக்கிறார் ஏ.கே.மூர்த்தி. எப்படியிருந்தாலும், அரக்கோணத்தில் சூரியன் உதிக்குமா... மாம்பழம் பழக்குமா என்பதற்கான விடை வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு