Election bannerElection banner
Published:Updated:

மதயானைக்கூட்டங்கள் இடையே 1000 கோடி யுத்தம்! தேனியின் கலவர நிலவரம்

மதயானைக்கூட்டங்கள் இடையே 1000 கோடி யுத்தம்! தேனியின் கலவர நிலவரம்
மதயானைக்கூட்டங்கள் இடையே 1000 கோடி யுத்தம்! தேனியின் கலவர நிலவரம்

தேனி தொகுதியில் கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

தொகுதி: தேனி 

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடிநாயக்கனூர், உசிலம்பட்டி உட்பட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தேனியின் சுருக்கமான வரலாறு:

மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ இயற்கையின் அரவணைப்பில் அமர்ந்திருக்கிறது தேனி. விவசாயப் பரப்புகளையும் மலைப்பகுதிகளையும் கொண்ட பகுதி. விவசாயப் பெருங்குடிகள் நிறைந்திருக்கும் ஊர். வைகை அணை, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சி ஆகியவை முக்கிய சுற்றுலாத் தளங்கள். வீரபாண்டி கிராமத்தில் அமைந்துள்ள கெளமாரியம்மன் கோயில், குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆகியவை பிரசித்தி பெற்ற திருகோயில்கள். தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயில் மிகவும் பழைமைவாய்ந்த கோயில். சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் சிறப்பே சித்ரா பௌர்ணமி விழாதான். தமிழக, கேரள பக்தர்கள் திரளாகப் பங்கேற்கும் திருவிழா இது. தேனி மாவட்டம் 1996-ம் ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. அப்போது உசிலம்பட்டியும் தேனி தொகுதிக்குள் இருந்தது. உசிலம்பட்டிவாசிகள், `எங்கள் மண் மதுரைதான். தேனியோடு இணைய மாட்டோம்' எனக் கூறி போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக, மதுரையோடு இணைந்தது உசிலம்பட்டி. ஆனால், தற்போது தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குள் அமைந்திருக்கிறது உசிலம்பட்டி.

அரசியல் வரலாறு:

தேனி தொகுதி அ.தி.மு.க வின் கோட்டை. தமிழகத்தின் 2 இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிய தொகுதி ஆண்டிபட்டி. 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் திடீர் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்றபடியே ஆண்டிபட்டியில் போட்டியிட்டார். மருத்துவமனையில் படுத்தபடியே 60,510 வாக்குகளைப் பெற்று அமோகமாக வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர். இந்த வெற்றியை அடுத்து மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வரானார். 

அதேபோல், டான்சி நில பேர வழக்கில் 2000-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம். இதன் காரணமாக அவர் 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. சட்டமன்றக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்படி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். `இது செல்லாது' என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் குவிந்தன. இதை விசாரித்த நீதிமன்றம், `ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது' எனத் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. வழக்குகளில் இருந்தும் ஜெயலலிதா விடுதலையானார். மீண்டும் ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணையில் அமர்ந்தார்.

தற்போதைய தலையாய பிரச்னை?

தேனி தொகுதியில் இதுவரை எந்த ஒரு புதிய தொழிற்சாலைகளும் உருவாக்கப்படவில்லை. இதன் காரணமாக வேலைவாய்ப்புகள் இல்லாத சூழல் நிலவுகிறது. பஞ்சு, பருத்தி, எண்ணெய் ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. உசிலம்பட்டியிலும் ஆண்டிபட்டியிலும் தண்ணீர்ப் பிரச்னையில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், மக்கள் தேர்தலையே புறக்கணிக்கும் முடிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். 

நீண்டகாலப் பிரச்னை?

மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் இருப்பது. தமிழகத்தில் ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வியாபாரத் தேவைக்காக போடி முதல் மதுரை வரை ரயில்பாதை அமைத்தனர். 1928-ம் ஆண்டு மதுரையிலிருந்து போடி வரை மீட்டர் கேஜ் பாதையில் ரயில்சேவை தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளையும் அகல ரயில் பாதையாக மாற்றியதால், இறுதியாகக் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை - போடி இடையே ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தண்டவாளங்களும் பிரித்து எடுக்கப்பட்டன. `மற்ற ஊர்களைப்போல தேனியிலும் அகல ரயில்பாதை வேலைகளை முடித்து சீக்கிரம் ரயில் விடுவார்கள்' என்று தேனி மாவட்ட மக்களும் செக்கானூரணி, உசிலம்பட்டியை உள்ளடக்கிய மதுரை மாவட்ட மக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இத்திட்டத்துக்காக, 280 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. `4 ஆண்டுகளில், பணிகள் முடியும்' என்றார்கள். இந்தப் பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. 

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

தேனி தொகுதி அ.தி.மு.கவின் கோட்டை என்றாலும் இந்த முறை அவ்வளவு எளிதில் வெற்றி கிடைத்துவிடாது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள், அ.தி.மு.க அதிருப்தி வாக்குகள் ஆகியவை அவருக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மண்ணின் மைந்தரான தங்க தமிழ்செல்வன் அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார். இவர் அ.தி.மு.க வாக்குகளை சரிபாதியாக பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. தவிர, தொகுதியில் தங்க தமிழ்செல்வனுக்கான செல்வாக்கு அதிகம். சமூக வாக்குகளும் இவருக்கு பிளஸ் என்பதால் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார். அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார், அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் பலத்துடன் களம் காண்கிறார். ரவீந்திரநாத்துக்கு தொகுதி மக்களிடம் அறிமுகம் தேவையில்லை. கட்சியில் மாவட்ட அளவிலான பதவியை வகித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி இவர் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். நாம் தமிழர்கட்சியின் சாகுல் ஹமீது நான்காம் இடத்திலும் மக்கள் நீதி மய்யத்தின் ராதாகிருஷ்ணன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். இந்த நிலவரங்கள், கடைசி நேரத்தில் மாறுதல்களை ஏற்படுத்தலாம். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1) பணப் பட்டுவாடா

2) வாக்குறுதிகள்

3) வேட்பாளர் மீதான நம்பிக்கை பிளஸ் நற்பெயர்

4) தொகுதியில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள்

5) மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

தேனி மக்களின் முக்கியப் பிரச்னைகளை மையப்படுத்தியே வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். `முல்லைப்பெரியாறு அணையை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துதல், கம்பத்தில் அரசு ஒயின் தொழிற்சாலை அமைத்தல், பெரியகுளத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைத்தல், மதுரை- போடி அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடித்தல், ஆண்டிபட்டி ஜவுளிப் பூங்கா, தேனியில் சுற்றுச்சாலை, திராட்சை பதப்படுத்தும் தொழிற்சாலை, விவசாயப் பொருள்கள், உணவுப் பொருள்கள் பதப்படுத்துதல் தொழிற்சாலை, சேமிப்புக் கிடங்கு அமைப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவது' ஆகிய வாக்குறுதிகளையே ரவீந்திரநாத்குமார், இளங்கோவன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்வைக்கின்றனர். 

இதில், ஓ.பன்னீர்செல்வம் மீதான விமர்சனங்களை பிரசாரத்தில் கூர்தீட்டி வருகிறார் தங்க.தமிழ்ச்செல்வன், "தனது மகன் ரவீந்திரநாத் வெற்றி பெறுவதற்காக 1000 கோடி செலவு செய்ய இருக்கிறார் பன்னீர். ஓ.பி.எஸ் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு எனக்கு ஓட்டு  போடுங்கள்" எனப் பிரசாரத்தை கலகலப்பூட்டி வருகிறார். ரவீந்திரநாத் குமாரோ, "வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்" என பன்ச் வசனங்களால் தூள் கிளப்புகிறார். கூட்டணிக் கட்சிகளின் பலம், வெளியூர்க்காரராக இருந்தாலும் நட்சத்திர வேட்பாளர் என்ற வகையில் தனி ஆவர்த்தனம் காட்டி வருகிறார் ஈ.வி.கே.எஸ். இதில், காங்கிரஸின் கை ஓங்கியிருப்பதாகக் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. கடைசி நேர பணவிநியோகத்தால் காட்சிகள் மாறலாம் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு