Election bannerElection banner
Published:Updated:

திரிசங்கு புதுச்சேரி.. பி.ஜே.பி. சங்கடம்... 25,000 பகோடாக்களில் ஆரம்பித்த கதை!

திரிசங்கு புதுச்சேரி.. பி.ஜே.பி. சங்கடம்... 25,000 பகோடாக்களில் ஆரம்பித்த கதை!
திரிசங்கு புதுச்சேரி.. பி.ஜே.பி. சங்கடம்... 25,000 பகோடாக்களில் ஆரம்பித்த கதை!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஆளுநர் கிரண் பேடி கொடுக்கும் நெருக்கடி, பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் என மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி மக்களிடம், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை பா.ஜ.க-வின் முகமாக நிறுத்துகிறது காங்கிரஸ் கட்சி. இந்த யுக்தி என்.ஆர்.காங்கிரஸுக்குப் பின்னடைவு ஏற்படுத்துமா?

தொகுதி: புதுச்சேரி

மண்ணாடிப்பட்டு, திருபுவனை (தனி), ஊசுடு (தனி), மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம் (தனி), நெட்டப்பாக்கம் (தனி), பாகூர், நெடுங்காடு (தனி), திருநள்ளார், காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி – திருப்பட்டினம், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது. 

சுருக்கமான வரலாறு:

கி.பி 4-ம் நூற்றாண்டு முதல் 14-ம் நூற்றாண்டு வரை பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த புதுச்சேரி, அதன்பின் முகலாயர்கள், விஜய நகரப் பேரரசு ஆட்சியின் கீழ் சென்றது. 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் என ஐரோப்பியர்கள் புதுச்சேரிக்கு வரத் தொடங்கினாலும், முதலில் (1521) கால் பதித்து வணிக வளாகங்களை அமைத்த பெருமை போர்த்துக்கீசியர்களையே சேரும். தொடர்ந்து விஜயநகரப் பேரரசின் 2-ம் மன்னர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வாரிசுப் போட்டியில், போர்த்துக்கீசியர்கள் எதிரணியில் நின்றதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து டச்சுக்கார்கள் தங்கள் வணிகத்தைத் தொடங்கினர். 1663-ல் அப்போதைய செஞ்சி அரசரிடமிருந்து 25,000 பகோடாக்களுக்குப் புதுச்சேரியை விலைக்கு வாங்கினர் டச்சுக்கார்கள். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரிஸ்விக் ஒப்பந்தப்படி 16,000 பகோடாக்களைக் கொடுத்து புதுச்சேரியை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டனர் பிரெஞ்சுக்காரர்கள். தொடர்ந்து ஆங்கிலேயர்களிடமும் பிரெஞ்சுக்காரகளிடமும் மாறி மாறிச் சென்ற புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் வசம் வந்தது. சுமார் 280 ஆண்டுகள் பிரெஞ்சுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த புதுச்சேரி, 1954 நவம்பர் 1-ம் தேதி சுதந்திரக் காற்றை சுவாசித்தது.

ஆங்கிலேயரிடமிருந்து தப்பித்து வந்த பாரதியாருக்கும் அரவிந்தருக்கும் அடைக்கலம் கொடுத்தது புதுச்சேரிதான். திருநெல்வேலி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று, இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுட பயிற்சியும் கொடுத்தது இந்தத் தொகுதி. கிரேக்கத்துடன் வணிகத் தொடர்பு நடைபெற்றதற்கான சான்றுகளைப் பகிரும் 2,000 ஆண்டு பழைமையான அரிக்கமேடு துறைமுகம், சர்வதேச நகரமான ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம், 2,000 ஆண்டுகள் பழைமையான பாகூர் சிவ கோயில், 300 ஆண்டுகள் பழைமையான தேவாலயங்கள் எனப் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியது புதுச்சேரி. மறைந்த பிரதமர் நேரு, `பிரெஞ்சிந்திய கலாசாரத்தின் ஜன்னல்' எனப் புதுச்சேரியை வர்ணித்திருக்கிறார். பிரான்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறி 60 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இன்றும் தனது கட்டடக் கலை மற்றும் கலாசாரத்தின் ஊடாக புதுச்சேரி மக்களுடன் உறவாடிக் கொண்டிருக்கிறது. மெர்சி, மிஸ்சே, போஞ்சோர், சவா உள்ளிட்ட பிரெஞ்சு வார்த்தைகள் இன்றும் புதுச்சேரி மக்களின் பேச்சு மொழியில் கலந்திருக்கிறது.

குட்டிக் கதை ஒன்று:

புதுச்சேரி சுதந்திரமடைவதற்கு முந்தைய காலகட்டம் அது. 1948-ம் ஆண்டு நவம்பர் புதுச்சேரி சட்டமன்றத்தில் அப்போதைய ஆளுநர் பரோன் இவ்வாறு பேசுகிறார். ``புதுச்சேரி இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்தால் உலகத்துக்கே அது பேரிழப்பாக இருக்கும். தவிர இந்தியாவின் ஒரு நகரமாக மட்டுமே இருக்கும். ஆனால், பிரெஞ்சிந்தியாவின் ஒரு பகுதியாக நீடித்தால் பிரான்ஸ் நாட்டுடனான நல்லுறவுக்கும் முன்னேற்றத்திற்கும் இணைப்பாக இருக்கும்' என்றார். ஆனால், `உங்களிடம் அடிமையாக இருந்து சுகபோகமாக இருப்பதைவிட, தாய்நாட்டுடன் இணைந்து சுதந்திரமாக இருப்போம்' என்று கூறி விடுதலைப் பத்திரத்தைப் பெற்றவர்கள் புதுச்சேரி மக்கள்.

அரசியல் வரலாறு:

இந்தியாவின் தென்பகுதியில் இருக்கும் தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட 3 மாநிலங்களிலும் புவியியல் ரீதியாகத் தனது ஆட்சிப் பரப்பைக் கொண்டிருக்கிறது புதுச்சேரி. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த யூனியன் பிரதேசம் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கியிருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற 7 ஆண்டுகளுக்குப் பிறகே புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. அதனால் இந்தியாவில் 3-வது மக்களவைத் தேர்தல் நடக்கும்போதுதான் இங்கு முதல் தேர்தலே நடைபெற்றது. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி ஒரு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் கொண்டிருக்கிறது. 

சுதந்திர இந்தியாவில் இணைந்ததிலிருந்து 1967 முதல் 2014 வரை இங்கு நடைபெற்ற 13 மக்களவைத் தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க, பா.ம.க., காங்கிரஸிலிருந்து வெளியேறிய என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ரங்கசாமி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கும் வரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது புதுச்சேரி. கட்சி தொடங்கிய 3 மாதத்தில் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி, 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடினார். அதிலிருந்துதான் புதுச்சேரியில் காங்கிரஸ் – என்.ஆர்.காங்கிரஸ் என்ற இரு துருவ அரசியல் ஏற்பட்டது.

தலையாய பிரச்னை?

* புதுச்சேரிக்கென தனிக் கணக்கு தொடங்கப்பட்டபோது 2,500 கோடி கடனை நிலுவைத் தொகையாக வைத்துவிட்டது மத்திய அரசு. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்டது மத்திய அரசு. 

* தேவைக்கு அதிகமாக ஆட்கள் நியமிக்கப்பட்டதால் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

* நிதிப் பற்றாக்குறையால் சுமார் பத்தாயிரம் அரசு சார்பு கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

நீண்டகால பிரச்னை? 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. அதேசமயம் சட்டமன்றம் இருப்பதால் யூனியன் பிரதேசங்களுக்கான நிதிக்குழுவிலும் இல்லை. இதனால் மாநிலமாகவும் இல்லாமல், யூனியன் பிரதேசமாகவும் இல்லாமல் திரிசங்கு நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் போதிய நிதியைப் பெற முடியாமல் வெளி மார்க்கெட்டில் கடன் வாங்கி, அதற்கு 1 வருடத்திற்கு வட்டியாக மட்டுமே சுமார் 450 கோடியைச் செலுத்தி வருகிறது. 

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

புதுச்சேரியில் வன்னியர் சமூகம் பெரும்பான்மையாக இருந்தாலும் கட்சியையும் வேட்பாளரையும் பார்த்து மட்டுமே வாக்களித்து வந்தவர்கள் புதுச்சேரி மக்கள். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து ரங்கசாமி தொடங்கிய என்.ஆர்.காங்கிரஸ் வன்னியர்களுக்கான கட்சியாக முன்னிறுத்தப்பட்டது. அதன் பயனாக 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்த என்.ஆர்.காங்கிரஸ், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றது. ஆனால் அதீத தொகுதிப் பாசம், தேவை அதிகமான ஆட்கள் நியமனம் போன்றவற்றால் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சரிவு, பா.ஜ.க கூட்டணியில் இருந்தும் புதுச்சேரிக்கான வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அரசை வற்புறுத்தாதது, எதிர்க்கட்சியாக செயல்படாதது உள்ளிட்டக் காரணங்களால் மக்களிடம் செல்வாக்கை இழந்தது என்.ஆர்.காங்கிரஸ். 

இதைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த முதல்வர் நாராயணசாமி, 2016 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நமச்சிவாயம்தான் முதலமைச்சர் என்று அறிவித்தார். (முதல்வர் வேட்பாளரைக் களம் இறக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை). மீண்டும் சாதி அரசியல் கை கொடுக்க ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், டெல்லி லாபியைப் பயன்படுத்தி முதலமைச்சராகிவிட்ட நாராயணசாமி, பசையுள்ள துறையான பொதுப்பணித்துறையை மட்டும் கொடுத்து நமச்சிவாயத்தையும் சமாதானப்படுத்திவிட்டார். தற்போது தி.மு.க-வுடன் காங்கிரஸும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவுடன் என்.ஆர்.காங்கிரசும் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.நாராயணசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுப்பிரமணியன், அ.ம.மு.க சார்பில் தமிழ்மாறன், நாம் தமிழர் சார்பில் ஷர்மிளா பேகம் ஆகியோர் களம் காணுகின்றனர். ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்லூரிக் குழுமங்களின் உரிமையாளர் கே.நாராயணசாமியை களம் இறக்கியிருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ். அரசியல் அனுபவம் இல்லையென்றாலும், இளம் வயதுடையவர், பொருளாதாரப் பின்னணி உடையவர் என்பதுடன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தங்களுக்குச் சாதகமாக நினைக்கிறது என்.ஆர்.காங்கிரஸ். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. பணப் பரிமாற்றம்

2. சாதி, வேட்பாளர்களின் தகுதி

3. மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி

4. வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பிரசாரம்

5. வாக்குறுதிகள்

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

மீண்டும் ரங்கசாமிக்கு வாய்ப்பளித்துவிடக் கூடாது என்று முழு வீச்சில் பணியாற்றுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஆளுநர் கிரண் பேடி கொடுக்கும் நெருக்கடி, பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் என மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி மக்களிடம், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை பா.ஜ.க-வின் முகமாக நிறுத்துகிறது காங்கிரஸ் கட்சி. இந்த யுக்தி என்.ஆர்.காங்கிரஸுக்குப் பின்னடைவு ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. 

காங்கிரஸ் கட்சிக்கும் மாநிலக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்பதால் மற்ற கட்சிகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதேசமயம் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ சுப்பிரமணியனும், நாம் தமிழர் கட்சியின் ஷர்மிளா பேகமும் செய்யும் சூறாவளிப் பிரசாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸின் கையே ஓங்கியிருக்கிறது. கடைசிநேர பிரசார யுக்தியைப் பயன்படுத்தி, வெற்றிக்கோட்டையைத் தொடுவதற்குப் போராடி வருகிறது என்.ஆர்.காங்கிரஸ்.

 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு