Election bannerElection banner
Published:Updated:

பில்டிங் ஸ்ட்ராங்...பேஸ் மட்டம் வீக்! - திருப்பூரில் `தோழி' vs `தோழர்' பஞ்சாயத்து

பில்டிங் ஸ்ட்ராங்...பேஸ் மட்டம் வீக்!  - திருப்பூரில் `தோழி' vs `தோழர்' பஞ்சாயத்து
பில்டிங் ஸ்ட்ராங்...பேஸ் மட்டம் வீக்! - திருப்பூரில் `தோழி' vs `தோழர்' பஞ்சாயத்து

அ.தி.மு.க வாக்குவங்கியைக் குறிவைத்துக் களமிறங்கினாலும், மத்திய அரசின் செயல்பாடுகளால் தொழில்துறையினர் பெரும் கொதிப்பில் உள்ளனர். இந்தக் கோபம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான சுப்பராயனை வெற்றி பெற வைக்குமா?

தொகுதி: திருப்பூர்

திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பெருந்துறை, கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி என அறியப்பட்டாலும், பெருந்துறை, கோபிச்செட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளும் ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்றன.

டாலர் சிட்டியின் கதை:

டாலர் சிட்டி என்ற பெருமைக்குரியது திருப்பூர். இந்தியாவின் அந்நியச் செலாவணி விகிதத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநகரம். ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறுகிறது. `நேற்றைய தொழிலாளி.. இன்றைய முதலாளி' என்பது திருப்பூரின் தாரக மந்திரம். வெறும் கையோடு திருப்பூருக்குச் சென்றால்கூட ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எளிய மக்களிடம் இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிழைப்பு தேடி திருப்பூருக்கு வருகிறார்கள். சமீப ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாட்டவர்களும் வங்கதேச மக்களும்கூட இங்கு வருவது அதிகரித்துள்ளது. கோபிச்செட்டிபாளையத்துக்கு சின்னக் கோடம்பாக்கம் என்ற செல்லப்பெயரும் உண்டு. ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. பவானி ஜமுக்காளத்துக்கு புவிசார் குறியீடு இருப்பது தனிப்பெருமை. இங்கு தயாராகும் ஜமுக்காளங்கள் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பவானி கூடுதுறை பிரசித்தி பெற்ற புண்ணிய தலம். அந்தியூர் குதிரைச் சந்தை வெகு பிரபலம். ஆண்டுக்கு ஒருமுறை அந்தியூரில் நடக்கும் குதிரைச் சந்தையில் கலந்துகொள்ள நாடு முழுவதுமிருந்து குதிரை வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் குவிவது வழக்கம். 

பொக்கிஷ வரலாறு: 

திருப்பூர் என்றாலே சுதந்திரப் போராட்ட வீரர் கொடி காத்த குமரனின் பெயர் நினைவில் வந்துவிடும். அதேபோல, இன்னுமொரு வரலாறும் திருப்பூருக்கு உண்டு. 1934-ம் ஆண்டு மே மாதம், காங்கேயம் பகுதியில் பெரியார் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் அடுக்குமொழியில் பேசி அனைவரையும் கவர்ந்தான் 25 வயது இளைஞன் ஒருவன். ஆனால், அன்றைய தினம் அந்த இளைஞனால் பெரியாரை நேரில் சந்தித்துப் பேச முடியவில்லை. அதன்பிறகு சில வாரங்கள் கழித்து திருப்பூரில் செங்குந்தர் மகாஜன சங்க மாநாடு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராகப் பெரியாரே கலந்துகொள்ள, அவரைக் காண கூட்டம் கூடியது. அந்த மாநாட்டுக் கூட்டத்தின் முதல் வரிசையில் அதே 25 வயது இளைஞன் வந்து அமர்ந்துகொண்டான். அத்துடன் அந்த மேடையிலும் பெரியாரின் முன்பாகத் தன் சொல்லாற்றாலை நிலைநாட்டினார். மாநாடு முடிந்ததும் அந்த இளைஞனை நேரில் அழைத்துப் பாராட்டினார் பெரியார். அந்த இளைஞனின் பெயர் சி.என்.அண்ணாதுரை. 

அரசியல் வரலாறு:

2008-ம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பிறகே திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த இரண்டு தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வென்றுள்ளது. கவுண்டர் இன மக்கள் அதிகம் வசிப்பதால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே வேட்பாளர்களாகக் களமிறக்கப்படுகின்றனர்.

1. சாயப்பட்டறை - திருப்பூரில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் சாயக்கழிவுநீரால் சுற்றுச்சூழல் பெருமளவு மாசடைந்துபோய் இருப்பது.

2. டாஸ்மாக் - தமிழகத்திலேயே அரசுக்கு டாஸ்மாக் வருமானம் அதிகம் கிடைக்கக்கூடிய ஊர் திருப்பூர். இங்கு மதுவுக்கு அடிமையாகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

3. தொழில் முடக்கம் - ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு பல பின்னலாடை நிறுவனங்கள் தொழில் நடத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. நள்ளிரவு கடந்தும் உழைக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

நீண்டகாலப் பிரச்னை:

ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஜீவ நதியாக விளங்கிய நொய்யல் ஆறு, இன்று திருப்பூரில் இயங்கி வரும் சாய ஆலைகளால் சீர்குலைந்து போய்விட்டது. நொய்யல் நதியை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. 

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

அ.தி.மு.க-வின் எஃகு கோட்டை திருப்பூர். திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டு நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.கவுக்கே ஜெயம். தற்போது இந்த நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளையும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களே ஆக்ரமித்துள்ளனர். தற்போது அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் ஆனந்தன். அதேநேரம், டாஸ்மாக் மாமூல் பஞ்சாயத்துகள், பெண் விவகாரம் என ஏகப்பட்ட சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரர். அதிலும், அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஜெயமணி கொடுத்த பாலியல் புகாரால் ஆனந்தனின் அமைச்சர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டது. `அந்தப் பெண் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். திருப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்களில் அவரும் ஒருவர். அந்தப் பெண்ணையும் என்னையும் இணைத்து அசிங்கப்படுத்தும் வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்’ என அப்போது ஆவேசப்பட்டார் அமைச்சர் ஆனந்தன். பெண் தோழி விவகாரத்தால் உள்ளூரிலும் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார். இருந்தாலும், திருப்பூரில் உள்ள அ.தி.மு.க-வின் வாக்குவங்கி தன்னைக் கரையேற்றிவிடும் என நம்புகிறார். 

இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன், தா.பாண்டியனைப் போல பேச்சாற்றல் மிக்கவர். அரசியலில் மூத்தவர். 2 முறை திருப்பூர் எம்.எல்.ஏவாகவும் கோவை மாவட்ட எம்.பியாகவும் பதவி வகித்தவர். எந்த வித ஊழல் புகாரிலும் தவறான குற்றச்சாட்டுகளிலும் சிக்கிக்கொள்ளாத மனிதர். ஜி.எஸ்.டி பிரச்னை, தொழிலாளர் வர்க்கத்தின் வாக்குகள், சிறுபான்மையினர் மற்றும் தலித் வாக்குகள் உள்ளிட்டவை சுப்பராயனுக்கு பிளஸ். ஆனந்தன் மீதான சர்ச்சைகளை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வகையில் பிரசார வியூகத்தை அமைத்திருக்கிறார். 

ஆனால், கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் நிலைமை திருப்பூரில் பரிதாபகரமாகவே இருக்கிறது. உட்கட்சிப் பூசலும் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்காக உழைக்காமலும் மேலோட்டமாகவே இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்குப் பெரிய மைனஸ்.

அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர் செல்வத்துக்கு திருப்பூர் நகரப் பகுதிகளில் செல்வாக்கு கிடையாது. ஆனால் பவானி, கோபி, அந்தியூர் பகுதிகளில் உள்ள அ.தி.மு.கவின் வாக்குகள் பிரிவதற்கு இவர் முக்கியக் காரணமாய் இருக்கப் போகிறார். 

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்திரகுமார் தொழிற்துறையில் அனுபவமிக்கவர். ஆனால் இயற்கை ஆர்வலர் என்றே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு கமல் கட்சியிலேயே இவரை பலருக்கும் தெரியாது. வெவ்வேறு பொதுநல அமைப்புகளில் அங்கம் வகித்து வந்தவரை அழைத்து மக்கள் நீதி மய்யத்தில் வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். முதல் தலைமுறை வாக்காளர்களை நம்பியே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதனும் டெபாசிட்டாவது வாங்கிவிட வேண்டும் என்ற மனநிலையில்தான் வலம் வருகிறார்கள். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் எவை?

 1. ஜி.எஸ்.டி

2. தலைவர்களின் பிரசாரம் 

3. கூட்டணி பலம்

4. மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி

5. பணப் பட்டுவாடா

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

`திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில் 30 சதவிகிதம் குறைந்துள்ளது. நான் எம்.பி-யானால் ஜி.எஸ்.டியால் நலிவடைந்து போயிருக்கும் திருப்பூர் தொழில்துறையை மீட்டெடுப்பேன். மத்திய மாநில அரசுகள் தோற்கடிக்கப்படவேண்டும்' எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார் சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயன். அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனோ, `திருப்பூர் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது மிகப் பெரிய சாதனை' எனக் கூறி, அடுத்து செய்யப் போகும் விஷயங்களையும் பட்டியலிடுகிறார். அ.தி.மு.க. வாக்கு வங்கியைக் குறிவைத்துக் களமிறங்கினாலும், மத்திய அரசின் செயல்பாடுகளால் தொழில்துறையினர் பெரும் கொதிப்பில் உள்ளனர். இந்தக் கோபம், சுப்பராயனை வெற்றி பெற வைக்கும் என நம்பிக்கையோடு வாக்கு சேகரித்து வருகின்றனர் காம்ரேடுகள். 

 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு