Published:Updated:

8 சின்னம்; சின்ன எம்.ஜி.ஆர்; ரஜினி பாசம்! - திருநாவுக்கரசரை கரையேற்றுமா திருச்சி?

8 சின்னம்; சின்ன எம்.ஜி.ஆர்; ரஜினி பாசம்! - திருநாவுக்கரசரை கரையேற்றுமா திருச்சி?
8 சின்னம்; சின்ன எம்.ஜி.ஆர்; ரஜினி பாசம்! - திருநாவுக்கரசரை கரையேற்றுமா திருச்சி?

திருச்சி, ராமநாதபுரம் தொகுதிகளை குறிவைத்து கடந்த சில ஆண்டுகளாகவே திருநாவுக்கரசர் வேலை பார்த்து வந்தார். அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். சமுதாய பலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் தனி செல்வாக்கு... இவையெல்லாம் திருநாவுக்கரசரை கரையேற்றுமா?

நட்சத்திர வேட்பாளர்: சு.திருநாவுக்கரசர் (திருச்சி தொகுதி) 

சுருக்கமான அறிமுகம்:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த தீயத்தூர்தான் திருநாவுக்கரசருக்குச் சொந்த ஊர். அந்த ஊரில் வாழ்ந்த சுப்பராமன்-காளியம்மாள் தம்பதியின் மூத்த மகனாக 1949-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பிறந்தார் திருநாவுக்கரசர். இவரது அப்பா ஊராட்சி மன்றத் தலைவராக 10 ஆண்டுகள் இருந்திருக்கிறார். திருநாவுக்கரசரின் பெரியப்பா முத்துவேல் மற்றும் பெரிய மாமா ராமநாதன் ஆகிய இருவரும், 1957-ம் ஆண்டு முதல் மூன்று முறை அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்கள். மாணவப் பருவத்தில் அரசியலுக்கு வந்த திருநாவுக்கரசர், சென்னைச் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற வழக்கறிஞர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்தவருக்கு, 1977 தேர்தலில் அறந்தாங்கி தொகுதி ஒதுக்கப்பட்டது. அப்போது இருந்து தொடர்ந்து ஆறு முறை அறந்தாங்கி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்றவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 1999 நாடாளுமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யானார். கட்சி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் பழகும் குணத்தால், இவரது திருமணவிழாவில் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த எம்.ஜி.ஆர். - கருணாநிதி-மூப்பனார் ஆகியோர் கலந்து கொண்டது ஹைலைட். இவருக்கு இரண்டு மனைவிகள், 5 பிள்ளைகள். 

சின்ன எம்.ஜி.ஆர்:

எம்.ஜி.ஆரால் அரசியலில் அடையாளம் காணப்பட்ட திருநாவுக்கரசர், 28 வயதில் சட்டமன்றத் துணை சபாநாயகர் ஆனார். அமைச்சர், அ.தி.மு.க இளைஞரணிச் செயலாளர் என எம்.ஜி.ஆர் கொடுத்த பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியவர். ரஜினியின் நீண்டகால நண்பர். அதன் காரணமாக, இவரது இளையமகன் `கபாலி' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். எம்.ஜி.ஆர் இறந்தபிறகு ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்த திருநாவுக்கரசர், பின்னாளில் பகையாளியாக மாறினார். `சின்ன எம்.ஜி.ஆர்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட இவர், அரசியல் முரண்பாடுகளால் இரண்டு முறை தனிக்கட்சியைத் தொடங்கினார். பின்னர், பா.ஜ.கவில் சேர்ந்து மத்திய இணை அமைச்சரானார். 

தொடர்ந்து ஜெயலலிதா கொடுத்த நெருக்கடிகளால், தேர்தல் நிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் காரணமாக, பா.ஜ.கவில் தேசியச் செயலாளர் பதவி கிடைத்த கையோடு, மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்ய சபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த திருநாவுக்கரசருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியும் தேடி வந்தது. கால் நூற்றாண்டு காலம் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ஆக இருந்த இவர், அடுத்து இவர் கைகாட்டிய நபர்கள் எல்லாம் எம்.எல்.ஏ ஆனார்கள். ஆனால், கடந்த இரண்டு முறையும் நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல்களில் அவரும் அவரது மகன் ராமச்சந்திரனும் போட்டியிட்டுத் தோல்வியைச் சந்தித்தது சோக வரலாறு. 

டார்கெட் திருச்சி:

திருச்சி, ராமநாதபுரம் தொகுதிகளை குறிவைத்து கடந்த சில ஆண்டுகளாகவே திருநாவுக்கரசர் வேலை பார்த்து வந்தார். அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். சமுதாய பலம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தனிச் செல்வாக்கு என திருநாவுக்கரசருக்கான பிளஸ்கள் அதிகம். 

5 சுவாரஸ்ய தகவல்கள்: 

1. ஜெயலலிதாவுடனான பகை காரணமாக புதுக்கோட்டை தொகுதி கலைக்கப்பட்டதாகவும் தகவல் உண்டு. 

2. இரட்டை இலை, சேவல், குடை, மோதிரம் என இதுவரை 8 சின்னங்களில் போட்டியிட்டிருக்கிறார் திருநாவுக்கரசர். 

3. தொடக்கத்தில் எஸ்.திருநாவுக்கரசராக இருந்தவர் அண்மையில் சு.திருநாவுக்கரசர் என எழுதத் தொடங்கியிருக்கிறார். 

4. தொகுதிகளில் நடக்கும் சுக-துக்க நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வது.

5. தொகுதி மக்களில் யாராவது சென்னை வந்தால், இவரது வீட்டில் தங்கி உணவருந்திவிட்டுச் செல்வது, சொந்த பந்தமாகத் தொகுதி மக்களைப் பார்ப்பது.

டாப் 3 சர்ச்சைகள்: 

1. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அ.தி.மு.க-வுக்கு விசுவாசமாக நடந்துகொண்டார் என்ற விமர்சனம்.

2. கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள், அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு.

3. வாரிசு அரசியலை முன்வைத்து அவரது மகன் ராமச்சந்திரனுக்குக் காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்பப் பிரிவில் தலைமைப் பொறுப்பை வழங்கியது.

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்: 

திருநாவுக்கரசருக்கு பலத்த போட்டியாக இருப்பது அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமான். கடந்த இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கிய இவர், புதுக்கோட்டை மன்னர் சமஸ்தானத்தின் வழிவந்தவர். திருச்சி மாநகரின் முன்னாள் மேயர். `ஜெயித்தால்தான் அரசியல் வாழ்வு' என்பதால் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார். அ.ம.மு.க மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், புறநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன் ஆகியோர் பட்டிதொட்டிகளில் எல்லாம் சாருபாலாவுக்காக வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். டீக்கடையில் வடை சாப்பிட்டபடி வாக்கு கேட்பது பிரசாரத்தில் வித்தியாசம் காட்டுகிறார். 

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் டாக்டர்.இளங்கோவன். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து தொகுதி முழுக்கச் சுற்றிவருகிறார். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பின்மை முரசு சின்னத்துக்கான பெரிய மைனஸ். இதனால் தொகுதி மக்களின் ஆதரவைப் பெறுவதிலும் பின்தங்கியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் வினோத், மக்கள் நீதி மய்யத்தின் ஆனந்தராஜா ஆகியோரும் வாக்கு சேகரிப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர். 

தி.மு.க. கூட்டணி பலம், மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, சிறுபான்மையினர் வாக்குகள் என திருநாவுக்கரசருக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன. இதை முறியடித்து வெற்றி பெறுவதற்காகக் கடுமையாகப் போராடி வருகிறார் சாருபாலா. `பரிசுப் பெட்டியா...முரசா...கை சின்னமா?' என்ற முக்கோண மோதலில் சிக்கித் தவித்தாலும், கடைசிநேர பிரசார யுக்திகளே வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகள். 

அடுத்த கட்டுரைக்கு