Published:Updated:

13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!

13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!
13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் கள நிலவரங்களை ஆராய்ந்து பார்த்தால், ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தும் அறுவடை செய்வதற்குத்தான் எதிர்க்கட்சிகளில் யாரும் இல்லை. தி.மு.க.வுக்குள் நடைபெறும் உள்ளடி வேலையால் சூரியனை ஓரம்கட்டி மாம்பழ வாசம் வீசுமா?

தொகுதி: தருமபுரி

தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர், பெண்ணாகரம், மேட்டூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

சுருக்கமான வரலாறு:

அதியமான் ஆட்சி பரவி இருந்த பகுதியான தகடூர் நாடுதான், தற்போதைய தருமபுரி. மன்னன் அதியமானுக்கு ஆயுளை நீட்டிக்கும் அரிய நெல்லிக்கனியைக் கொடுத்தார் ஔவை மூதாட்டி. `தமிழ்ப் பற்றால் தமிழ் வளரவேண்டும்' என அதே நெல்லிக்கனியை ஔவைக்குக் கொடுத்த வரலாற்றைக் கொண்டது தருமபுரி. பெருங்கற்காலத்திலிருந்தே, அதாவது 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!

குட்டிக் கதை ஒன்று:

தருமபுரிக்குப் பெருமை சேர்க்கும் சின்னங்களில் ஒன்று சர் தாமஸ் மன்றோ நினைவுத் தூண். 1792 முதல் 7 ஆண்டுகள் தருமபுரியில் தங்கி பணியாற்றிய தாமஸ் மன்றோ தருமபுரியை விட்டுச் சென்றபோது, "இது மிகவும் ரம்மியமான பிரதேசம். இவ்விடத்தில் உள்ள ஒவ்வொரு மலையும் மரமும் எனக்கு இன்பத்தைத் தந்துள்ளன. நான் தருமபுரியில் இருக்கும் போதெல்லாம் அந்தத் தோட்டத்தில் ஒரு மணிநேரமாவது செலவிடுவேன். இவ்விடத்தை விட்டு இப்போது நான் செல்ல வேண்டியிருப்பதை நினைக்கும்போது, வெகு நாள்கள் பழகிய நண்பனை விட்டுப் பிரிய நேர்ந்தால் எவ்விதக் கவலை உண்டாகுமோ அத்தகு கவலை உண்டாகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வரலாறு:

தருமபுரி தொகுதியில் 1962-ல் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார் காரிமங்கலம் ஆர்.எஸ்.வீரப்ப செட்டியார். வடசேலம் மாவட்டத்துக்குத் தருமபுரி தலைநகரமாக இருக்க வேண்டும் என்று பாடுபட்டவர். ஆனால், தனது பதவிக் காலத்திலேயே இறந்து விட்டதால் 1965-ல் தருமபுரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தலில், `வடிவேலு கவுண்டர் வெற்றி பெற்றால் தருமபுரி மாவட்டம் உருவாகும்' என்று அப்போதைய முதல்வர் காமராஜர் உறுதி அளித்தார். இந்த வாக்குறுதியால் வடிவேலு கவுண்டர் வெற்றி பெற்றார். காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2, 1965 அன்று தருமபுரி, மாவட்டத்தின் தலைநகர் ஆனது. வடிவேலு கவுண்டரும் வீரப்ப செட்டியாரும் இல்லை என்றால் தருமபுரி என்ற ஒரு மாவட்டமே இருந்திருக்காது. 

13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!

அதேபோல 1996-ம் ஆண்டு தருமபுரி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த கருணாநிதியிடம், அப்போதைய மாவட்டச் செயலாளரான முல்லைவேந்தன் ஒரு கோரிக்கையை வைத்தார். `இன்னும் 13 நாள்களில் நீங்கள் முதல்வர் ஆகிவிடுவீர்கள். தருமபுரி மாவட்ட மக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள்' என்று கோரிக்கை வைத்தார். அந்தக் கூட்டத்திலேயே ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவேன் என அறிவித்தார் கருணாநிதி. 

கருணாநிதி முதல்வர் ஆனதும், ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் அதற்கான பணிகளை மேற்கொண்டார். ஆனால், வாஜ்பாய் அரசு பொக்ரான் அணு குண்டு சோதனை நடத்தியதால் கடைசி நேரத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான நிதி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 2006-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 

தலையாய பிரச்னை?

1. வறட்சி மிகுந்த தருமபுரி மாவட்டத்தில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் இருப்பது.

2. சிப்காட்டுக்கு நிலம் அளவீடு செய்தும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இன்று வரையில் முடங்கி இருப்பது.

3. உலகத்தரத்தில் ஒகேனக்கல் சுற்றுலாதளத்தை மேம்படுத்தாமல் இருப்பது.

நீண்டகாலப் பிரச்னை?

வானம் பார்த்த பூமியாக விவசாயம் செய்து வருகின்றனர் தருமபுரி மாவட்ட விவசாயிகள். டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரி ஆறு, தருமபுரி வழியாகத்தான் தடம் பதித்துச் செல்கின்றது. ஆனால், காவிரியை ரசிக்க முடிகின்றதே தவிர விவசாயம் செய்ய முடிவதில்லை. தமிழக அரசும் மத்திய அரசும் கூட்டாகச் சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து காவிரி உபரி நீரைத் தருமபுரி மாவட்ட ஏரிகளுக்குத் திருப்பினால் தருமபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வு செழிக்கும்.

13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!

கட்சிகளின் செல்வாக்கு என்ன?

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டியிடுவதால், தருமபுரி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. இங்கு அ.தி.மு.க கூட்டணி சார்பில் அன்புமணியும் தி.மு.க சார்பில் டாக்டர் செந்தில்குமாரும் அ.ம.மு.க சார்பில் பழனியப்பனும் மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கறிஞர் ராஜசேகரும் நாம் தமிழர் கட்சியின் ருக்குமணியும் களமிறங்கியுள்ளனர். 

2014-ம் ஆண்டு தேர்தலில் 77,147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டவர் அன்புமணி. தொகுதியில் நிறைந்திருக்கும் வன்னியர் வாக்குவங்கியும் தாராளமாகச் செலவு செய்வதும் அன்புமணிக்கு ப்ளஸ். சிறுபான்மை வாக்குகளையும் தி.மு.க. பிரிப்பதும் அ.தி.மு.க.வின் அடிப்படை வாக்குவங்கியை அ.ம.மு.க. பிரிப்பதும் அவருக்கான மைனஸ். தி.மு.க. வேட்பாளரான டாக்டர்.செந்தில்குமார், மண்ணின் மைந்தனாகவும் அவரது குடும்பத்துக்கு உள்ள மரியாதையும் தொகுதி மக்களை ஈர்த்துள்ளது. ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை, அரசு ஊழியர்கள் ஆதரவு, கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் செந்தில்குமாருக்கு ப்ளஸ். அதேநேரம், இத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர் தடங்கம் சுப்பிரமணிக்கு சீட் ஒதுக்கவில்லை என்ற கோபத்தில் இருப்பதால், பல நிர்வாகிகள் தேர்தல் வேலை பார்க்காமல் உள்ளனர். தி.மு.க தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், தேர்தல் பணிகளிலிருந்து ஒதுங்கி நிற்கும் முல்லைவேந்தன் இன்னொரு மைனஸ். இந்த ப்ளஸ், மைனஸ் ஆகியவற்றைத் தாண்டி ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை, தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையும் என உடன்பிறப்புகள் நம்புகின்றனர்.

13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!

அ.ம.மு.க வேட்பாளர் பழனியப்பன், தொகுதிக்குள் 17 சதவிகிதமான வேளாள கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவர். ஆர்.கே.நகர் மாடலில் தர்மபுரி பூத் கமிட்டி பணிகளைச் செய்து முடித்துவிட்டார். 1,300 வாக்குச்சாவடிகளுக்கு தலா 33 பேர் கொண்ட பூத் கமிட்டியை அமைத்துள்ளார். அ.ம.மு.க பரிசுப் பெட்டி சின்னத்தை பிரபலப்படுத்தி உள்ளதும் வேளாள கவுண்டர், நாயுடு, ரெட்டியார், போயர், முஸ்லிம், கிருஸ்துவர்களின் வாக்குகளும் பழனியப்பனுக்கு பலம். இறுதிக் காட்சியில், வாக்காளர்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கும் பணப்பட்டுவாடா தங்களுக்கான பலமாக இருக்கும் என அ.ம.மு.க கருதுகிறது. 

மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் ராஜசேகர் கணிசமான வாக்குகளைப் பெறவேண்டும் என்று தீவிரம் காட்டி வருகின்றார். அதேபோல நாம் தமிழர் வேட்பாளர் ருக்குமணி கௌரவமான வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் எனத் தேர்தல் பணியில் தீவிரம்  காட்டி வருகிறார். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்

1. நீர் மேலாண்மை பற்றிய வேட்பாளர்களின் வாக்குறுதிகள்

2. பெண்கள் பாதுகாப்பு

3. ஆளும் கட்சிகளுக்கு எதிரான மக்கள் மனநிலை

4. கடைசி நேரத்தில் வாக்குச் சாவடி குளறுபடி

5. பண விநியோகம்

13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

"தருமபுரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நீண்ட கால நீர் மேலாண்மைத் திட்டங்களை நிறைவேற்றுவேன், காவேரி உபரி நீர் ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தைக் கொண்டு வருவேன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த தருமபுரியில் சிப்காட் அமைக்க விரைந்து முயற்சி எடுப்பேன்" எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார் பா.ம.க வேட்பாளர் அன்புமணி ராமதாஸ். 

தி.மு.க வேட்பாளர் செந்தில்குமாரோ, "அரசுப் பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பிடம் மற்றும் இலவசமாக நாப்கின் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும். விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக மாவட்டத்தில் உள்ள சிறு சிறு ஆறுகளை இணைத்து அணைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்கப்படும். ஒகேனக்கல் இந்தியா அளவிலும் வத்தல் மலை, சித்தேரி ஆகியவை சிறந்த சுற்றுலாதளமாக மாற்றப்படும். சிறு தானியங்கள் மற்றும் தக்காளி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும் தொழிற்சாலைகள் கொண்டுவருவேன்" என வாக்குறுதிகளாக அளித்து வருகிறார். 

13 நாளில் கருணாநிதியை முதல்வராக்கிய தருமபுரியின் எம்.பி ராசி யாருக்கு? நம்பிக்கை பா.ம.க; சுணக்கம் தி.மு.க..!

அ.ம.மு.க. வேட்பாளர் பழனியப்பனோ, "8 வழிச் சாலைக்குப் பதிலாக அரூர் வழியாக நான்கு வழிச் சாலை அமைக்கப்படும். தருமபுரிக்கு சிப்காட் கொண்டுவரப்படும். சிறந்த சுற்றுலா தளமாக ஒகேனக்கல் மாற்றப்படும். மலைக் கிராமங்கள் அனைத்துக்கும் சாலை வசதி செய்து தரப்படும். தருமபுரி மாவட்ட மக்களின் முக்கிய தேவையான நீர்த் தேக்கத் திட்டங்களை நிறைவேற்றித் தருவேன்" என நம்பிக்கையோடு பிரசாரம் செய்து வருகிறார். 

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் கள நிலவரங்களை ஆராய்ந்து பார்த்தால், ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தும் அறுவடை செய்வதற்குத்தான் எதிர்க்கட்சிகளில் யாரும் இல்லை. தி.மு.க.வுக்குள் நடைபெறும் உள்ளடி வேலையால் சூரியனை ஓரம்கட்டிவிட்டு மாம்பழ வாசம் வீசிக் கொண்டிருக்கிறது. கடைசி நேர பிரசார யுக்திகளால், தருமபுரியில் சூரியன் உதிக்குமா... மாம்பழம் பழுக்குமா என்பதற்கான விடை தெரிந்துவிடும். 

 
அடுத்த கட்டுரைக்கு