Published:Updated:

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?
துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

இருபெரும் தலைகள் மோதுவதால் பணப்பட்டுவாடா முக்கிய காரணியாக இருக்கிறது. வேலூரில் யார் கௌரவம் காப்பாற்றப்படும் என்ற மோதலில் துரைமுருகனும் ஏ.சி.சண்முகமும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். 

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

தொகுதி: வேலூர்

வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், கே.வி.குப்பம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தொகுதி வரலாறு:

வேலூர் என்றாலே, கம்பீரமாகக் காட்சியளிக்கும் கோட்டைதான் நினைவுக்கு வரும். தென்னிந்தியாவில் உள்ள தரைக் கோட்டைகளில் அழியாமல் உள்ள வரலாற்றுச் சின்னம். இந்திய சுதந்திரப் போருக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடந்த வீரம் விளைந்த மண் என்ற பெருமைக்குரியது. தவிர, இலங்கையில் கண்டியை ஆட்சி செய்த, கடைசித் தமிழ் மன்னர் விக்ரம ராசசிங்கன் கல்லறை, வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருப்பது, மற்றொரு சிறப்பு. பழைமையான இந்து கோயில்கள், பள்ளிவாசல்கள் அதிகம் உள்ளன. 

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

டாலர் சிட்டியான ஆம்பூர், குட்டி சிவகாசியாகப் பார்க்கப்படும் குடியாத்தம் அந்நிய செலாவணியை ஈட்டித்தருகிறது. வெயில் சுட்டெரித்தாலும் மழை கொட்டித் தீர்த்தாலும் வேலூர் மக்களின் கொண்டாட்டத்துக்கு குறைவில்லை. அறிமுகமில்லாத நபர்களுக்கும் அடைக்கலம் தரும் ஊர். சென்னைக்கு அடுத்தபடியாக வேலூரில்தான் வடநாட்டவர் அதிகளவில் வியாபாரம் செய்கிறார்கள். குடிசைத் தொழிலில் பெண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். மொத்தத்தில், முத்தான ஊர்.

தொகுதி பற்றிய குட்டிக் கதை ஒன்று:

‘பகுத்தறிவுப் பகலவன்’ என்று போற்றப்படும் தந்தை பெரியாரின் ஆயுளை நீட்டிக்கச் செய்த மணியம்மை பிறந்த ஊர். சுயமரியாதைத் திருமணங்களை முன்னின்று நடத்திய மணியம்மை, தன் வாழ்நாளை சமூக முன்னேற்றத்துக்காக மட்டுமே அர்ப்பணித்தார். அதேபோல், காமராஜரை, 1954-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெறச் செய்து முதலமைச்சராக்கி அழகு பார்த்தது, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் சட்டமன்ற தொகுதிதான். காமராஜருக்குப் பிறகு, தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட குடியாத்தம், தற்போது 2-வது முறையாக இடைத்தேர்தலைச் சந்திக்கிறது.

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

தொகுதியின் அரசியல் வரலாறு:

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி 1951 முதல் மக்களவை தேர்தலை சந்தித்து வருகிறது. இதில் நான்கு முறை காங்கிரஸ் கட்சியும் மூன்று முறை திமுகவும் மூன்று முறை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும் தலா இரண்டு முறை பாமகவும், அதிமுகவும் இங்கு வெற்றி பெற்றுள்ளன. வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டம் என்பதால் 3 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதியில் வன்னியர், இஸ்லாமியர்கள், தலித் சமூக மக்கள், முதலியார் வாக்குகள் நிரம்பியுள்ளன. இவர்கள் வெற்றிகளை தீர்மானிக்கக்கூடிய சக்திகளாக இருக்கிறார்கள். அதனால் இந்த தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பெரும்பாலும் மேற்கூறிய சமூகங்களைச் சார்ந்தவர்களே இருப்பது வழக்கம். 

தலையாய பிரச்னை:

ஆங்கிலேயர் காலத்திலேயே 1934ம் ஆண்டு அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு அந்த விமான நிலையம் பராமரிப்பு இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு ஆட்சியிலும் அங்கு விமான நிலையம் அமைக்கப்படும் எனக் கூறி சோதனை ஓட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இருக்காது. பக்கத்தில்தான் ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதி  உள்ளது. அங்கு சமீபத்தில் விமான நிலையப் பணிகள் ஆரம்பித்தன. அதற்குள் பணிகள் முடிந்து விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. இங்குதான் பல வருடங்களாக இன்னும் சோதனை ஓட்டம் நடந்துகொண்டிருக்கிறது. வேலூர் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என 3 மாநில தலைநகருக்கும் பக்கத்தில் உள்ள பெரிய நகரம். இங்கிருந்து மற்ற நகரங்களுக்கு எளிதில் செல்ல முடியும். ஆனால், போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லை. 

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

அடுத்ததாக குடிநீர் பிரச்னை. மாவட்டம் முழுவதுமே பாலாற்றை நம்பித்தான் உள்ளது. ஆனால் அங்கு தடுப்பணைகள் உயரப்படுத்தப்பட்ட பின்பு மாவட்டத்துக்கு தண்ணீர் வரத்து என்பதே இல்லை. காவிரி குடிநீர்த் திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் பல கிராம மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். போதுமான தொழிற்சாலைகள் இல்லை. இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் பிற மாநிலங்களை தேடிச் செல்லும் நிலையே. அதேநேரம் ஆம்பூர் பகுதிகளில் உள்ள அதிகமான தோல் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளைத் தவிர்க்க பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படவில்லை. 

நீண்டகால பிரச்னை:

குடிநீர் மற்றும் விவசாய பாசனத்துக்கு உயிர்நாடியாக உள்ள பாலாற்றில் அபாயகரமான ரசாயன கழிவுகள் கலந்திருக்கின்றன. மாசடைந்த பாலாற்றை மீட்டெடுக்க, உப்புத் தன்மை அதிகமாக உள்ள நிலத்தடி நீரை செறிவூட்ட இதுவரை எந்தத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அத்துடன், பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்காமல் இருப்பது, நீண்டகால பிரச்னையாக உள்ளது. வேலூர் மாவட்டம் பெரிய மாவட்டம். இதனை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை. ஆளுங்கின்ற அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி செல்வார்கள். ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இருக்காது. மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் இருந்து கலெக்டர் ஆபிஸ் வர வேண்டும் என்றால் 100 கிமீக்கு மேல் பயணிக்க வேண்டும். அமைச்சர் வீரமணி மாவட்டத்தை இரண்டாக பிரிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக அறிவித்தார். ஆனால் அந்த முயற்சி எந்த நிலையில் இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது. 

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

கட்சிகளின் செல்வாக்கு என்ன? 

கடந்த முறை கூட்டணிக் கட்சி வேட்பாளரை நிறுத்திய திமுக, இந்த முறை துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தைக் களமிறக்கியிருக்கிறது. அதேபோல், கடந்தமுறை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டு ஏ.சி சண்முகம் இந்த முறை இரட்டை இலை சின்னத்தின் பலத்துடன் தொகுதியில் களமிறங்கியுள்ளார். இவர்களை தவிர அமமுக சார்பில் பாண்டுரங்கன் போட்டியிடுகிறார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பலமான வாங்குவங்கியாக உள்ள இஸ்லாமியர்கள், தலித் சமுதாய மக்கள் பெருமளவு தி.மு.க-வை ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இருந்தாலும், துரைமுருகன் வன்னியர் என்ற காரணத்துக்காக அந்தச் சமூக வாக்குகளும் கணிசமாக தி.மு.க-வுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 

இந்த முறை தி.மு.க. ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மோடி மீதான அதிருப்தி, ஜெயலலிதா மர்ம மரணம், தொகுதிப் பக்கம் வராத அ.தி.மு.க எம்.பி, ஜி.எஸ்.டி-யால் சிறுதொழில்கள் முடங்கியது, சாமானிய மக்களைப் பாதித்த பண மதிப்பிழப்பு போன்றவற்றால் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு பாதகமான நிலை தெரிகிறது. முன்னாள் அமைச்சரான அ.ம.மு.க வேட்பாளர் பாண்டுரங்கன், வெற்றியைப் பற்றி யோசிக்காமல் அ.தி.மு.க.-வுக்கு எதிரான பிரசாரத்தை மட்டுமே முன்னெடுக்கிறார். இதனால், அ.தி.மு.க. வாக்குவங்கி இரண்டாகப் பிளவுபட்டு, கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

சமீபத்தில் நடந்த ரெய்டு கதிர் ஆனந்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கதிர் ஆனந்த்தை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் மாவட்டத்தில் உள்குத்து அரசியல் வெளிவரத் தொடங்கியுள்ளது. ரெய்டு நடந்ததே தி.மு.க. பிரமுகர் ஒருவர் போட்டுக்கொடுத்த தகவலின் பேரில்தான் என துரைமுருகன் வட்டாரம் கூறி வருகிறது. அதற்கு காரணம், கதிர் ஆனந்த் இதுவரை மாவட்டத்தில் கட்சிக்காக எந்தப் பணியையும் மேற்கொண்டதில்லை. மாவட்டத்தின் அரசியல் நிலை என்றுகூட அவருக்கு தெரியாது. அப்படி இருக்கையில் எப்படி இவருக்கு சீட் வழங்கப்பட்டது எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் குமுறல் தென்படுகிறது. இதன் நீட்சியாகத்தான் பணப் புழக்கத்தை சில கறுப்பு ஆடுகள் வெளியில் சொல்லியுள்ளனர் என நம்புகிறார் கதிர். ஆனால் மகனை எப்படியும் ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என துரைமுருகன் தயாராகி வருகிறார். இதற்காக ஏராளமான பணத்தை செலவழிக்க உள்ளார். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் இல்லாத சமயம் பார்த்து பண விநியோகம் தொடங்கும் எனக் கட்சி நிர்வாகிகள் முணுமுணுத்து வருகின்றனர்.

இதேபோல் ‘காஸ்ட்லி’ வேட்பாளராகக் கருதப்படும் ஏ.சி.சண்முகம், கடந்த முறை இதே தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-விடம் தோற்றார். இந்த முறை ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே அவர் போட்டியிடுகிறார். முதலியார் சமூகத்துக்கான தலைவராக மட்டுமே ஏ.சி.சண்முகம் பார்க்கப்படுவதாலும், கார்பரேட் ஃபார்முலாவுடன் பௌன்சர்கள் புடைசூழ வந்து வாக்கு சேகரிப்பதையும் மக்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா பாணியில் கூண்டு வாகனத்தில் பிரசாரம், அடிக்கடி மேக்கப் என அலப்பறை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் இவருக்கு மாவட்ட அமைச்சர்கள் ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள். வீரமணி, நிலோபர் கபில் பெயருக்கு எப்போவதுதான் பிரசாரத்துக்கு வருகிறார்கள். வந்தாலும் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அவரை ஆதரித்துப் பேசுவது கிடையாது. கடந்த முறை வெற்றிபெற்ற அ.தி.மு.க. எம்.பி. தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்த்ததில்லை. இது சண்முகத்தின் பிரசாரத்துக்கு பின்னடைவாக உள்ளது.

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

மஞ்சள் கலர் செண்டிமெண்ட்

வன்னியர்களின் அடையாளமாக வேலூர் மாவட்டத்தில் மஞ்சள் கலர் பார்க்கப்படுகிறது. இதனால் துரைமுருகன் மகன் கதிர் எப்போதுமே மஞ்சள் கலர் உள்ள ஆடைகளையே அதிகம் அணிவார். எங்கு சென்றாலும் அப்படிதான் அவர் செல்வார். இப்போது இதே மஞ்சள் கலர் செண்டிமெண்டை ஏ.சி.சண்முகமும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த சில நாள்களாகவே மஞ்சள் கலர் துண்டை பிரசாரத்தில் பயன்படுத்தி வருகிறார். ஆனால், கூட்டத்தில் அவரை அடையாளம் காணவே மஞ்சள் கலர் துண்டு போட்டு வருவதாக அவர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

கருத்துக்கணிப்பு அரசியல் 

``1000 கல்லூரி மாணவர்களை இறக்கி கருத்துக்கணிப்பு நடத்தினேன். முடிவுகள், எனக்கு ஆதரவாக இருப்பதால்தான் மீண்டும் களமிறங்கியுள்ளேன்" என பிரசாரம் தொடங்குவதற்கு முன்பாகவே ஏ.சி.சண்முகம் தெரிவித்து இருந்தார். இப்போது அவரைப் போலவே துரைமுருகனும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார். இப்போது ரெய்டு முடிந்த பிறகு சூழ்நிலை தங்களுக்கு சாதமாக இருக்கிறதா என்று மீண்டும் கருத்து கணிப்பு எடுக்கத் தொடங்கியிருக்கிறது உள்ளூர் தி.மு.க.  

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள் 

1. பணப்பட்டுவாடா
2. தண்ணீர் பிரச்னை
3. மாவட்டத்தை பிரிக்கும் அறிவிப்பு
4. வாக்குறுதிகள்
5. வேட்பாளர்களின் சொந்த செல்வாக்கு

துரைமுருகனைச் சுற்றியிருக்கும் ‘பிளாக் ஷீப்’கள்...! வேலூரில் என்ன நடக்கிறது?

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. `வெற்றிக் கனியைப் பறிப்பது வாழ்வா... சாவா பிரச்னை' என்று துரைமுருகன் மேடைக்கு மேடை குலுங்கி குலுங்கிப் பேசுகிறார். இருபெரும் தலைகள் மோதுவதால் பணப்பட்டுவாடா முக்கிய காரணியாக இருக்கிறது. அதனை சரியாகச் செய்து வேலூரில் யார் கௌரவம் காப்பாற்றப்படும் என்ற மோதலில் துரைமுருகனும் ஏ.சி.சண்முகமும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். 

 
அடுத்த கட்டுரைக்கு