Election bannerElection banner
Published:Updated:

கருணாநிதியின் மூன்றாவது கோட்டையை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவாரா?  சேலம் தொகுதி நிலவரம்

கருணாநிதியின் மூன்றாவது கோட்டையை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவாரா?  சேலம் தொகுதி நிலவரம்
கருணாநிதியின் மூன்றாவது கோட்டையை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவாரா?  சேலம் தொகுதி நிலவரம்

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதை கெளரவப் பிரச்னையாகப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர், ''சேலத்தில் நாம் வெற்றி பெறுவது உறுதி. ஆனால் தமிழகத்திலேயே அதிக ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு'' என்றார். அவர் இலக்கு நிறைவேறுமா?

தொகுதி: சேலம்

ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

சைலம், சேலம் ஆன கதை! 

சேலம் நகரைச் சுற்றி நான்கு பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டதால் சைலம் என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் சைலம் மருவி சேலம் என்றானது. மாம்பழம், மாடர்ன் தியேட்டர், வெள்ளிக் கொலுசு, விசைத்தறி, வெண்பட்டு, தட்டுவடை செட், காரப் பொரி, கை முறுக்கு, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, சேகோ ஆலை, நூல் மில் போன்றவைகளுக்குப் பெயர் பெற்றது. ராஜாஜி, எடப்பாடி பழனிசாமி என இரண்டு முதல்வர்களைக் கொடுத்த மாவட்டம். 

திராவிட அரசியலின் பிறப்பிடம்:

திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர்களைக் கொடுத்த மாவட்டம் சேலம். இங்கு ஒரு காலத்தில் கோலோச்சிய மாடர்ன் தியேட்டரில் இருந்துதான் அண்ணா, சிவாஜி, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் உருவானார்கள். மறைந்த முதல்வர் கருணாநிதி சேலம் கோட்டை பகுதியில் குடியிருந்தார். சேலத்துக்கு எப்போது வந்தாலும், `நான் மூன்று கோட்டையில் வசித்தவன், அதில், 1. பாளையங்கோட்டை, 2. சேலம் கோட்டை, 3. புனித ஜார்ஜ் கோட்டை' என வர்ணிப்பார். 

அரசியல் வரலாறு:

சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட சேலம் மக்களவைத் தொகுதி இன்று வரையில் எந்தவித மாற்றத்துக்கும் உட்படவில்லை. இந்திய ரயில்வே துறையின் முன்னாள் இணை அமைச்சர் எஸ்.வி.ராமசாமி, தமிழகத்தின் முன்னாள் வீட்டுவசதி, தொழில்துறை அமைச்சர் ராஜாராம், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தி.மு.க செயலாளர் இ.ஆர்.கிருஷ்ணன், ஜெயலலிதாவின் அரசியல் குரு ப.கண்ணன், மத்திய அமைச்சர்கள் ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக ஒரு காலத்தில் இருந்த செல்வகணபதி, முன்னாள் அமைச்சர் தங்கபாலு, செம்மலை ஆகியவர்களால் அலங்கரிக்கப்பட்டது சேலம் மக்களவைத் தொகுதி.

சேலம் மக்களவைத் தொகுதியில் தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியும் அதன் பிறகு, தி.மு.க-வும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. பிறகு அ.தி.மு.க இங்கு கால் ஊன்றியது. கடந்த 25 ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சிகளுக்கே இந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்தது தி.மு.க. கடந்த தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டும் தோல்வியைத் தழுவியது. 

தலையாய பிரச்னை?

1. சேலம் டு சென்னை 8 வழிச்சாலைத் திட்டம்.

2. போக்குவரத்து நெரிசல்.

3. வேலையில்லாத் திண்டாட்டம். 

நீண்டகால பிரச்னை என்ன? 

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கும் பாசன வசதிக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால், மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள சேலம் மாவட்ட விவசாயிகளால் பாசன வசதி பெற முடியவில்லை. அதற்காக மேட்டூர் அணையில் இருந்து வாய்க்கால் மூலம் ஓமலூர் சரபங்கா நதி, சேலம் திருமணிமுத்தாறு, ஆத்தூர் வசிஷ்டநதியில் இணைத்தால் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதற்காக பல ஆய்வுகள் செய்யப்பட்டு திட்ட அறிக்கையும் கொடுத்தும் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. 

கட்சிகளின் செல்வாக்கு?

சேலம் மாவட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதி என்பதால் கட்சிக்காரர்களின் கவனிப்பு அதிகமாகவே உள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தால் விவசாயிகள் கொந்தளிப்பில் இருந்தாலும் நகரப் பகுதிகளில் அ.தி.மு.க-வுக்குப் பாதிப்புகள் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் மீதுள்ள அதிருப்தியை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே தி.மு.க வேட்பாளர் பார்த்திபனுக்கு வாய்ப்பு உண்டு. தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் பிரசார யுக்தி கை கொடுத்தால், அ.தி.மு.க வேட்பாளர் சரவணன் இரண்டாம் இடம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தொகுதியில் கணிசமான வாக்குகளை அ.ம.மு.க வேட்பாளர் எஸ்.கே.செல்வம் பிரிக்கவும் வாய்ப்பு உள்ளதால், அ.தி.மு.க-வினர் மத்தியில் சற்று கவலை தென்படுகிறது. தொகுதியில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பணம் இருக்கிறது. 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள் 

1. பணமதிப்பு இழப்பு.
2. ஜி.எஸ்.டி.  
3. 8 வழிச் சாலைக்கான எதிர்ப்பு.  
4. கிராமப்புற வேலைவாய்ப்பு பாதிப்பு.
5. மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி.

கௌரவப் பிரச்னை: 

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதை கெளரவப் பிரச்னையாகப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர், ''சேலத்தில் நாம் வெற்றி பெறுவது உறுதி. ஆனால், தமிழகத்திலேயே அதிக ஓட்டு எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு'' எனக் கூறி கட்சி நிர்வாகிகளையும் கூட்டணிக்கட்சி பொறுப்பாளர்களையும் வெயிட்டாக கவனித்துச் சென்றார். தினந்தோறும் கட்சி நிர்வாகிகளிடமும் கூட்டணிக்கட்சி பொறுப்பாளர்களிடமும் செல்போனில் பேசிக் களநிலவரத்தைத் தெரிந்துகொள்வதோடு பிரசார வியூகங்களையும் வகுத்துக் கொடுக்கிறார். 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

சேலம் டு சென்னை வரை செல்லும் 8 வழிச் சாலை திட்டத்தைத் தடுத்து நிறுத்துவேன், சேலம் உருக்காலை தனியார் மயமாவது தடுக்கப்படும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும், சேலம் ரயில்வே கோட்டம் விரிவாக்கம் செய்யப்படும்' என்றெல்லாம் வாக்குறுதிகளைக் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார் தி.மு.க வேட்பாளர் பார்த்திபன். அ.தி.மு.க வேட்பாளர் சரவணனோ, `சர்வதேச தரத்துக்கு சாலைவசதி ஏற்படுத்தித் தரப்படும், காவிரி, கோதாவரி ஆறுகளை இணைத்து சேலம் மக்களின் பிரச்னைக்குத் தீர்வு காண்பேன்' என நம்பிக்கையோடு பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நேரடியாக மோதுவதும் தேர்தல் வெற்றியை மானப் பிரச்னையாக எடப்பாடி பழனிசாமி பார்ப்பதும் சேலம் வாக்காளர்கள் காட்டில் பணமழையை வீசிக் கொண்டிருக்கிறது. `இந்தக் கோதாவில் இரட்டை இலை மலருமா...சூரியன் உதிக்குமா?' என அலசி ஆராய்ந்து வருகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு