Published:Updated:

`கஷ்டப்படுறேன்’, ‘கந்துவட்டி’, ‘காலி தீப்பெட்டி’..! விருதுநகரின் கள நிலவரம்

தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் அவர்களை கவரும் விதத்திலான உறுதியான வாக்குறுதிகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை முன்னிறுத்தியே காங்கிரஸின் பிரசாரம் அமைந்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் முரசு சத்தம் பெரிதாகக் கேட்கவில்லை. விருதுநகரின் தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கிறது?

`கஷ்டப்படுறேன்’, ‘கந்துவட்டி’, ‘காலி தீப்பெட்டி’..! விருதுநகரின் கள நிலவரம்
`கஷ்டப்படுறேன்’, ‘கந்துவட்டி’, ‘காலி தீப்பெட்டி’..! விருதுநகரின் கள நிலவரம்

தொகுதி: விருதுநகர்

விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

வியாபார நகரம்:

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் முக்கிய வர்த்தக நகராக விளங்கியது விருதுநகர். `வியாபார நகரம்’ என்று சொல்லப்படும் இந்த ஊரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருள்களும் ஏற்றுமதி ஆகின்றன. பலசரக்கு வணிகத்துக்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது. பட்டாசு, அச்சுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது சிவகாசி. சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி, பேனா முனை அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் தலைசிறந்த தலைவராகப் போற்றப்படும் காமராஜர் பிறந்த தொகுதி இது. அருப்புக்கோட்டை நெசவுத்தொழிலைப் பிரதானமாகக் கொண்ட பகுதி. அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் இந்தத் தொகுதியில் உள்ளது. தொழில் வளம், கலாசாரத்துக்குப் பெயர் பெற்ற ஊர் விருதுநகர். 

காமராஜர் vs சீனிவாசன்:

1967-ம் ஆண்டு விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பெருந்தலைவர் காமராஜரை பெ.ஸ்ரீனிவாசன் என்ற இளைஞர் தோற்கடித்தார். அதைத் தாங்க முடியாத காமராஜரின் ஆதரவாளர், "உங்களைத் தோற்கடித்துவிட்டு சாதாரண ஸ்ரீனிவாசனை மக்கள் தேர்வு செய்துள்ளனர்" எனக் கதறி அழுதார். இதை மறுத்துப் பேசிய காமராஜர், "சாதாரண ஒருவர் இப்படி மேலே வர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன். அதனால நான் தோல்வியடைந்தது சந்தோஷம்தான்" எனப் பதில் கொடுத்தார். 

தொகுதியின் அரசியல் வரலாறு:

1967 முதல் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் மாவட்டத் தலைநகரான விருதுநகரின் பெயரிலேயே கடந்த 10 ஆண்டுகளாகத் தேர்தலை சந்தித்து வருகிறது. மறுசீரமைப்புக்குப் பின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளுக்குப் பதிலாகத் திருமங்கலம், திருப்பரங்குன்றம், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் விருதுநகருக்குள் வந்துள்ளன. தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடிய இடத்தில் முக்குலத்தோர், நாயக்கர்கள், பட்டியலின மக்கள் ஆகியோர் இருக்கின்றனர். ம.தி.மு.க.-வுக்கும் கணிசமான வாக்குகள் தொகுதியில் இருக்கின்றன. அதேபோல் அ.தி.மு.க-வுக்கு, தி.மு.க-வுக்கு என அடிப்படை வாக்குவங்கியும் உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் காங்கிரஸ் ஒருமுறையும், அ.தி.மு.க ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

தொகுதியின் தலையாய பிரச்னை?

தொழில் வளம் மிகுந்த மாவட்டம் என்பதால் தொழிலாளர்களின் பிரச்னைதான் தலையாயப் பிரச்னையாக உள்ளது. பட்டாசு, தீப்பெட்டி, நூற்பாலைகள் எனத் தொழிற்சாலைகள் நிறைய இருந்தாலும் இயந்திரங்களின் வருகையால் மாவட்டத்தில் இருக்கும் பெரும்பாலானோர் வெளியூருக்கு வேலைக்குச் செல்லும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். பசுமைப் பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நீண்ட நாள்களுக்குப் பிறகு, அமலுக்கு வந்துள்ளது. பல்வேறுகட்ட போராட்டங்களைக் கடந்து லட்சக்கணக்கான மக்கள் தற்போதுதான் வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், இது நிரந்தர தீர்வா அல்லது தற்காலிகமா என்ற அச்சத்திலேயே தொழிலாளர்கள் உள்ளனர். சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் போன்றவை இந்தத் தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள். இதுபோக மத்திய அரசின் அதிகப்படியான ஜி.எஸ்.டி வரியால் தீப்பெட்டி உள்ளிட்ட சிறு, குறு தொழில்கள் முடங்கிப்போயுள்ளன. இதுவும் வேலைவாய்ப்பின்மைக்குப் பிரதான காரணம். 

தொழில் வளர்ச்சி கொண்ட பகுதிதான் என்றாலும் உற்பத்திகளை அதிகம் ஏற்றுமதி செய்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. மதுரை - கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது. இது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதால் பல சிரமங்களுக்கு மத்தியில் ஏற்றுமதியைச் செய்து வருகின்றனர்.

நீண்டகால பிரச்னை: 

தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம். வறட்சியான விருதுநகர் பகுதியில் இந்தத் திட்டம் குடிநீர் தேவையை அதிக அளவில் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இன்னும் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை. விருதுநகர் போன்ற பகுதிகளில் இன்னும் ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்று உள்ள நிலையில் குடிநீர் பிரச்னை ஆண்டு முழுவதும் தீராத பிரச்னையாகவே உள்ளது.

பொதுத் தேர்வுகளில் ஒவ்வோர் ஆண்டும் முன்னிலை வகித்து வருகிறது விருதுநகர் மாவட்டம். தமிழகத்தின் கல்வி சராசரியைவிட அதிகம் பேர் கல்வி தேர்ச்சி பெற்ற மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது. இவ்வளவு இருந்தும், இங்கு நேரடி அரசுக் கல்லூரி என்பது கனவாகவே உள்ளது. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த மாவட்டத்தில் தனியார் கல்லூரிகள்தான் கோலோச்சி வருகின்றன. அரசுக் கல்லூரி வேண்டும் எனப் பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்கள் சோர்ந்துபோனதுதான் மிச்சம்.

மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அவர்களும் இதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதா இருந்தபோது பல் மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் என அறிவித்தார். மூன்று ஆண்டுகளாக இதுவும் வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. இதற்காக ஒரு செங்கலைக்கூட அரசு நகர்த்தவில்லை என்பதுதான் கூடுதல் சோகம். தவிர, நெசவு தொழிலாளிகளுக்கு நூல் கிடைக்காமல் இருப்பது போன்ற இன்னும் பல பிரச்னைகள் தொகுதிக்குள் இருக்கின்றன.

கட்சிகளின் செல்வாக்கு? 

தி.மு.க கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் களமிறங்கியுள்ளார். இவர் 2009-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றிபெற்றதால் மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருக்கிறார். இது அவருக்குக் கூடுதல் பலம்தான் என்றாலும், ஏற்கெனவே எம்.பி-யாக இருந்தபோது ஒன்றுமே செய்யவில்லை என்ற விமர்சனமும் இவர் மீது இருக்கிறது. ஆனால், கடந்த முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க எம்.பி ராதாகிருஷ்ணனை ஒப்பிடுகையில் மாணிக் எவ்வளவோ பரவாயில்லை என்ற பேச்சுதான் தொகுதிக்குள் இருக்கிறது. தொகுதியில் அதிகம் வசிக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களைவிட ரேஸில் முந்துகிறார். அ.தி.மு.க கூட்டணி சார்பில் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். 

தொகுதியில் நாயக்கர் சமூக மக்கள் கணிசமாக உள்ளதால், இந்தத் தொகுதியைக் கேட்டுப் பெற்றிருக்கிறது தே.மு.தி.க. மாணிக் தாகூரைப் போல இவரும் தொகுதியைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அ.தி.மு.க மீதான அதிருப்தி, பா.ஜ.க மீதான வெறுப்பு அலை போன்றவை தேமுதிகவுக்கு மைனஸ். அமமுக சார்பில் பரமசிவ ஐயப்பன் போட்டியிடுகிறார். தொகுதிக்கு இவர் அறிமுகமில்லாதவராக இருக்கிறார். ஆனால் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளதால் அந்த கட்சியின் பெரும்பாலான வாக்குகள் ஐயப்பனுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை ப்ளஸ்ஸாகப் பார்க்கின்றனர் அ.ம.மு.க-வினர். கூடவே வசதியான வேட்பாளர் என்பதால் கடைசி நேரத்தில் பணத்தைக் களமிறக்கி, வாக்குகளை அள்ளுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

காங்கிரஸ், தே.மு.தி.க எனக் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடுவதால் பிரசாரம் இன்னும் களைகட்டவில்லை. தொகுதியில் ஏராளமான பிரச்னைகள் இருந்தாலும் அதைப் பற்றி எல்லாம் பேசாமல், சம்பந்தேமே இல்லாமல், `நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன்' என அனுதாபப் பேச்சின் மூலம் ஓட்டு சேகரிக்க முயல்கிறார் தே.மு.தி.க வேட்பாளர். இது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. 

இதே நிலைதான் காங்கிரஸ் கட்சியிலும். அ.தி.மு.க - தி.மு.க நேரடி போட்டியில்லாததால் பணப் பட்டுவாடாவும் பெரிதாக நடைபெறவில்லை. இப்போது இருக்கும் வேட்பாளர்களில் வசதியான வேட்பாளராக இருப்பவர் அ.ம.மு.க வேட்பாளர் பரமசிவன் ஐயப்பன் மட்டும்தான். `கந்துவட்டி' பின்புலம் கொண்ட இவர் மட்டும்தான் பிரசாரத்தில் தாராளமாகக் கரன்ஸிகளைக் கண்ணில் காட்டுகிறார். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள்:  

1. பணப்பட்டுவாடா.

2. பட்டாசுத் தொழில்.

3. வாக்குறுதிகள்.

4. பிரசார யுக்தி.

5. கட்சி விசுவாசம்.

இந்தியாவின் பட்டாசுத் தேவையில் பெரும்பகுதியை சிவகாசி பட்டாசு ஆலைகள்தான் பூர்த்தி செய்கின்றன. இதனால் குட்டி ஜப்பான் என்ற பெருமையும் சிவகாசிக்கு உண்டு. ஆனால், இந்தப் பெயர் நீண்ட நாள்கள் நிலைக்குமா என்ற அச்சமும் நிலவி வருகிறது. தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் அவர்களைக் கவரும் விதத்திலான உறுதியான வாக்குறுதிகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதை முன்னிறுத்தியே காங்கிரஸின் பிரசாரம் அமைந்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் முரசு சத்தம் பெரிதாகக் கேட்கவில்லை. தற்போதைய நிலவரத்தின்படி, முரசுவை ஒலிக்கவிடாமல் கை சின்னத்தின் ஆதிக்கமே விருதுநகரில் மேலோங்கியிருக்கிறது.