Published:Updated:

``தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை மட்டுமே சொல்லி வருகிறார்” - டி.கே.ரங்கராஜன்

``தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை மட்டுமே சொல்லி வருகிறார்” - டி.கே.ரங்கராஜன்
``தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை மட்டுமே சொல்லி வருகிறார்” - டி.கே.ரங்கராஜன்

``பா.ஜ.க-வின் 5 ஆண்டு கால ஆட்சி, நாட்டுக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தாமரை மலரும், மலர்ந்தே தீரும் என தமிழிசை மட்டும்தான் கூறி வருகிறார். அவருடன் இருப்பவர்களுக்கே அதில் நம்பிக்கை இல்லை" என சி.பி.எம். மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கலந்துகொண்டு பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.

இதில் பேசிய அவர், ``நம்முடைய பாடத் திட்டத்துக்கும் நீட் தேர்வு கேள்விக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதனாலேயே நல்ல மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்கள் 24,000 பேர் நீட் தேர்வில் தோல்வி அடைந்தார்கள். மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் அவர்களின் மருத்துவக் கனவு பலிக்காமலேயே போய்விட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வு தேவை இல்லை என சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், குடியரசுத் தலைவரிடம் அந்தத் தீர்மானம் சென்று சேரவில்லை. நீட் தேர்வு விஷயத்தில் 8 கோடி மக்களை ஏமாற்றியது பா.ஜ.க அரசுதான். நீட்  தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பு தமிழகத்தை இருட்டடிப்புச் செய்யும் விதமாக அமைந்தது. இதனால் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்பதற்கு பா.ஜ.க, அ.தி.மு.க, கட்சிகள் பொறுப்பல்லவா?

பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் கையூட்டு வாங்காமல் இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை இந்த மண்ணிலிருந்து அகற்றி சுத்தப்படுத்தி இருக்க முடியும். ஆட்சியர் அலுவலகத்துக்குப் பேரணியாக வந்தவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டியதற்குப் பதிலாக சுட்டுக் கொன்றது அ.தி.மு.க அரசு. தமிழகத்தில் முதலமைச்சர் இல்லாமலே ஒரு அரசு நடைபெறுகிறது என்று சொன்னால் அதில் தாமரையின் தலையீடு இருக்கிற காரணத்தால்தான்.

முத்தலாக் விஷயத்தில் சிவில் சட்டத்தைக் கிரிமினல் ஆக்கக் கூடாது. இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் வாய்ப்பு கனிமொழிக்கு மட்டும்தான் உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி வளர்ச்சி மிக முக்கியமானது. இங்கே பாதுகாப்பு சாதனங்கள் வருவதற்கு, ராணுவ தளவாடங்கள் உருவாக்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதை நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய வாய்ப்பும் கனிமொழிக்குதான் உண்டு. இந்தத் தொழிற்சாலைகள் இங்கு அமைவதால் துறைமுகம், விமான நிலையம் விரிவடையும். வணிகம் முன்னேறும்.

பண மதிப்பிழப்பு செய்தது தீவிரவாதத்தை அழிப்பதற்காகத்தான் என்று கூறினர் பா.ஜ.க-வினர். அப்படி எனில், எல்லையில் 42 பேர் ஏன் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். தேர்தல் சமயத்தில் ஒருதலைப்பட்சமாக ஒரு சிலரை மிரட்ட வேண்டும் என்பதற்கு வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவது போலித்தனமானது. பா.ஜ.க-வின் 5 ஆண்டு கால ஆட்சி, நாட்டுக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

`தாமரை மலரும், மலர்ந்தே தீரும்' என தமிழிசை மட்டும்தான் கூறி வருகிறார். அவருடன் இருப்பவர்களுக்கே அதில் நம்பிக்கை இல்லை. ஒரு மாநில பா.ஜ.க கட்சியின் தலைவர் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போனார் என இந்தியாவில் பட்டியல் போட்டுக் காட்டப்படும்  நிலை வரப் போகிறது. பா.ஜ.க-வின் பட்டியலிலும் இந்தச் சாதனை இடம்பெறும். இது தாமரை மலர வேண்டிய தொகுதி அல்ல. கருக வேண்டிய தொகுதி" என்றார்.

பின் செல்ல