Published:Updated:

`லேடி’ காமராஜர், `பாகுபலி’ தம்பிதுரை, உற்சாக செந்தில்பாலாஜி! கரூரில் ஜோதிமணி பல்ஸ் என்ன?

இந்த முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜோதிமணி கேபினட்டில் இணைவார்' எனத் தொகுதி முழுக்க பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. ஜோதிமணியின் ப்ளஸ், மைனஸ் என்ன?

`லேடி’ காமராஜர், `பாகுபலி’ தம்பிதுரை, உற்சாக செந்தில்பாலாஜி! கரூரில் ஜோதிமணி பல்ஸ் என்ன?
`லேடி’ காமராஜர், `பாகுபலி’ தம்பிதுரை, உற்சாக செந்தில்பாலாஜி! கரூரில் ஜோதிமணி பல்ஸ் என்ன?

நட்சத்திர வேட்பாளர்:  செ.ஜோதிமணி (கரூர்)

சுருக்கமான அறிமுகம்! 

கரூர் மாவட்டம், க.பரமத்தி பக்கமுள்ள பெரியதிருமங்கலம் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ஜோதிமணி. தந்தை சென்னிமலை, தாய் முத்துலட்சுமி. அரசியல் பின்னணியோ, வசதி வாய்ப்புகளோ இல்லாத எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். விவசாயம்தான் பிரதான தொழில். 'படிப்புதான் வாழ்வில் உயர்வைத் தரும்' என்ற உந்துதலை சிறுவயதிலேயே கொண்ட ஜோதிமணி, நன்றாகப் படித்தார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி கணிதமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, எம்.பில் படிப்பையும் நிறைவு செய்தார். கல்லூரி காலத்திலேயே அரசியல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அரவக்குறிச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த எஸ்.எஸ்.சதாசிவத்தைக் குருவாக ஏற்றுக்கொண்டு, பொதுவாழ்க்கையில் கால்பதித்தார். 

வெள்ளை மாளிகை சந்திப்பு:

1996-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கூடலூர் மேற்குப் பகுதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகத் தேர்வானார். தொடர் செயல்பாடுகளால் 2001-ல் மீண்டும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரானார். கால ஓட்டத்தின் இடையில், ப.சிதம்பரம் தொடங்கிய காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையில் கரூர் மாவட்டத் தலைவராக இருந்தார். மீண்டும் காங்கிரஸில் சிதம்பரம் இணைந்தபோது, ஜோதிமணிக்கு இளைஞர் காங்கிரஸ் கரூர் மாவட்டத் துணைத் தலைவர் பதவியை வாங்கித் தந்தார். அதன் பிறகு, 2006-ல் அமெரிக்க கவுன்சில் ஆண்டுதோறும் நடத்தும் உலகளாவியலான இளம் அரசியல்வாதிகளுக்கான வெள்ளை மாளிகை சந்திப்பில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். அதன்பிறகு, இளைஞர் காங்கிரஸைக் கையில் எடுத்த ராகுல்காந்தி ஆற்றல்மிகு நிர்வாகிகளைத் தேர்வு செய்தார். அந்த நேர்காணலில் வெளிப்படையாகப் பேசிய ஜோதிமணியைத் தேர்வு செய்த ராகுல், அவரை இளைஞர் காங்கிரஸின் தேசியச் செயலாளர் ஆக்கினார். அதோடு, இளைஞர், மகளிர் காங்கிரஸை வலுப்படுத்த உள்கட்சி மேற்பார்வையாளராகவும் சட்டமன்றத் தேர்தல் குழுவிலும் நியமிக்கப்பட்டு தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம், கேரளா என்று பல மாநிலங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதன்பிறகு, கட்சியின் செய்தித் தொடர்பாளராகத் தொடர்கிறார். இவை தவிர, 2007 முதல் 2010 வரை தமிழ்நாடு தணிக்கை வாரியக்குழுவில் ஒருவராக இருந்தார். திருமணமே செய்துகொள்ளாமல் பொதுவாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர். 

முந்தைய ரெக்கார்டு 

2011 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு 55,593 வாக்குகளைப் பெற்றார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்று தேர்தலைச் சந்தித்தபோது, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி 30,459 ஓட்டுகளைப் பெற்றார். இரண்டாவது முறையாக இப்போது கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகியிருக்கிறார். 'இந்த முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஜோதிமணி கேபினட்டில் இணைவார்' எனத் தொகுதி முழுக்க பரவலாகப் பேச்சு அடிபடுகிறது. 

கண்ணு... கண்ணு! 

 'தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மாநிலத் தலைமை முடிவு செய்தது. ஆனால், கரூர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்குமாறு ராகுல்காந்தியே நேரடியாக ஸ்டாலினிடம் கூறிவிட்டார்' என்று காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியே வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு ஜோதிமணி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் ராகுல். தொகுதி இளைஞர்களை சமூகவலைதளங்கள் மூலம் ஈர்த்து வைத்திருக்கிறார். 'அவர் எதையாவது செய்வார்' என்ற நம்பிக்கை பெண்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. அதோடு, 45 வயது ஆகியும் திருமணம் செய்துகொள்ளாமல் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருவதால், பெண்கள் மத்தியில் ஜோதிமணி மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் அவரைச் சூழ்ந்துகொள்ளும் பெண்கள், `கண்ணு, கண்ணு' என்று வாஞ்சையோடு அழைக்கிறார்கள். தவிர, தி.மு.க உட்பட கூட்டணிக் கட்சிகளின் பலம் இவருக்குத் தெம்பை கொடுத்திருக்கிறது. கூட்டணிக்கட்சி தயவிலும் தனது சொந்த செயல்பாடுகள் மூலமும் இளைஞர் மற்றும் பெண்கள் ஓட்டுகளைக் கவர்ந்து வைத்திருக்கிறார். 

டாப் 5 சுவாரஸ்யங்கள்:

1. அரசியல்வாதி என்பது ஒருபக்கம் என்றால், இவர் ஒரு நல்ல எழுத்தாளரும்கூட. சமூகவலைதளங்களில் எழுதுவது ஒருபக்கம் இருக்க, இந்திரா என்ற பெயரில் ஒற்றைவாசனை என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டிருக்கிறார். தவிர, சித்திரக்கூடு என்ற நாவலையும் எழுதியிருக்கிறார். அதேபோல், `நீர் பிறக்கும்முன்' என்ற பெயரில் ஒன்றிய கவுன்சிலராக இருந்தபோது எதிர்கொண்ட கள அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வெளியிட்டிருக்கிறார். 

2. ராகுல்காந்தி உள்ளிட்ட நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்கள் இவரை 'ஜோதி' என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். 

3. தாய்மீது அளவில்லாத பாசம் வைத்திருந்தவர். அவர் சமீபத்தில்தான் மறைந்தார். 'நான்தான் கொள்ளிப்போடுவேன்' என்று பிடிவாதமாக இருந்து, தாய்க்கு இறுதிகாரியம் செய்தார். பெற்றோர் எவ்வளவோ வற்புறுத்தியும், திருமணம் செய்ய மறுத்துவிட்டார். 'காமராஜர் மாதிரி திருமணம் செய்துகொள்ளாமல் மக்களுக்குச் சேவையாற்றப்போகிறேன்' என உறுதியாக நின்றார். 

4. கரூர் மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் நலனில் அதீத அக்கறை கொண்டவர். 'கற்க கசடற' என்ற பெயரில், கரூர் பகுதி மாணவர்கள், இளைஞர்களுக்கு கல்விசார்ந்த பல்வேறு முயற்சிகளை வெளியில் தெரியாமல் முன்னெடுத்து வருகிறார்.

5. சொந்தக் கிராமத்தின் மக்களும் தொகுதி மக்களும், 'கண்ணு' என வாஞ்சையோடு அழைக்கிறார்கள். 

டாப் 3 சர்ச்சைகள்: 

1. காங்கிரஸில் இருந்து சில காலம் இவரை ஒதுக்கி வைத்திருந்தாகத் தகவல் வெளியானது. ஆனாலும், தேசிய, மாநில செய்தித் தொடர்பாளர் என்ற அடைமொழியோடு ஊடக விவாதங்களில் பங்கெடுத்தார்.

2. 2016 சட்டமன்றத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதி கூட்டணிக் கட்சியான தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. கே.சி.பழனிசாமி வேட்பாளராக்கப்பட்டார். ஆனால், 'அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரஸுக்குத் தராவிட்டால், சுயேச்சையாகப் போட்டியிடுவேன்' எனத் தலைமையை எச்சரித்தார். பின்னர், எதோ காரணத்தால் போட்டியில் இருந்து பின்வாங்கினார். 

3. சொந்தக் கட்சியையே சில நேரங்களில் வெளிப்படையாக விமர்சிப்பது.

சக வேட்பாளர்களின் ப்ளஸ், மைனஸ்: 

ஜோதிமணிக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை. ஐந்தாவது முறையாக தம்பிதுரை போட்டியிடுகிறார். இதில், நான்கு முறை தொகுதியைக் கைப்பற்றியிருக்கிறார். கடந்த இருமுறையும் தம்பிதுரையே எம்.பியாக இருக்கிறார். இப்போது ஜெயித்தால் ஹாட்ரிக் வெற்றியை தம்பிதுரை ருசிப்பார். தொகுதி முழுக்க அறிமுகமானவர், தொகுதியில் நிரம்பியிருக்கும் வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது ப்ளஸ். கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் பணத்தை தண்ணீராக செலவழிப்பதும் தம்பிதுரைக்கு நம்பிக்கை தரும் விஷயங்கள்.

'தொகுதியில் நான்கு முறை எம்.பியாக இருந்தும், உருப்படியாக ஒரு திட்டத்தைகூட நிறைவேற்றவில்லை' என்பது மிகப் பெரிய மைனஸ். 'ஒரு கிராமத்தில்கூட குடிக்க சரியான தண்ணீர் வசதியைகூட இவரால் ஏற்படுத்தி தரமுடியவில்லை' எனப் பொதுமக்களே கடும் எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.

அடுத்ததாக, அ.ம.மு.க. சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.என்.தங்கவேல் போட்டியிடுகிறார். எளிமையானவர், ஓரளவு செலவு செய்யக்கூடியவர் என்பது இவருக்குப் ப்ளஸ். ஆனால், மாவட்டத்தில் வலுவாக இருந்த அ.ம.மு.க.வை அந்த கட்சியில் இருந்து சமீபத்தில் தி.மு.க.வுக்கு தாவிய செந்தில்பாலாஜியும்  ஆளுங்கட்சியினர் கரைத்துவிட்டனர். அமமுகவில் இருந்த பலரும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடம்பெயர்ந்துவிட்டனர். இவையெல்லாம் அ.ம.மு.க.வுக்குப் பெரிய மைனஸ். இவர்களை தவிர, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் மருத்துவர் ஹரிஹரனால் பெரிய பாதிப்பு ஏற்படப்போவதில்லை. 

ராகுல்காந்தியின் ஆசிர்வாதத்தோடு பல மாநிலங்களில் தேர்தல் பணியாற்றியவர் ஜோதிமணி. அந்த அனுபவமும் ஆற்றலும் இந்தத் தேர்தலில் அவருக்கு 'கை' கொடுக்கிறது. கூட்டணிக் கட்சியான தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் தேர்தல் வியூகமும் ஜோதிமணிக்குப் பலம் சேர்க்கிறது. மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பும் சொந்தத் தொகுதி மக்களின் கொதிப்பும் தம்பிதுரைக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பணத்தை வாரியிறைத்தாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் அ.தி.மு.க உறுதியாக இருக்கிறது. `தம்பிதுரையின் ஹாட்ரிக் வெற்றியைத் தடுத்து, நாடாளுமன்றத்துக்குள் பிரகாசமாக செல்வாரா ஜோதி?’ என்பதற்கான விடை வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.