Published:Updated:

கீழடி பெருமை vs கரன்ஸி மகிமை! மதுரை சவாலை முறியடிப்பாரா சு.வெங்கடேசன்!?

எழுத்தாளர் டு வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு தேர்தல் களத்தில் சாதகமான விஷயங்கள் என்னென்ன, சவால்கள் என்னென்ன?

கீழடி பெருமை vs கரன்ஸி மகிமை! மதுரை சவாலை முறியடிப்பாரா சு.வெங்கடேசன்!?
கீழடி பெருமை vs கரன்ஸி மகிமை! மதுரை சவாலை முறியடிப்பாரா சு.வெங்கடேசன்!?

நட்சத்திர வேட்பாளர்: சு.வெங்கடேசன் (மதுரை) 

காவல் கோட்டத்தின் கதை: 

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம், நல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரிக் காலத்திலேயே படைப்பு உலகத்துக்குள் வந்துவிட்டார். 1989-ல் ‘ஓட்டை இல்லாத புல்லாங்குழல்’ என்ற கவிதை நூலை வெளியிட்டபோது, முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தார். மார்க்ஸியத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக, சி.பி.எம் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வருகிறார். உத்தபுரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு சம்பவத்தில் களப் பணியை மேற்கொண்டார். தீண்டாமை ஒழிப்புக்காகத் தொடர்ந்து இயங்கி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, பின்னர் அதே அமைப்பின் மாநிலத் தலைவராக உயர்ந்தார். 2011-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இவரது `காவல் கோட்டம்’ நாவலுக்கு வழங்கப்பட்டது. இந்தப் புதினத்தை அடிப்படையாக வைத்து `அரவான்’ என்ற படத்தை இயக்கினார் வசந்தபாலன். மார்க்ஸியத்தோடு ஆன்மிக புத்தங்களையும் படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் சு.வெங்கடேசன். 

எழுத்தாளர் டு வேட்பாளர் 

மதுரை மண்ணின் மைந்தன். தனது எழுத்துக்களின் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மதுரை மக்களுக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர். 2006 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தேர்தலில் போட்டியிட்டு, இரண்டாம் இடம் பிடித்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.கே.போஸைவிட 10,000 வாக்குகளைக் குறைவாகப் பெற்றிருந்தார். `லஞ்சத்துக்கு எதிரானவர், சட்ட திட்டங்களை மதித்து நடப்பவர்' என மக்கள் மத்தியில் இவருக்கென தனி செல்வாக்கு உள்ளது. 

டாப் 5 சுவாரஸ்யங்கள்! 

1. சு.வெ. என அவரது பெயரைச் சுருக்கமாக அழைப்பதை விரும்புவார். 

2. ரத்தின சுருக்கமாகக் கேட்பவர்களுக்கு விளங்கும் வகையில் மேடைகளில் பேசுவது தனிச் சிறப்பு. 

3. எந்த ஊருக்குச் சென்றாலும் அந்தப் பகுதியின் வரலாறுகளை நினைவுகூர்ந்து பேசுவார். 

4. கீழடி அகழாய்வு பற்றிய உலகளாவிய பார்வை ஏற்பட்டதற்கு இவர் எழுதிய வைகை நதி நாகரிகம் ஒரு காரணம். 

5. வாடகை வீட்டில் வசிப்பதால், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் வீட்டைக் காலி செய்ய வைத்துவிடுவார்கள் என அச்சப்பட்டாராம் வெங்கடேசன் மனைவி. அப்படி எதுவும் நடக்கவில்லை. 

டாப் 3 சர்ச்சைகள்

1. சி.பி.எம் கட்சியின் கவுன்சிலர் லீலாவதி மதுரையில் குடிநீர்ப் பிரச்னைக்காகக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், சு.வெங்கடேசனை சந்தித்துப் பேசியது. 

2. கடவுள் மறுப்பாளர் என்ற முத்திரையைக் குத்தி, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வது. 

3. காவல்துறையிடம் முன் அனுமதி பெறாமல் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த சர்ச்சையில் வழக்குப்பதிவு.

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ் 

வெங்கடேசனுக்குக் கடும் சவாலாக விளங்குகிறார் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்தியன். இரண்டு அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி மகனுக்குச் சீட் வாங்கியிருக்கிறார் ராஜன் செல்லப்பா. வெற்றி பெறுவது கௌரவப் பிரச்னையாக இருப்பதால், பணத்தைத் தண்ணீராக வாரியிறைக்கிறார். இதன் காரணமாக, பணத்துக்காக வாக்குகள் விழுந்தால் ராஜ் சத்யனுக்கான வாய்ப்புகள் அதிகம். 

அதேநேரம், அ.தி.மு.வு-க்குக் கிடைக்கப்போகும் சாதி வாக்குகளையும் கட்சி ஓட்டுக்களையும் அ.ம.மு.க வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை பிரித்துவிடுவது சு.வெங்கடேசனுக்கான ப்ளஸ். மேலூர் உள்ளிட்ட இடங்களில் அ.ம.மு.க-வுக்கு வாய்ஸ் இருப்பதால், இந்தப் பகுதிகளில் அ.தி.மு.க-வின் செல்வாக்கு சற்று அடங்கியிருக்கிறது. 

வெற்றிக்கான சாத்தியம்: 

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களையும் அடுத்து செய்யப்போவதையும் மக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகிறார் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்யன். கடந்த 5 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளால் தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை பிரசாரத்தின் மையப் பொருளாக எடுத்துச் செல்கிறார் சு.வெ. மண்ணின் மைந்தன், எழுத்தாளர், தி.மு.க கூட்டணி பலம், மத்திய, மாநில அரசுகளின் மீதான அதிருப்தி போன்றவற்றால் களத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறார் சு.வெங்கடேசன். வாக்குகளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக பணம் இருப்பதும் மார்க்சிஸ்டுகளுக்கான பெரிய சவால்.