Published:Updated:

வடிவேல் காமெடி, ராமதாஸ் பதற்றம், கரன்ஸி கட்டுகள்! - சிதம்பரத்தில் திருமாவளவனின் வியூகம் என்ன? 

வடிவேல் காமெடி, ராமதாஸ் பதற்றம், கரன்ஸி கட்டுகள்! - சிதம்பரத்தில் திருமாவளவனின் வியூகம் என்ன? 
வடிவேல் காமெடி, ராமதாஸ் பதற்றம், கரன்ஸி கட்டுகள்! - சிதம்பரத்தில் திருமாவளவனின் வியூகம் என்ன? 

"பரிசுப் பெட்டியையும் இலையின் கரன்ஸி வீச்சுக்களையும் தாண்டி பானை சின்னத்தைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் சிதம்பரம் மக்கள்" என நம்பிக்கையோடு வலம் வருகின்றனர் சிறுத்தைகள். அது நடக்குமா?

தொல்.திருமாவளவன் (சிதம்பரம் தொகுதி)

தடயவியல் டு தொல்.திருமாவளவன்:

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தொல்காப்பியன், பெரியம்மாள் தம்பதிக்கு 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி மகனாகப் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் வேதியியல் பட்டம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ குற்றவியல் படிப்பு, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், அண்மையில் முனைவர் பட்டம் பெற்றார். மதுரை அரசு தடயவியல் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணியாற்றியவர், தலித் பேந்தர்ஸ் அமைப்பில் இணைந்து செயலாற்றி வந்தார். அந்த இயக்கத்தின் தலைவராக இருந்த மலைச்சாமியின் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், நீங்களே தலைமையேற்க வேண்டும் எனக் கூறியதை ஏற்றுக்கொண்டார்.

அரசுப் பணியில் இருந்தபோதும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து இயங்கினார். 1992-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைத் தொடங்கினார். இயக்கப் பணிகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால், இதுவரையில் திருமணமே செய்துகொள்ளவில்லை. தேர்தல் அரசியலுக்குள் திருமாவளவனை அழைத்து வந்த பெருமை ஜி.கே.மூப்பனாரையே சேரும். தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்ததால், அரசுப் பணியை உதறினார். தற்போது ஐந்தாவது முறையாக சிதம்பரம் தொகுதியில் களம் காண்கிறார். 

87 கொடுத்த கொதிப்பு:

சிதம்பரம் தொகுதியில் 1999-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்குமுறை போட்டியிட்டாலும், 2009-ம் ஆண்டு மட்டுமே வெற்றி பெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட அவர் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வியுற்றார். இதே தேர்தலில் திருமாவளவன் என்ற பெயரில் போட்டியிட்டவர், ஆயிரக்கணக்கான வாக்குகளைப் பெற்ற அதிசயமும் நடந்தது. எம்.பி-யாக இருந்த காலகட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை, காவிரி விவகாரம் போன்றவற்றுக்காக நாடாளுமன்றத்தில் உரத்துக் குரல் கொடுத்தவர். 

டாப் 5 சுவாரஸ்யங்கள்:

1. காலை 6 மணிக்கு எழும் திருமாவளவன், இரவு 12 மணிக்கு மேல்தான் தூங்கச் செல்வார். 
2. சைவப் பிரியர். பச்சைக் காய்கறி, பாதி வேகவைத்த காய்கறி, ஆம்லேட், காய்கறி சூப் ஆகியவை பிடித்த உணவுகள்.
3. அண்ணன் என அழைத்த தொண்டர்கள், முனைவர் பட்டம் பெற்றதால் டாக்டர் என விளிக்கின்றனர். 
4. ஓய்வு நேரங்களில் ஜாலியாக உரையாடுவது, வடிவேல் காமெடியை ரசிப்பது பொழுதுபோக்கு.
5. கட்சி நிர்வாகிகள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை வைக்கும்போதே பண உதவி செய்வது வழக்கம்.

டாப் 3 சர்ச்சைகள்: 

1. அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால் தொகுதிப் பக்கம் தலைகாட்டாமல் இருப்பது.
2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீதான சமுதாயரீதியான குற்றச்சாட்டுகள்.
3. திருமாவளவன் பேசியதாக சர்ச்சையை ஏற்படுத்திய ஆடியோ, வீடியோ.

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்

அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக சந்திரசேகரன் களமிறங்கியிருக்கிறார். ஆளும்கட்சி பலம், தொகுதிக்குட்பட்டு இருக்கும் 5 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், அரசு கொறடா தாமரை ராஜேந்திரனின் ஆதரவு போன்றவை இவருக்கான ப்ளஸ். கூட்டணிக் கட்சிகளுக்கும் பணத்தை வாரியிறைப்பது மற்றொரு ப்ளஸ். பா.ம.க நேரடியாகப் போட்டியிடாவிட்டாலும் திருமாவளவனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் ராமதாஸ். சமீபத்தில் அரியலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "சிதம்பரம் தொகுதியில் நான்தான் போட்டியிடுகிறேன் என நினைத்து தேர்தல் பணியாற்றுங்கள். எதிரணியில் போட்டியிடும் திருமாவளவனை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்" எனக் கொதித்தார். மோடி எதிர்ப்பு அலை, தொகுதிக்கு அறிமுகம் இல்லாதது போன்றவை அ.தி.மு.க வேட்பாளருக்கான பெரிய மைனஸ்கள். 

பிரசாரத்தில் மோடி எதிர்ப்பு ஆயுதத்தைக் கூர்தீட்டி வருகிறார் திருமாவளவன். "மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை அழித்து ஒழித்துவிடுவார். அம்பேத்கர் எழுதிய சட்டம் இந்தியாவை ஆளக்கூடாது என்பதுதான் அவரது நோக்கம். இரட்டை இலைக்கு வாக்களித்தால் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர நேரிடும். ஜெயலலிதா இப்போது இல்லை. அக்கட்சிக்கு வாக்களித்தால் வாக்குகள் சிதறி நிலைமை என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள்" என வாக்காளர்களுக்கான கேள்விகளாக முன்வைக்கிறார். அவரது பேச்சுக்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகி வருகிறது. அ.தி.மு.க-வுக்கு இணையாகப் பணத்தைச் செலவு செய்யவும் சிறுத்தைகள் தயாராகி வருவது பறக்கும் படைகளின் பார்வையை, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாகவே, காரின் கதவுப் பகுதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய்கள் சிக்கின. 

அ.ம.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் இளவரசன், அ.தி.மு.க. வேட்பாளருக்குக் கடும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் பிரசாரம் செய்து வருகிறார். பணம் பிரதானமாக இருப்பதால், சிதம்பரம் தொகுதி திருமாவளவனுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. களநிலவரம் கடுமையாக இருந்தாலும் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் போன்ற கூட்டணிக் கட்சிகளின் அடிப்படை வாக்குகளும் தொகுதி முழுவதும் நிரம்பியிருக்கும் பட்டியலின மக்களின் வாக்குகளும் திருமாவளவனுக்குப் பெரும் பலம். "பரிசுப் பெட்டியையும் இலையின் கரன்ஸி வீச்சுக்களையும் தாண்டி பானை சின்னத்தைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் சிதம்பரம் மக்கள்" என நம்பிக்கையோடு வலம் வருகின்றனர் சிறுத்தைகள். 

அடுத்த கட்டுரைக்கு