Published:Updated:

பரிசுப் பெட்டி வேட்பாளர் பெயரில் குக்கர் வேட்பாளர்கள்..! தினகரனுக்கு குடைச்சல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இதுதான் நடந்தது. முதலில் தொப்பி சின்னம் கொடுத்தார்கள். அதை மக்களிடம் கொண்டு சென்றோம். தேர்தல் ரத்தானதும், குக்கர் சின்னம் கொடுத்தனர். வேறு ஒரு சுயேச்சைக்கு தொப்பி கொடுத்தனர். ஆனாலும், குறிப்பிட்ட நாள்களுக்குள் குக்கர் சின்னத்தையும் மக்களிடம் கொண்டு சென்று மாபெரும் வெற்றி பெற்றோம்.

பரிசுப் பெட்டி வேட்பாளர் பெயரில் குக்கர் வேட்பாளர்கள்..! தினகரனுக்கு குடைச்சல்
பரிசுப் பெட்டி வேட்பாளர் பெயரில் குக்கர் வேட்பாளர்கள்..! தினகரனுக்கு குடைச்சல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றார் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இரட்டை இலைச் சின்னதுக்கான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், அ.ம.மு.க -வை இன்னும் கட்சியாகப் பதிவுசெய்யாமல் இருக்கிறார் தினகரன். அதனால் பொதுச் சின்னத்தை ஒதுக்காமல் இருந்தது தேர்தல் ஆணையம். "ஆனாலும், கட்சியைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம். இப்போது தேர்தல் என்பதால் உரிய நேரம் இல்லை" என உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கைவைத்து 59 தொகுதிகளுக்கும் ஒரு பொதுவான சின்னத்தை வழங்கும்படி கேட்டிருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அ.ம.மு.க-வுக்குப் பொதுவான ஒரு சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

மேலும், தினகரன் கேட்ட குக்கர் சின்னத்தைக் கொடுக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டது. வேறு யாருக்கும் இதே குக்கர் சின்னத்தைக் கொடுக்கக் கூடாது என்ற தினகரன் தரப்பின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு அ.ம.மு.க-வுக்குப் பரிசுப் பெட்டி பொதுச் சின்னமாகக் கிடைத்தது. அதுவும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளன்றுதான் சின்னமே கிடைத்தது.

இந்நிலையில், சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 'திருவாரூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர் மற்றும் சாத்தூர்' தொகுதிகளில் அ.ம.மு.க வேட்பாளர்களின் பெயர்கொண்ட சுயேச்சை வேட்பாளர்களுக்குக் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் எஸ்.காமராஜ்; அவருக்கு பரிசுப் பெட்டி. அதே தொகுதியில் மற்றொரு சுயேச்சை வேட்பாளர் பி.காமராஜுக்கு குக்கர் சின்னம். அரூர் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் ஆர்.முருகனுக்கு பரிசுப்பெட்டி; பி.முருகனுக்கு குக்கர் சின்னம்.

சாத்தூரிலும் அ.ம.மு.க வேட்பாளர் எஸ்.சி.சுப்பிரமணியம் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட இருக்கும் நிலையில் அங்கும், அவரது பெயரிலேயே சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதுபோன்றே பல இடங்களிலும் பரிசுப் பெட்டி, குக்கர் சின்னம் இடம்பெற்றிருப்பது குழப்பத்தை உருவாக்கியுள்ளது. 

இந்த இரண்டு சின்னங்களும் வாக்களிக்கும் இயந்திரத்தில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. இதனால் அ.ம.மு.க வேட்பாளர்கள் பலரும் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் பெரம்பூர் தொகுதி வேட்பாளருமான வெற்றிவேல் கூறுகையில், ``தேர்தல் ஆணையம் சின்னத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று எங்களிடம் 36 சின்னங்களைக் காண்பித்தார்கள். அவற்றில் 35 சின்னங்கள் தேறாதவை. நல்லபடியாக இருந்தது பரிசுப்பெட்டி சின்னம்தான். கடைசி நேரத்தில் சின்னம் கிடைத்தாலும், அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டோம். எங்களுடைய பிரசாரத்தால் தற்போதைய அரசு பயந்துபோய்தான் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கிறது. இவையெல்லாம் திட்டமிட்டே நடந்திருக்கிறது.       

எங்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக ஆளும்கட்சிகள் செய்த சூழ்ச்சி. ஆனாலும், மக்கள் எங்களைக் கண்டுகொண்டார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் இதுதான் நடந்தது. முதலில் தொப்பி சின்னம் கொடுத்தார்கள். அதை, மக்களிடம் கொண்டுசென்றோம். தேர்தல் ரத்தானதும், குக்கர் சின்னம் கொடுத்தனர். வேறு ஒரு சுயேச்சைக்கு தொப்பி கொடுத்தனர். ஆனாலும், குறிப்பிட்ட நாள்களுக்குள் குக்கர் சின்னத்தையும் மக்களிடம் கொண்டுசென்று மாபெரும் வெற்றிபெற்றோம். சின்னம் யாரிடம் இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர, சின்னம் முக்கியமல்ல என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள்'' என்றார்.

அ.ம.மு.க-வின் வாக்குகளைப் பிரிப்பதற்கே இதுபோன்ற காரியத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதாக மீண்டும் ஒருமுறை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.