Published:Updated:

"மோடியை முதல்வராக்கலாம் வாங்கப்பு...!" - உளறிக் கொட்டும் கஞ்சா கருப்பு

"மோடியை முதல்வராக்கலாம் வாங்கப்பு...!"  - உளறிக் கொட்டும் கஞ்சா கருப்பு
"மோடியை முதல்வராக்கலாம் வாங்கப்பு...!" - உளறிக் கொட்டும் கஞ்சா கருப்பு

"மோடியை முதல்வராக்கலாம் வாங்கப்பு...!" - உளறிக் கொட்டும் கஞ்சா கருப்பு

ரூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரைக்காக வாக்குகள் சேகரிக்க வந்த காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தனது பிரசாரத்தில், "கேப்டன் விஜயகாந்த், தனது ஆட்சியில் ஏழை மக்களுக்கு நிறைய திட்டங்களைச் செயல்படுத்தினாரு. தம்பிதுரை நான்கு மாவட்டங்களுக்குச் சபாநாயகரா இருந்து, மக்களுக்கு நல்லது பண்ணினாரு. மோடிக்கு ஓட்டுப் போட்டு முதலமைச்சர் ஆக்குங்க" என்று எக்குத்தப்பாகப் பேச, "ஏற்கெனவே கட்சியில் உள்ள முக்கியப் புள்ளிகள் பேசுறதே உளறலா இருக்கு. இதுல, இவரு வேற புதுசா கிளம்பி இருக்காரு" என்று அ.தி.மு.க-வினரே கமென்ட் அடித்தனர்.


கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையே மறுபடியும் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கரூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் அனல்பறக்கத் தொடங்கியிருக்கிறது. தம்பிதுரை ஒருபக்கம் வாக்குகள் கேட்டுப் பயணிக்க, அவருக்காக இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பிரசாரம் செய்தார் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. அவரைப் பார்த்ததும், திரண்டிருந்த மக்கள் உற்சாகமானார்கள். 'ஐ... நம்ம பஞ்சாயத்துடோய்...' என்று கமென்ட் அடித்தனர். பெரியவர்களைவிட, சிறுவர்களும் பள்ளி மாணவர்களும் கஞ்சா கருப்பைப் பார்க்க ஆர்வமாகத் திரண்டனர். 

அப்போது பேசிய அவர், "எல்லோருக்கும் வணக்கமுங்க. அந்தக் காலத்துல மறைஞ்ச முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரு தகதகனு மின்னிகிட்டு, உங்ககிட்ட ஓட்டுக் கேட்டு வருவாரு. அது திருவிழாபோல இருக்கும். நானும் எம்.ஜி.ஆரு ரசிகர்தான். நான் பொறந்ததே டூரிங் டாக்கீஸ் கொட்டாயிலதான். எங்கம்மா, மர்மக்காய்ச்சல் வருதுனு என் கையில அ.தி.மு.க கொடியைப் பச்சையா குத்திட்டாங்க. மனுசன் வாழ என்ன வேணும்... வீடுதானே? ஏழைகளுக்கு வீடு கொடுத்தது அம்மா அரசு. வீடு கொடுத்தா போதுமா... மக்கள் வசிக்க மின்சாரம் வேண்டாமா? அதான், அம்மா ஏழைகளுக்கு மூணு யூனிட் மின்சாரத்தை ஃப்ரீயா கொடுத்தாங்க. அதுமட்டுமா. பெண்கள் நோகாம மாவாட்ட கிரைண்டர் கொடுத்தாங்க. அப்புறம், 'ட்ரூ ட்ரூ'னு சத்தம் போட்டு மிளகாய், சட்னி அரைக்க மிக்ஸி கொடுத்தாங்க. அப்புறம், சூடான இட்லியை ஆற வைக்க, கிறுகிறுனு சுத்துமே, அதாங்க ஃபேன் கொடுத்தாங்க. அப்புறம், இப்ப நாட்டுல பொம்பள புள்ளைங்களுக்கு நடக்குற அநீதிகளைத் தடுக்க, அப்பவே அம்மா படிக்கிற பொம்பள புள்ளைங்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்தாங்க. அதுக்கு முன்னாடி நடந்துபோன பிள்ளைங்கள பார்த்து, ரவுடிப் பசங்க விசில் அடிச்சாங்க. இப்போ, அம்மா கொடுத்த சைக்கிள்ல போற பிள்ளைங்க, வேகமா போய் ரவுடிகளைப் பார்த்து, 'அம்மா கொடுத்த சைக்கிள். எங்களைப் புடிக்க முடியாது'னு விசில் அடிச்சுட்டுப் போறாங்க. பெண்கள் திருமணத்துக்கு, ஒரு பவுன் தாலி கொடுக்குறாங்க. அதனால், காசியிலே விசாலாட்சி, காஞ்சியிலே காமாட்சி, மதுரையிலே மீனாட்சி, தமிழகத்தில் நடப்பதோ அம்மா ஆட்சி. நீங்க இரட்டை இலைக்கு ஓட்டுப் போடணும்" என்றார். 

தொடர்ந்து அவர், "தம்பிதுரை நாலு மாவட்டத்துக்கு சபாநாயகரா இருந்தார்(?). அவருக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க" என்று எடக்குமடக்காகப் பேசினார். அப்போது, காணியாளம்பட்டி என்ற கிராமத்தில் குழுமி இருந்த பெண்கள், "தண்ணீர்ப் பிரச்னை தலைவிரிச்சாடுது. அதைத் தீர்க்க தம்பிதுரை எதுவும் பண்ணலை" என்று கோபத்தோடு கேட்க, ஒருகணம் திகைத்துப் போனார். பின்பு, "இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க, நீங்க போதும் போதும்னு சொல்ற அளவுக்குத் தண்ணீர் தானா வரும். தம்பிதுரை அதுக்கு நிறைய திட்டம் வச்சுருக்கார். அப்படி இல்லைன்னா, தாமிரபரணி படத்துல நான் நடிச்சமாதிரி, நதிநீரை இணைச்சுடலாம்" என்று கூற, மக்கள் செம கடுப்பானார்கள்.

அடுத்த பாயின்டில் கஞ்சா கருப்பு பேசியது இன்னும் உளறல் ரகம். "அ.தி.மு.க-வோடு தே.மு.தி.க-வும் கூட்டணி வச்சுருக்காங்க. 
கேப்டன் அவர்கள், அவரோட ஆட்சியில் ஏகப்பட்ட திட்டங்களைச் செஞ்சுருக்காரு. தஞ்சாவூர் தர்ம ஆஸ்பத்திரியில நோயாளிகளுக்கு பெட், தலையணை எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறாரு. அதேபோல், நம்ம மோடி கட்சி நம்ம கட்சியோட கூட்டணிப் போட்டிருக்கு. நாமெல்லாம் ஓட்டுப் போட்டு மோடியை முதல்வராக்குவோம்" என்று இஷ்டத்துக்கு அள்ளிவிட்டார். தொடர்ந்து, "பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 1,000 வழங்கிய திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதால் நடந்தது" என்றார். அதேபோல், "தாய்மார்களுக்கு பெண் பிள்ளைகள் பிறந்தால் 20,000 ரூபாயும், ரெண்டு குழந்தைகள் பிறந்தால் 50,000 ரூபாயும் தருது நம்ம அரசு" என்று ஒரு பாயின்டில் பேசினார். மற்றொரு பாயின்டிலோ, "தாய்மார்களுக்குப் பெண் பிள்ளை பிறந்தால், இந்த அரசு 18,000 தருது" என்று வாயில் வந்ததைப் பேசி, குழுமி இருந்த மக்களை முணுமுணுக்க வைத்தார்.

 இதுபற்றி, நம்மிடம் பேசிய அ.தி.மு.க முக்கிய நிர்வாகி ஒருவர், "ஏற்கெனவே, எடப்பாடி பழனிசாமி 'சேக்கிழார்' என்று உளறினார். செல்லூர் ராஜு தெர்மாகோல் தொடங்கி பல விசயங்களில் இஷ்டத்துக்கு உளறுகிறார். இது போதாதென்று, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாரம் ஒருதடவை உளறுகிறார். 'ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்' என்று உளற ஆரம்பித்தவர், 'மோடியின் பேரன் ராகுல் காந்தி', 'பா.ம.க வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் வாக்களியுங்கள்' என்பது வரை வெரைட்டியாக உளறி, கட்சி மானத்தை கப்பலேத்தி வருகிறார். ராஜேந்திர பாலாஜி தன் பங்குக்கு  விசித்திரமாகப் பேசி வருகிறார். இது பத்தாதுன்னு, கஞ்சா கருப்பு மாதிரி ஆள்களைக் களமிறக்கி, எல்லாரும் தனித்தனியாக உளறுவதை விட்டுவிட்டு ஒரே ஆளைவிட்டு, மொத்தமா உளறவிடுறாங்க. இது எங்கேபோய் முடியுமோனு கவலையா இருக்கு. கட்சிக்கு நல்ல தலைமை இல்லங்கிறதையே இது காட்டுது" என்றார் வேதனையோடு.

தேர்தல் வந்தால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. நடிகர்களுமே உளற ஆரம்பித்துவிடுகிறார்கள்...

அடுத்த கட்டுரைக்கு