Published:Updated:

”படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம், பார்ப்பது சமையல் வேலை!” - தென்சென்னைத் தொகுதி திருநங்கை வேட்பாளர் ராதா

”படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம், பார்ப்பது சமையல் வேலை!” - தென்சென்னைத் தொகுதி திருநங்கை வேட்பாளர் ராதா
”படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம், பார்ப்பது சமையல் வேலை!” - தென்சென்னைத் தொகுதி திருநங்கை வேட்பாளர் ராதா

டைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடும் ஒரே திருநங்கை வேட்பாளர் ராதா. தென்சென்னைத் தொகுதியிலிருந்து `கம்யூட்டர் மௌஸ்' சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் ராதா உட்பட மொத்தம் மூன்று மாற்றுப் பாலினத்தவர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்த தமன்னா, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர.லோகேஷை எதிர்த்து மங்களகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளாவில் சிஞ்சு அஷ்வதி என்கிற தனிப்பாலின (InterSex) வேட்பாளர் எர்ணாகுளம் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். மாற்றுப் பாலினத்தவர்களை மனிதர்களாகக்கூட ஏற்றுக்கொள்ளத் தயங்கிய சமூகத்தில் அவர்கள் தேர்தல் அரசியலில் களமிறங்கியிருப்பது மனிதத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதாக அமைந்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் தன்னுடைய கம்யூட்டர் மௌஸ் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திருநங்கை ம.ராதாவிடம் பேசினோம்.

``என் பெயர் ராதா. ஐம்பது வயதாகிறது. திருநங்கையான நான், எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிச்சிருக்கேன்!” என்று ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தொடங்கியதும் நாம் ஆச்சர்யமாகப் புருவம் உயர்த்த அவர் தொடர்ந்து அவரைப் பற்றி விவரித்தார். ``நான் 25 வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். என்னுடைய சக தோழிகளுடன்தான் தங்கியிருக்கிறேன், எனக்கு அப்பா, அம்மா ரெண்டு பேரும் இறந்துட்டாங்க. கூடப் பிறந்தவங்க சென்னையில்தான் வசிக்கிறாங்க. ஆனாலும், அவர்களுடன் போக்குவரத்து கிடையாது. என்றைக்காவது ஒருநாள் அரிதாக போன் செஞ்சு பேசுவாங்க. நான் இந்தளவுக்குப் படித்திருந்தாலும் திருநங்கை என்பதாலேயே எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், என்னுடைய சமையல் ஆர்வம் எனக்குக் கைகொடுத்தது. தெரிந்தவர்கள் வீட்டுக்குச் சமைத்துக் கொடுப்பதில் கிடைக்கும் பணம், வீட்டு வாசல்களில் அல்லது கடைகளின் வாசல்களில் கோலம் போடுவது எனக் கிடைக்கும் வருமானத்தில்தான் என் பிழைப்பு ஓடுகிறது. எனக்கு அரசியல் பற்றி அதிக படிப்பினைகள் கிடையாது. ஆனால், பெண்கள், திருநங்கைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் என நாளுக்கு நாள் செய்தித்தாள்களில் படிப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. நமக்குப் பாதுகாப்பு வேண்டுமென்றால் நாம்தான் களமிறங்க வேண்டும். அதனால்தான் இந்தத் தேர்தலில் நிற்கிறேன். என்னுடைய தோழிகளும் என்னால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார்கள். தேர்தலுக்காகச் செலவிடவேண்டிய பணத்துக்குக்கூட தங்களின் உழைப்பிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து உதவினார்கள். என்னுடைய பகுதியில் உள்ள மக்களும் என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதால் நான் வேட்பாளராக நிற்கிறேன். தேர்தலில் நான் போட்டியிடுவதை இப்பகுதி மக்களும் வரவேற்கிறார்கள். தென்சென்னைத் தொகுதியில் அடங்கிய மயிலாப்பூர் தொடங்கி குயில்தோட்டம், பட்டினப்பாக்கம்வரை கழிவறைப் பிரச்னை, ரேஷன் கடைப் பிரச்னை எனப் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இந்தத் தொகுதியில் நான் பல வருடங்களாக குடியிருப்பதால் இங்குள்ள பிரச்னைகள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அது குறித்த விழிப்புணர்வும் உள்ளது. ஆண்கள் என்றால் வீரம், பெண்கள் என்றால் ஈரம் என்று சொல்லுவார்கள். நான் திருநங்கை வீரமும், ஈரமும் ஒருங்கே படைத்தவள். என்னுடைய உழைப்புக்கு ஒரு லட்சம் வாக்குகள் எனக்குக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்று எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தெள்ளத் தெளிவாகச் சிரித்தபடியே பேசுகிறார் ராதா.

தென் சென்னைத் தொகுதியில் ராதா வெற்றி பெற்றால் நாட்டின் முதல் திருநங்கை நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருப்பார்.  

உங்கள் தன்னம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துகள் ராதா!.

அடுத்த கட்டுரைக்கு