Published:Updated:

டி.ஆர்.பாலு கடுப்பு; தம்பி ஆதிக்கம்; அதிரும் ஆட்டோ! - பழனிமாணிக்கத்துக்குக் கை கொடுக்குமா தஞ்சை?

டி.ஆர்.பாலு கடுப்பு; தம்பி ஆதிக்கம்; அதிரும் ஆட்டோ! - பழனிமாணிக்கத்துக்குக் கை கொடுக்குமா தஞ்சை?
டி.ஆர்.பாலு கடுப்பு; தம்பி ஆதிக்கம்; அதிரும் ஆட்டோ! - பழனிமாணிக்கத்துக்குக் கை கொடுக்குமா தஞ்சை?

தஞ்சை உடன்பிறப்புகள் மத்தியில் இவருக்கெனத் தனி செல்வாக்கு உண்டு. அதேநேரம் உள்கட்சி அரசியலுக்கும் பெயர் போனவர். தி.மு.க. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவுக்கும் இவருக்கும் இடையேயான மோதல் ஊர் அறிந்த ஒன்று. இதை மீறி ஸ்கோர் செய்வாரா பழனிமாணிக்கம்?

நட்சத்திர வேட்பாளர்: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

நான் ஒரு விவசாயி!

தஞ்சாவூர் அருகே உள்ள நாட்டாணி என்ற குக்கிராமத்தில் 1950-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிறந்தார். தன்னுடைய கிராமத்திலேயே தொடக்கக் கல்வியை முடித்தவர், மேல்படிப்பைத் தஞ்சாவூரில் தொடர்ந்தார். பின்னர், சென்னைச் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை நிறைவு செய்தார். விவசாயம்தான் பிரதான தொழில். எந்த இடத்தில் இருந்தாலும், ``நான் ஒரு விவசாயி" என எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்வார். திராவிட இயக்கத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக, தி.மு.கவில் இணைந்தார். விவசாய அணி அமைப்பாளர், மாநில மாணவரணி அமைப்பாளர் எனப் பல பொறுப்புகளை வகித்தார். 

3 தோல்வி - 5 வெற்றி

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து எட்டு முறை போட்டியிட்டிருக்கிறார். இதில், முதல் மூன்று முறை தோல்விகளையே சந்தித்தவர், பின்னர் தொடர்ந்து 5 முறை வெற்றிக் கோட்டையைக் கட்டினார். சோழ நாட்டை தி.மு.கவின் கோட்டையாக மாற்றிக் காட்டினார். மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர். இவர் பதவி வகித்த காலத்தில்தான் விவசாய, கல்விக் கடன்களை அதிகளவில் வழங்கினார் எனக் கட்சிக்காரர்கள் பெருமிதப்பட்டுக் கொள்வது வழக்கம். 

தஞ்சை உடன்பிறப்புகள் மத்தியில் இவருக்கெனத் தனி செல்வாக்கு உண்டு. அதேநேரம் உள்கட்சி அரசியலுக்கும் பெயர் போனவர். தி.மு.க முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவுக்கும் இவருக்கும் இடையேயான மோதல் ஊர் அறிந்த ஒன்று. தி.மு.கவின் சோழ மண்டலத் தளபதியாக இருந்த கோ.சி.மணியை ஓரங்கட்டியத்தில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்ற பேச்சும் உலா வந்து கொண்டிருக்கிறது. கருணாநிதியின் குட்புக்கில் நீண்டகாலம் இருந்த பழனிமாணிக்கம், அதே கருணாநிதியால் ஒதுக்கப்பட்ட வரலாறும் உண்டு. 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. `நன்றாக உழையுங்கள்... ஒருநாள் உழைப்புக்கான பலனை அடையலாம்' என்பது இவரது தாரக மந்திரம். 

2. கட்சிக்காரர்கள் மத்தியில், `பெரியவர்' என்றே அழைக்கப்படுகிறார். 

3. ஏழ்மை நிலையில் உள்ள தொண்டர்களுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ உடல்நலமில்லாமல் போய்விட்டால், தன் சொந்தச் செலவில் தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க வைப்பார். இதை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வது பழனிமாணிக்கத்தின் குணம். 

4. யாரைப் பார்த்தாலும் கும்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கை கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

5. பொறுப்பில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி... பரிந்துரைக் கடிதம் கேட்டு ஏராளமானோர் வருவது வழக்கம். அவர்களை அனைவருக்கும் உதவிகளைச் செய்து அனுப்புவார். 

டாப் 3 சர்ச்சைகள்: 

1. கட்சி நிர்வாகிளோ எம்.எல்.ஏக்களோ தன்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தால் நிற்க வைத்துத்தான் பேசுவார். 

2. பழனிமாணிக்கத்தின் தம்பி எஸ்.எஸ்.ராஜ்குமாரின் தலையீடு அதிகம் இருப்பதால், எதிர் அணிக்குச் சென்றவர்கள் அதிகம். 

3. சாதாரணமாக இவரைப் பார்க்க வேண்டும் என்றால் மூன்று நிலைகளைக் கடந்தே பார்க்கமுடியும் என்பது பிரதான குற்றச்சாட்டு. 

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்: 

அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா வேட்பாளராக என்.ஆர். நடராஜன் போட்டியிடுகிறார். பெரும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த இவரை, மைனர் வீட்டு மாப்பிள்ளை என்றே அழைக்கிறார்கள். முன்னாள் எம்.பி. வி.என்.சுவாமிநாதனின் மருமகன். தொகுதி முழுக்க சொந்தச் சமுதாயத்தின் பலத்தை நம்பி களம் காண்கிறார். எளிதில் இவரை அணுக முடியாது என்பது மைனஸ். கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் பொன்.முருகேசன், அ.ம.முக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இவரது கல்லூரியில் படித்தவர்களே வாக்கு சேகரித்து வருவது பிளஸ். பண மோசடி தொடர்பாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பது மிகப் பெரிய மைனஸ். 

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

``கஜா புயல் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளின் துயர் துடைப்பேன், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை வரவிடாமல் செய்வேன்" என்பதை பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துகிறார் தி.மு.க வேட்பாளர் பழனிமாணிக்கம். 

த.மா.கா வேட்பாளர் நடராஜனோ, ``விவசாயிகளுக்காக உழைத்து வரும் ஒரே கட்சி த.மா.காதான். நான் வெற்றி பெற்றால், தஞ்சை மண்ணில் விவசாயிகளின் துயர் துடைப்பேன்" எனப் பிரசாரம் செய்கிறார். ``அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கும் கல்விக்கான புதிய திட்டங்களைக் கொண்டு வருவதற்கும் பாடுபடுவேன்" என்பதை பிரசாரத்தின் மையக் கருத்தாக முன்வைக்கிறார் அ.ம.மு.க வேட்பாளர் முருகேசன். 

தற்போதைய நிலையில் தி.மு.க தரப்பிலிருந்து பணவிநியோகம் எதுவும் தொடங்கவில்லை. பெரும் செல்வந்தராக இருப்பதால் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்து வருகிறார் நடராஜன். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வும் செலவு செய்வதால் தேர்தல் ரேஸில் முந்துவதற்கு முயற்சி செய்கிறது த.மா.காவின் ஆட்டோ. ஆனாலும், களநிலவரம் பழனிமாணிக்கத்துக்குச் சாதகமாக இருக்கிறது. 

பின் செல்ல