Published:Updated:

`தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் ஒன்றிணைய வாய்ப்பில்லை!' - மல்லை சத்யா

`தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்போல ஒன்றிணைந்து செயலாற்றத் தொடங்கியிருக்கின்றன. தி.மு.கவில் ம.தி.மு.க இணைய வாய்ப்பில்லை' என ம.தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா விளக்கமளித்திருக்கிறார்.

`தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் ஒன்றிணைய வாய்ப்பில்லை!' - மல்லை சத்யா
`தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் ஒன்றிணைய வாய்ப்பில்லை!' - மல்லை சத்யா

மீபகாலமாக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் அதிகம்  நெருக்கம்காட்டிவருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில்தான் வைகோ உள்ளார். ஸ்டாலினை முதல் அமைச்சர் பதவியில் அமர வைக்காமல் ஓயப்போவதில்லை என்றும் வைகோ அறைகூவல் விடுத்துள்ளார். கடந்த காலங்களில்  எடுத்த உணர்ச்சிகரமான முடிவுகள் ம.தி.மு.க -வை வளர்க்க உதவவில்லை என்பதையும் வைகோ தற்போது உணர்ந்துள்ளார். 

பேட்டிகளின்போது,  தான் குறிப்பிடத்தக்க தவறுகளைச் செய்துவிட்டதாக வைகோ வெளிப்படையாகக் கூறியுள்ளார். முக்கியமாகத் 'தன்னை பொடா சட்டத்தில் கைதுசெய்த ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததுதான் செய்த மிகப் பெரிய தவறு' என்று  வைகோ குறிப்பிட்டுள்ளார். அரசியல் வாழ்க்கையில் இனிமேல் உணர்ச்சிகரமான முடிவுகள் பலனளிக்காது என்பதை உணர்ந்த வைகோ, இந்தத் தேர்தலில் தி.மு.க அளித்த 1 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ராஜ்யசபா தொகுதியுடன் திருப்தி அடைந்தார். இனிமேல், தி.மு.க-வுடன் இணைந்து செயல்பட்டால்தான் தன் கட்சிக்கும் எதிர்காலம் இருக்கும் என்பதை வைகோ புரிந்துவைத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அதே வேளையில், இன்னொரு விஷயமும் ம.தி.மு.க, தி.மு.க தொண்டர்களிடையே பரவிவருகிறது.. தி.மு.க-வில் இருந்து கிட்டத்தட்ட அழகிரி ஒதுக்கப்பட்டுவிட்டார். அழகிரியை எதிர்கொள்ள வைகோவை தி.மு.க பொதுச் செயலாளராக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி.  தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனுக்கும் வயதாகிவிட்டது. அன்பழகன் காலத்துக்குப் பிறகு நம்பிக்கையான ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்க வேண்டும். கருணாநிதிக்கு எப்படி ஒரு அன்பழகனோ, அதேபோல தனக்கு ஒருவர் வேண்டுமென்று ஸ்டாலின் கருதுவதாகச் சொல்லப்படுகிறது. 

இப்போதைக்கு ஸ்டாலினிடம் அத்தகைய நம்பிக்கையை வைகோ பெற்றுள்ளதாக இரு கட்சிகளின் தொண்டர்களும் பேசிக் கொள்கிறார்கள். ம.தி.மு.க-வை கலைத்துவிட்டு தி.மு.க-வுடன் இணைப்பு நடக்கலாம் என்றும் தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்கள். ''தி.மு.க -வில் இருந்து பிரிந்த கட்சிதானே... அதனால், மீண்டும் தாய்க் கட்சியுடன் இணைப்பதில் எந்த நெருடலும் இருக்காது. கருணாநிதி இல்லாத நிலையில்.  வருங்காலத்தில் ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க போல வலுவான கட்சியாக தி.மு.க-வை மாற்ற இந்த நடவடிக்கை உதவும்' என்றும் சொல்லப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு இணைப்பு இருக்கலாம் என்று தகவல்கள் கசிகின்றன. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ''அண்ணன் வைகோ, திராவிட இயக்கத்தின் போர்க்குரல். தன் தலைவராக கருணாநிதியிடம் உறுதி கொடுத்ததுபோல எனக்கும் தி.மு.க-வுக்கும் பக்கபலமாக இருக்கிறார். திராவிட இயக்கத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களை வீழ்த்துவதே அவரின் இலக்கு. ம.தி.மு.க தொண்டர்களும் எங்களுக்குத் துணையாக உள்ளனர். மற்றவை எல்லாம் உங்களின் யூகங்கள்'' என்று கூறியுள்ளார். 

காஞ்சிபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவிடம் இதுகுறித்து பேசியபோது,``நதி உற்பத்தியான இடத்துக்கு ஒருபோதும் திரும்பிச்சென்றது இல்லை. நதி இரண்டாகப் பிரிவதைப் பார்த்திருப்போம். மீண்டும் வேறு எங்காவது சேர்ந்து ஒன்றாக ஓடும். அதுபோல, தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல ஒருங்கிணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளன. ஸ்டாலினும் வைகோவும் திராவிட இயக்கத்தின் முக்கிய அடையாளங்கள். வைகோ அண்ணனாகவும் ஸ்டாலின் தம்பியாகவும் இனிமேல் மக்கள் பணியாற்றுவார்கள். பெரியாரை விட்டுப் பிரிந்துசென்ற அண்ணா, மீண்டும் திரும்பி இணைந்துவிடுவார் என்றார்கள். அது நடக்கவில்லையே. தி.மு.க-வுடன் ம.தி.மு.க இணைய வாய்ப்பில்லை. வைகோவும் ஸ்டாலினும் இணைந்து பணியாற்றுவது பிடிக்காதவர்கள் இத்தகைய வதந்தியைக் கிளப்பிவிடுகிறார்கள்'' என்றார்.