Published:Updated:

`நீங்க இப்படி பேசினீங்களா இல்லையா?' - ராமதாஸுக்கு 2006ஐ நினைவூட்டும் ஸ்டாலின்

`நீங்க இப்படி பேசினீங்களா இல்லையா?' - ராமதாஸுக்கு 2006ஐ நினைவூட்டும் ஸ்டாலின்
`நீங்க இப்படி பேசினீங்களா இல்லையா?' - ராமதாஸுக்கு 2006ஐ நினைவூட்டும் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் ஸ்டாலின். நேற்று, கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் கௌதம சிகாமணியை ஆதரித்துப் பேசினார். இன்று, விழுப்புரம் வேட்பாளர் வி.சி.க ரவிக்குமாரை ஆதரித்துப் பேசிய அவர், ”தி.மு.க சார்பில் ரவிக்குமார் இங்கு நிறுத்தப்படவில்லை. உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிபெறவைக்க வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 3 மாதத்தில் தமிழகத்திலும் அப்படி நிகழும் என்று எனக்கு முன்னால் பேசிய பொன்முடி கூறினார். ஆனால் அதில் ஒரு திருத்தம். 3 மாதம் எல்லாம் தேவையில்லை. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அடுத்த நொடியே தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சி அகற்றப்படுகிற அல்லது தானாக கவிழும் நிலை ஏற்படும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.

இந்தத் தேர்தலின்மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை நாம் அடிக்கப்போகிறோம். மத்தியில் மோடி தலைமையில் நடப்பது சர்வாதிகார ஆட்சி என்றால், தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் நடப்பது உதவாக்கரை ஆட்சி. தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. அவர் வந்து வாக்கு கேட்கும் வாய்ப்பில்லாததால், அவரது மகனான ஸ்டாலின் உங்களிடம் வந்திருக்கிறேன். நம் கையில் மாநில ஆட்சி. நாம் கை காட்டுபவர்கள் மத்தியில் ஆட்சி. தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது என்று தெரிந்து கொண்ட பிரதமர் மோடி, அனைத்து குடும்பத்திற்கும் 6,000 ரூபாயை மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்று அறிவித்தார். உங்களில் யாருக்காவது அது வந்து சேர்ந்ததா? வரும்... ஆனால் வராது... என்ற வடிவேலு நகைச்சுவைதான் எனக்கு ஞாபகம்வருகிறது. தண்ணீரில் எழுதுவதிலும், வாயால் வடை சுடுவதிலும் பிரதமர் மோடி கெட்டிக்காரர்.

எடப்பாடி பழனிசாமி, தற்போது ஊர் ஊராகச் சென்று நான் ஒரு விவசாயி என்று புலம்பிக்கொண்டிருப்பதோடு, விவசாயி நாட்டை ஆளக் கூடாதா? விவசாயி நாட்டை ஆள்வது ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை என்று கூறிவருகிறார். நான் சொல்கிறேன், விவசாயி நாட்டை ஆள்வதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், விஷ வாயு நாட்டை ஆளலாமா என்பதுதான் என் கேள்வி. எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல விஷ வாயு. கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறாத எடப்பாடி பழனிசாமி விவசாயியா?. அந்த நேரத்திலே சேலத்தில், தனது சம்பந்தி வீட்டில் கிடா அடித்து விருந்து கொடுத்துக்கொண்டிருந்தார். முதல்வர் எங்கே என்று மக்கள் தேடிய நிலையில் ஒரு வாரம் கழித்துச் சென்றார். அதுவும் ஹெலிகாப்டரில். ஹெலிகாப்டரைப் பார்த்து கும்பிட்டவர், ஹெலிகாப்டரில் வந்தார்.

8 வழிச் சாலைக்காக விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் மத்திய அரசுக்குத் துணைநிற்கும் இவர் விவசாயியா?. 184 ஏரிகள், 341 குளங்கள், 4 ஆயிரம் கிணறுகள், 6 ஆயிரம் ஆழ்துளைக் கிணறுகள், 30 ஆயிரம் தென்னை மரங்களைக் காலிசெய்யும் திட்டத்தைக் கொண்டு வந்து, விவசாயிகளைக் கைதுசெய்பவர்தான் விவசாயியா?. அதனால்தான் அவரை விஷ வாயு என்று நான் கூறுகிறேன். தங்கள் உரிமைக்காகப் போராடும் அரசு ஊழியர்களைக் கோட்டைக்கு வராமல் தடுத்து நிறுத்தலாம். ஆனால் முள் வேலி அமைத்து அவர்களை அவமதித்து, பணிநீக்கம் செய்து, தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்திய கொடுமை இந்த ஆட்சியில் அரங்கேறியது.

நமது வேட்பாளர் ரவிக்குமாரின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்க நீங்கள் ஆதரவு தர வேண்டும். தருவீர்களா? நிச்சயமாக... சத்தியமாகத் தருவீர்களா?. தி.மு.க-வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்துபோயிருக்கிறார்களே தவிர, கழகம் அழிந்ததில்லை என்பது வரலாறு. தற்போது ராமதாஸ், தி.மு.க-வும் கலைஞரும் வன்னியர்களுக்கு என்ன செய்தார்கள் என்று வாய் கூசாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தக் கேள்விக்கு பா.ம.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே பதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மிகவும் பின் தங்கியிருக்கும் சமுதாயங்களைத் தனிப் பிரிவாக அறிவித்தது, அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தோம் என்று கூறியிருக்கிறார். நம் தலைவர் கலைஞர் முதல்வராக இருக்கும்போதுதான் அது நிறைவேற்றப்பட்டது.

2006-ம் மார்ச் 19-ம் தேதி, கோனேரிக்குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளி விழா மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர், கலைஞருக்கு வெள்ளிச் செங்கோல் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கி, ’1987-ம் ஆண்டு நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்றி சொல்கிறேன். அதற்கு அடுத்தபடியாக கலைஞருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பல ஆண்டுகளாக போராடினோம், பேராடிக்கொண்டே இருந்தோம். எந்தப் பலனும் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆரை சந்திக்க முயன்றும் முடியவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் எங்களை அழைத்துப் பேசி இடஒதுக்கீடு கொடுத்தவர் தலைவர் கலைஞர்தான்.

இதற்காக எங்களது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று அந்த மாநாட்டில் நீங்கள் பேசவில்லையா?. நீங்கள் 20% இட ஒதுக்கீட்டைத் தரவில்லை என்றால், எங்கள் சமூகம் வாக்களிக்கும் சமூகமாகத்தான் இருந்திருக்கும் என்று நீங்கள் கூறவில்லையா?. எனவே, ராமதாஸ் அவர்களே தி.மு.க-வுக்கு உங்களின் பாராட்டுப் பத்திரம் தேவையில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் உங்கள் அனைவரையுமே உடன்பிறப்பே என்றுதான் அழைப்பார். அதனால் நான் மட்டுமல்ல நீங்களும் அவர் பிள்ளைகள்தான். அந்த உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன், தி.மு.க-விற்கு வாக்களியுங்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு