Published:Updated:

டபுள் தனுஷ், ட்ரிபிள் பொன்னுத்தாய் தாக்குதல்! - டாக்டர் கிருஷ்ணசாமியைக் கரையேற்றுமா தென்காசி?!

டபுள் தனுஷ், ட்ரிபிள் பொன்னுத்தாய் தாக்குதல்! - டாக்டர் கிருஷ்ணசாமியைக் கரையேற்றுமா தென்காசி?!
டபுள் தனுஷ், ட்ரிபிள் பொன்னுத்தாய் தாக்குதல்! - டாக்டர் கிருஷ்ணசாமியைக் கரையேற்றுமா தென்காசி?!

கேரளாவில் மருத்துவமனை ஒன்றைக் கட்டி வரும் கிருஷ்ணசாமி, அதற்கான அனுமதி பெறுவது உள்ளிட்ட காரணங்களுக்காகவே மத்திய பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டுவதாகப் பேச்சு உண்டு. அந்த நெருக்கமே தேர்தல் கூட்டணியாக மாறியிருக்கிறது என்கிறார்கள். 

நட்சத்திர வேட்பாளர்: 

டாக்டர். க.கிருஷ்ணசாமி (தென்காசி)

சுருக்கமான அறிமுகம்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட மசக்கவுண்டன் புதூர் என்னும் சிற்றூரில் 1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பிறந்தவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. பெற்றோர் கருப்பசாமி, தாமரையம்மாள். உயர்நிலைப் படிப்பை பூளவாடி கிராமத்திலும் மேல்படிப்பை அரசு கல்லூரியிலும் தொடர்ந்தார். பின்னர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விவசாயப் படிப்பை தேர்வு செய்தவர், ஓரிரு வாரங்கள் மட்டுமே படித்தார். பேராசிரியர்கள் சிலரின் வழிகாட்டுதலில் நெல்லை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார். கல்லூரிக் காலத்திலேயே சொந்தச் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர். 1996-ல் நெல்லை மாவட்டம் கொடியன்குளம் பகுதியில் நடந்த சாதிக் கலவரம், மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் சமூகப் பணிகளில் தீவிரம் காட்டினார். இதன் அடுத்தகட்டமாக, தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக 1997-ம் ஆண்டு `புதிய தமிழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். 1999-ம் ஆண்டு, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியில் கலவரம் வெடித்ததில் பெண்கள், பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலையை எற்படுத்தியது. 

தேர்தல் என்ட்ரி: 

1996-ம் ஆண்டு கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 2001-ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு அதே தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்றார். தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் களமும் கிருஷ்ணசாமிக்குப் புதிதல்ல. இதே தொகுதியில் அவர் ஐந்து முறை தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறார். 1998 தேர்தலில் போட்டியிட்ட அவர் 1,23,592 வாக்குகளைப் பெற்றார். 1999-ல் நடந்த தேர்தலில் 1,86,220 வாக்குகளையும் 2004 தேர்தலில் 1,01,048 வாக்குகளும் 2009 தேர்தலில் 1,16,685 வாக்குகளையும் பெற்றார். 2014-ல் நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பாகக் களமிறங்கிய டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு 2,62,812 வாக்குகள் கிடைத்தன. தற்போது 6-வது முறையாக தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பாகக் களமிறங்கும் அவர், இரட்டை இலைச் சின்னத்தை தேர்வு செய்திருக்கிறார். 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார். பூர்வீகம், கோயம்புத்தூராக இருந்தாலும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அரசியல் செய்து வருவது.

2. அவ்வளவு எளிதில் யாருக்கும் கைகொடுக்க மாட்டார். அதேபோல அவருக்கு எதிரில் கட்சிக்காரர்கள் யாரும் சரிசமமாக உட்கார்ந்து பேச முடியாது. 

3. பிரஸ் மீட் அல்லது கட்சி நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும், அவருக்குப் பின்னால் மட்டுமே கட்சி நிர்வாகிகள் நிற்க வேண்டும். 

4. எப்போதும் அழகாகவும் மிடுக்காகவும் உடையணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார். விலை உயர்ந்த ஷூக்களை மட்டுமே அவர் அணிவார். ஹைஜீனிக்காக இருப்பதை விரும்புபவர். 

5. வேட்புமனு தாக்கலின்போது மாற்று வேட்பாளராகக் கூட தன் மகன் ஷியாம் பெயரைத்தான் குறிப்பிட்டிருந்தார். இரண்டாம் கட்டத் தலைவர்களையும் உருவாக்கவில்லை. கட்சி நிர்வாகிகளிடமே எச்சரிக்கையுடன் செயல்படுவது வழக்கம். 

டாப் 5 சர்ச்சைகள்: 

1. தன்னுடைய சாதியை மறைத்து தேவேந்திரகுல வேளாளர் எனப் பொய்யாகக் கூறிவருவதாக இவர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. 

2. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கான கொடியை தனது கட்சிக்கொடியாக எடுத்துக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு. இந்த விவகாரம் தொடர்பாக பசுபதி பாண்டியன் உயிரோடு இருந்த காலத்திலேயே வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. 

3. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினரை தன்னுடைய சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்துபவர் என்ற விமர்சனம். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொடியன்குளம் பகுதியில் சாதிக்கலவரம் வெடித்து பல உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், அதே கட்சியுடன் கூட்டணி அமைத்தது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீஸார் தாக்கியதால் தப்பி ஓடிய அப்பாவி மக்கள் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் அதே கட்சியுடன் கூட்டணி அமைத்தது போன்ற விமர்சனங்கள். 

4. கேரளாவில் மருத்துவமனை ஒன்றை கட்டி வரும் கிருஷ்ணசாமி, அதற்கான அனுமதி பெறுவது உள்ளிட்ட காரணங்களுக்காகவே மத்திய பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாகப் பேச்சு உண்டு. அந்த நெருக்கமே தேர்தல் கூட்டணியாக மாறியிருக்கிறது என்கிறார்கள். 

5. பட்டியலினத்தின் சலுகைகளைப் பெற்று மருத்துவரானார். தன்னுடைய மகன் ஷியாம், மகள் சங்கீதா ஆகியோரையும் அதே சலுகையைப் பயன்படுத்தி மருத்துவராக்கினார். தற்போது பட்டியலினத்திலிருந்து வெளியேறி சலுகைகளைப் புறக்கணிக்க வேண்டும் எனப் பேசி வருகிறார்.

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்: 

அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கிருஷ்ணசாமியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக தனுஷ்குமார், அ.ம.மு.க வேட்பாளராக பொன்னுத்தாய், நாம் தமிழர் சார்பாக மதிவாணன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக முனீஸ்வரன் உட்பட 25 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும், தி.மு.க., அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.  

தி.மு.க. வேட்பாளரான தனுஷ்குமாரின் தந்தையும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தனுஷ்கோடி, 1997-ல் டாக்டர்.கிருஷ்ணசாமி புதிய தமிழகம் கட்சியைத் தொடங்கியபோது மாநிலச் செயலாளராக இருந்தவர். அத்துடன், தென் மாவட்டங்களில் கிருஷ்ணசாமியை அறிமுகப்படுத்தியவர். அதனால் கிருஷ்ணசாமியின் பிரசார யுத்தியைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி தனுஷ்குமார் தேர்தல் வியூகத்தை வகுத்துச் செயல்படுகிறார். இந்த `டபுள் தனுஷ்’ தாக்குதலைச் சமாளிப்பது கிருஷ்ணசாமிக்குப் பெரும் சவாலாக இருக்கும். அதேநேரம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவரான தனுஷ்குமாருக்கு தென்காசி தொகுதி முழுவதும் போதுமான அறிமுகம் இல்லாமல் இருப்பது மைனஸ். 

அ.ம.மு.க பொன்னுத்தாய்க்கு, தொகுதியில் இருக்கும் கட்சி செல்வாக்கு மிகப் பெரிய பிளஸ். அத்துடன், டாக்டர். கிருஷ்ணசாமிக்கு எதிரான மனநிலையில் இருக்கும் பட்டியல் இனத்தைச் சாராத பிற சமுதாயத்தினரின் வாக்குகளும் இவருக்குக் கூடுதல் பலம். ஆனால், பொன்னுத்தாய் என்ற பெயரில் 3 பேர் சுயேச்சையாகக் களமிறக்கப்பட்டிருப்பது மைனஸ். 

சாதித் தலைவர் என்ற அடையாளம் ஒருபுறம் இருந்தாலும், பட்டியலினத்தவரைத் தவிர பிற சமுதாயத்தினர் மத்தியில் கிருஷ்ணசாமிக்கு வாய்ஸ் இல்லை. பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று பேசி வருவதால் சொந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களில் ஒருசாரார் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த அதிருப்திகளைப் போக்கும் வகையில் அவர் பிரசாரம் செய்து வந்தாலும், சூரியனை வீழ்த்தி இலை மலருமா என்பதற்கான விடை வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.

பின் செல்ல