Published:Updated:

மிஸ்டர் தபால்; வாய்தா வாங்காத வக்கீல்; பெரியார் பாதை!  - நீலகிரியில் ஆ.ராசாவின் யோகம் என்ன?

மிஸ்டர் தபால்; வாய்தா வாங்காத வக்கீல்; பெரியார் பாதை!  - நீலகிரியில் ஆ.ராசாவின் யோகம் என்ன?
மிஸ்டர் தபால்; வாய்தா வாங்காத வக்கீல்; பெரியார் பாதை!  - நீலகிரியில் ஆ.ராசாவின் யோகம் என்ன?

தோற்றாலும் தொகுதிக்குள் வருவது, மக்களிடம் கரிசனத்தைக் காட்டுவது போன்றவை தேர்தல் ரேஸில் ஆ.ராசாவை முந்த வைக்குமா?

நட்சத்திர வேட்பாளர்: 

ஆ.ராசா (நீலகிரி தொகுதி) 

கொ.ப.செ! 

பெரம்பலூர் மாவட்டம் வேலூரில் 1963-ம் வருடம், மே 10-ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் ஆண்டிமுத்து. தாயார் சின்னபிள்ளை. முசிறியில் உள்ள அரசு கலைக்கல்லூரில் பி.எஸ்சி பட்டம் பெற்றார். மதுரையில் உள்ள சட்டக்கல்லூரியில் பி.எல்.., திருச்சி சட்டக்கல்லூரியில் முதுகலை சட்டப்படிப்பு ஆகியவற்றை நிறைவு செய்தார். மனைவி பெயர் பரமேஸ்வரி. ஒரே ஒரு மகள். தி.மு.க-வின் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளர் எனப் படிப்படியாக வளர்ந்து கொள்கை பரப்புச் செயலாளராக உயர்ந்திருக்கிறார். 

தேர்தல் என்ட்ரி! 

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1996-ம் ஆண்டு போட்டியிட்டு, காங்கிரஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து எம்.பி.,யானார். தொடர்ந்து 1998 நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க ராஜரத்தினத்திடம் தோற்றார். 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு, ராஜரத்தினத்தை தோற்கடித்தார். மீண்டும் இதே தொகுதியில் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளர் சுந்தரத்தை  தோற்கடித்தார். 

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின், முதன் முறையாக கடந்த 2009 ம் ஆண்டு நீலகிரியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணனைத் தோற்கடித்து எம்.பி ஆனார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அதே நீலகிரியில் 6 வது முறையாகக் களத்தில் நின்றார். ஆனால், 2ஜி உள்ளிட்ட வழக்கு சர்ச்சைகளால் அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார். ஆனாலும், நீலகிரி தொகுதியில் அடிக்கடி தலைகாட்டினார். தற்போது 7வது முறையாக நீலகிரி மக்களை நம்பிக் களமிறங்கியிருக்கிறார். 

1996-ம் ஆண்டு ஊரகத் தொழில்துறை மத்திய இணை அமைச்சராகவும், 2001 - 2004 வரை மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சராகவும் 2004- 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகவும் 2007- 2009 வரை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2009-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பிறகு, சில மாதங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குற்றச்சாட்டில் கருணாநிதியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. தீவிர புத்தக வாசிப்பாளர். கட்சி, அரசியல், தேர்தல், 2ஜி வழக்கு என நேரமில்லாமல் இருந்தாலும் வாசிப்பைக் கைவிடாதவர்.

2. பொங்கல் உட்பட தமிழர் பண்டிகை தினங்களில் தபால் மூலம் நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்புவது வழக்கம்.

3, பெரம்பலூரில் உள்ள வீட்டுக்கு யார் வரவேற்று உபசரித்து செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்புவார்.

4. பெரியார் கொள்கையில் பயணித்து கருணாநிதியின் அன்பை பெற்றவர். தன்னை முற்போக்கு சிந்தனைவாதி என அழைப்பதையே விரும்புவார். அரசியல் தொழிலாக இருந்தாலும் இலக்கிய வட்டாரத்தில் நட்பு பாராட்டி வருபவர். 

5. 2ஜி வழக்கில் ஒரு முறை கூட வாய்தா கேட்காமல் வழக்கறிஞராக தனக்காக வாதாடி, குற்றவாளிக் கூண்டில் ஏறி சாட்சி சொன்னதும் ராசா மட்டும்தான். இந்த அனுபவத்தை 2G saga unfolds என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். 

டாப் 3 சர்ச்சைகள்: 

1. நீலகிரி தொகுதியில் 2009 தேர்தலில் போட்டியிட்டு ஐ.டி அமைச்சர் ஆனார். ஆனால், ஊழல் குற்றச்சாட்டால் பதவியை இழந்தார்.
 
2. 2ஜி வழக்கு விசாரணை நெருக்கிக் கொண்டிருந்த நேரத்தில், நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷாவின் மர்ம மரணம்

3. ஊழல் குற்றச்சாட்டில் வென்றாலும், `2ஜி ராசா' என்றே விமர்சிக்கப்படுவது, தனி மனித தாக்குதல்களை அதிகம் எதிர்கொள்ளும் நபராகவும் இருக்கிறார் ராசா. 

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்: 

நீலகிரி தொகுதியில் ராசாவுக்கு எதிராக அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜன், அ.ம.மு.க சார்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.ராமசாமி ஆகியோர் சற்று பலமான வேட்பாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் மீதான மக்களின் கோபம், ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்றவைகள் ராசாவுக்கு பிளஸ். அ.தி.மு.க வேட்பாளர் தியாகராஜனுக்கு தொகுதி குறித்த நிலவரமே தெரியவில்லை. வேட்புமனு தாக்கலின் போதே பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் உதறல் எடுத்தது மிகப் பெரிய மைனஸ். திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகப் பொறுப்பாளராக தியாகராஜன் இருப்பதால், அவிநாசி தொகுதியில் ஓரளவுக்கு வாக்குகளைப் பெறலாம் என்பது பிளஸ். ராசாவின் ஊழல் விவகாரங்களை முன்னிறுத்தியே வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் சிறைக்குச் செல்வார் எனப் பிரசாரம் செய்து வருவது தி.மு.க.வுக்கான மைனஸ். 

ஆனாலும், தொகுதி மக்களின் மனதில் ராசாவாக உயர்ந்து நிற்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது கூடலூர் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது ஒரு சம்பவம் நடந்தது. அங்கு தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர், `யார் வெற்றி பெற்றாலும் எங்கள் நிலைமை மாறாது' என்றார். இதற்குப் பதில் சொல்லாமல் சென்றுவிட்டார் ராசா. இதன் பின்னர், நீலகிரியை மழைவெள்ளம் புரட்டிப் போட்டபோது, களத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொண்டார். இதைக் கவனித்த அந்தப் பெண் தொழிலாளி, தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். தோற்றாலும் தொகுதிக்குள் வருவது, மக்களிடம் கரிசனத்தைக் காட்டுவது எனத் தேர்தல் ரேஸில் முந்திக் கொண்டிருக்கிறார் நீலமலை ராசா. 

அடுத்த கட்டுரைக்கு