Published:Updated:

கனிமொழியின் மெரினா மெளனம், தாமரையை மலராமல் தடுக்குமா? - தூத்துக்குடி நிலவரம்

'நாடு முன்னேற்றம் அடைய மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும்' என அனல் பறக்கப் பேசி வருகிறார் கனிமொழி. அவரின் ப்ளஸ் மைனஸ்கள் என்னென்ன?

கனிமொழியின் மெரினா மெளனம், தாமரையை மலராமல் தடுக்குமா? - தூத்துக்குடி நிலவரம்
கனிமொழியின் மெரினா மெளனம், தாமரையை மலராமல் தடுக்குமா? - தூத்துக்குடி நிலவரம்

நட்சத்திர வேட்பாளர்: கனிமொழி கருணாநிதி (தூத்துக்குடி)

வேட்பாளர் பற்றிய சுருக்கமான அறிமுகம்:

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாளுக்கும் 05.01.1968-ல் மகளாகப் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப்படிப்பை சர்ச் பார்க், பிரசன்டேசன் கான்வென்டிலும் முடித்தார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் வணிகவியல் பாடத்தில் முதுகலைப் படப்படிப்பை நிறைவு செய்தார். `தி இந்து’ நாளிதழில் துணை ஆசிரியராகவும் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் `தமிழ்முரசு’ இதழிலும் பணியாற்றியுள்ளார். `கருவறை வாசனை’, `அகத்திணை’. ‘சிகரங்களில் உறைகிறது காலம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், ‘பார்வைகள்’, `கருக்கும் மருதாணி' ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். இவரது படைப்புகள் ஆங்கிலம், இத்தாலி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கிராமியக் கலைகளையும் கலாசாரத்தையும் கொண்டாடும் வகையில் சென்னை சங்கமம் என்ற மாபெரும் கலைத்திருவிழாவை நடத்தினார். 

அரசியல் என்ட்ரி: 

தி.மு.க-வின் மாநில மகளிரணி செயலாளராக இருக்கிறார். கடந்த 2007-ம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டெல்லியில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். கருணாநிதியின் மகள் என்பதையும் தாண்டி, அரசியலில் தனக்கென தனி பாதையையும் தகுதியையும் வளர்த்துக் கொண்டவர். நாடாளுமன்றத்தில் 3  தனிநபர் மசோதாக்களை நிறைவேற்றியுள்ள இவர், 141 விவாதங்களில் கலந்துகொண்டு 614 கேள்விகளைக் கேட்டிருக்கிறார். லோக்மட் செய்தி நிறுவனத்தின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடளுமன்ற உறுப்பினர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார். தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்பதற்காகத் தூத்துக்குடி தொகுதியை விரும்பிப் பெற்றார். கடந்த 2 ஆண்டுகளாகவே தூத்துக்குடியை மையமாக வைத்துத் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார். எம்.பி, கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் இதே மாவட்டத்தில் உள்ள வெங்கடேசுவரபுரம் ஊராட்சியில் ரூ.1.01கோடி மதிப்பீட்டில் திட்டங்களை நிறைவேற்றினார். கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் எம்.பி நிதியை முழுமையாகப் பயன்படுத்தியதும் கனிமொழியின் சாதனை. 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. குடும்பத்தினர் இவரைக் `கனி' என்றே அழைப்பது வழக்கம். நண்பர்களும் இவ்வாறே அழைக்கின்றனர் 

2. ஆடை, அணிகலன்களை எளிமையாகப் பயன்படுத்த நினைப்பார். மஞ்சள், பச்சை ஆகியவை பிடித்தமான நிறங்கள் என்பதால், அவர் அணியும் உடைகளில் ஏதாவது ஒரு வகையில் இந்த நிறங்கள் இடம்பெற்றிருக்கும்.  

3. கருணாநிதி இருந்தவரையில், கஷ்டமான மனநிலையில் இருந்தால் அவருக்குப் போன் செய்து பேசுவார். இப்போது, மெரினாவில் உள்ள அவரது சமாதிக்குச் சென்று மௌனமாக இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

4. ஏழ்மை நிலையில் இருக்கும் பெண் குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாகச் சிலரது குடும்பங்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை கொடுத்து வருகிறார். 

5. தேர்தல் சுவரொட்டிகளில் கவிஞர் கனிமொழி என்ற அடையாளத்தைவிட, கனிமொழி கருணாநிதி என வைக்கப்பட்டிருப்பதை உற்சாகத்தோடு பார்க்கிறார். இதை ராசியாகவும் நினைக்கிறார். 

டாப் 3 சர்ச்சைகள்: 

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடாக உரிமம் வழங்கிய வழக்கில் சிறை சென்றவர் என்ற விமர்சனம்

2. குடும்ப அரசியலின் ஓர் அங்கமாக, தூத்துக்குடியில் களமிறங்கியிருப்பதாகச் சொல்லப்படுவது.

3. சென்னை முகவரியே நிரந்தர வசிப்பிடமாக இருப்பதால், வெற்றி பெற்றாலும் தொகுதிப் பக்கம் வருவாரா என்ற கேள்வி.

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்: 

கனிமொழிக்கு எதிராகக் களமிறங்கியிருக்கிறார் பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை. சொந்த சமூக வாக்குகளைப் பெரிதாக நினைப்பதும் கூட்டணி பலமும் இவருக்குப் ப்ளஸ். மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்புகள், அ.தி.மு.க மீதான அதிருப்தி, சிறுபான்மை மக்களின் எதிர்ப்பு போன்றவை தமிழிசையின் மைனஸ்கள். இருப்பினும், "தி.மு.க-வால் முடியாதது என்னால் முடியும். உப்பு நீர் இங்குள்ள மக்களின் உயிர் நீராக உள்ளது. அந்த உயிர் நீரில் தாமரை நிச்சயமாக மலரும்" எனப் பேசி நம்பிக்கையோடு வாக்கு சேகரித்து வருகிறார் தமிழிசை. 

தி.மு.க வேட்பாளர் கனிமொழியோ, "தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அ.தி.மு.க அரசால் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தைக் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை மாவட்டமாக மாற்றுவேன். ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பை மத்திய அரசு அறிவித்ததால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். நாடு முன்னேற்றம் அடைய மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும்" என அனல் பறக்கப் பேசி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை, துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்றவை கனிமொழிக்கான ப்ளஸ்கள்.  

இவர்களைத் தவிர, அ.ம.மு.க வேட்பாளர் வழக்கறிஞர் புவனேஸ்வரன், நாம்தமிழர் கட்சியின் கிறிஸ்டன்டைன் ராஜசேகர், மக்கள் நீதி மய்யத்தின் பொன் குமரன் ஆகியோரும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். தொகுதிக்குப் புதுமுகம் என்றாலும் கருணாநிதியின் மகள் என்ற அடையாளமும் தி.மு.க நிர்வாகிகளின் தேர்தல் பணியும் கூட்டணிக் கட்சிகளின் பலமும் கனிமொழிக்கான வெற்றி வாய்ப்பை உறுதி செய்கின்றன. தாமரையை மலரச் செய்வதற்கான முயற்சிகளில் தமிழிசை வேகம் காட்டினாலும், சூரிய வெப்பத்தால் திணறி வருகின்றது பா.ஜ.க.