Published:Updated:

`சிங்காரம்’ ஃபார்முலா; மிரட்டும் ஆட்டோ; மெர்சல் அமமுக! - தஞ்சையைக் கைப்பற்றுவாரா எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்?

`சிங்காரம்’ ஃபார்முலா; மிரட்டும் ஆட்டோ; மெர்சல் அமமுக!  - தஞ்சையைக் கைப்பற்றுவாரா  எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்?
`சிங்காரம்’ ஃபார்முலா; மிரட்டும் ஆட்டோ; மெர்சல் அமமுக! - தஞ்சையைக் கைப்பற்றுவாரா எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்?

மூன்று முக்கிய கட்சி வேட்பாளர்களும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே களமிறக்கப்பட்டுள்ளனர். இதுதவிர முத்தரையர் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் கணிசமான அளவில் உள்ளது. இவர்களின் வாக்குகளை பெறுவோருக்கு தஞ்சை மண்ணில் வெற்றி வந்து சேரும். 

தொகுதி: தஞ்சாவூர்

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியது.

தொகுதி பற்றிய சுருக்கமான வரலாறு:

சோழர்களின் ஆட்சி காலத்திலேயே ஜனநாயக முறைப்படி குடவோலை முறையில் தேர்தல் நடத்தி பிரதிநிதிகளைத் தேர்வு செய்த பகுதி இது. விவசாயத்தின் மீது எவ்வளவு ஆர்வம் கொண்டவர்களோ அதே அளவுக்கு அரசியல் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் இப்பகுதி மக்கள். காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த சோழ நாடு, 1962 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகே திராவிடக் கட்சிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. 

சிங்கார வடிவேல் ஃபார்முலா: 

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 1980-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அன்பில் தர்மலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தியது தி.மு.க. எதிர்முனையில் எதிர்கொள்ள ஆளே இல்லை என காங்கிரஸ் கட்சி புலம்பியது. வேறுவ ழியில்லாமல், தொகுதிக்கு அறிமுகமே இல்லாத சிங்கார வடிவேலை வேட்பாளராக அறிவித்தது. அவர் அன்பில் தர்மலிங்கத்தை தோல்வியடைய செய்ததோடு தொடர்ந்து மூன்று முறை வெற்றியும் பெற்றார். அந்தளவுக்கு மக்களின் மனநிலையைக் கணிக்க முடியாத தொகுதி. 

தி.மு.க. கட்டிய கோட்டை: 

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில், 1952 முதல் இதுவரை இடைத்தேர்தல் உட்பட 18 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்துள்ளது. பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்துள்ளது. 18 தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் தொடர் தோல்வியைத் தழுவியது திமுக. 1996-ம் ஆண்டு தேர்தலில்தான் முதன்முதலாக வெற்றி கண்டது தி.மு.க. இதன்பின்னர் திமுகவின் கோட்டையாக மாறிப்போனது. இதற்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் பிரதான காரணம். வேட்பாளர்களை பார்க்காமல் கட்சியை பார்த்தே வாக்களிக்கும் மக்களும் இத்தொகுதியில் அதிகம். 

கஜா துயரும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களும்:

விவசாயத்தையே முதுகெலும்பாகக் கொண்ட தொகுதி இது. காவிரி தண்ணீர் முழுமையாக கிடைக்காததால் விவசாயம் அழிந்து வருகிறது. இதனால் பலர் வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்லும் அவல நிலையில் உள்ளனர். `மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் எப்போது வரும்?' என்ற அச்சத்திலேயே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். எந்தக் கட்சியாக இருந்தாலும் இதனை தடுப்பதாக கூறிச் செல்கிறார்கள். ஆனால் மத்திய அரசை வலியுறுத்துவோடு சரி..அதைத் தவிர வேறு எதையும் உருப்படியாக செய்யவில்லை என்ற கோபம் மக்களிடம் உள்ளது. பெருந்துயரை ஏற்படுத்திய கஜா புயலால் சிதைந்த மக்களின் வாழ்வாதாரம் இன்னும் சீரமைக்கப்படாமலே உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் வழங்காததது அவர்கள் மறுவாழ்வுக்கு எதையும் செய்யாதது தேர்தலில் எதிரொலிக்கும். 

கலங்க வைக்கும் காவிரி:

சோழ நாடு சோறுடைத்து என்பார்கள். ஆனால், இங்கு காவிரிதான் நீண்ட கால பிரச்னை. காவிரி தண்ணீர் வராமல் போனதன் விளைவாக, விளைநிலங்கள் வறண்டே காணப்படுகின்றன. தண்ணீர் பிரச்சனையால் உலகுக்கே சோறு போட்ட விவசாயிகள், எலி கறி சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இது வரைக்கும் ஆண்ட கட்சிகள், `எங்கள் ஆட்சியில்தான் காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டது' எனக் கூறினாலும் தற்போது வரை காவிரி நீர் முழுமையாக இந்தப் பகுதியைத் தொடவில்லை. இப்போது கர்நாடகா மேக்கேதாட்டூ என்ற இடத்தில் அணை கட்ட உள்ளதால், `எதிர்காலம் என்னவாகுமோ?' என்ற பெரும் பரிதவிப்புடனேயே வாழ்கின்றனர் விவசாயிகள்.

பெரும் இன்னல்களுக்கு மத்தியில்தான் விவசாயிகள் அறுவடை செய்கின்றனர். அந்தச் சமயங்களில் அறுவடை செய்த நெற்பயிரை கொள்முதல் நிலையங்களில் போதுமான இடங்கள் இல்லாமல் வெளியிலேயே மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டியுள்ளது. அப்படி அடுக்கி வைக்கும் போது மழை, எலி உள்ளிட்ட குறுக்கீடுகளால் நெற்பயிர்களும் கடும் சேதத்தை சந்திக்கின்றன. இதனை தடுக்கக் கோரி பல ஆண்டுகளாக வேண்டுகோள் வைத்து வருகின்றனர் விவசாயிகள்.

கட்சிகளின் செல்வாக்கு? 

தி.மு.க.வின் தஞ்சை தொகுதியின் ஆஸ்தான வேட்பாளரான பழனி மாணிக்கமே இந்த முறை போட்டியிடுகிறார். தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர், பலமான கூட்டணி, தொகுதியில் அவருக்கு இருக்கும் தனிப்பெரும் செல்வாக்கு என தேர்தல் ரேஸில் முந்திக் கொண்டிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஆறு மாதத்துக்கு முன்பே உட்கட்சி பிரச்னை உள்ளிட்டவைகளை சரி செய்து தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார். இதனால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சுறுசுறுப்பு தென்படுகிறது. 

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா சார்பில் நடராஜன் போட்டியிடுகிறார். தொகுதியைச் சேர்ந்தவர்தான் என்றாலும் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவராக இருக்கிறார். ஆனால், பட்டுக்கோட்டை பகுதியில் பெரிய குடும்பம் என்ற அந்தஸ்து, அ.தி.மு.க. கூட்டணியில் நிற்பது, பணப்பட்டுவாடா ஆகியவை அவருக்கான பிளஸ். அதேநேரம் சைக்கிள் சின்னம் கிடைக்காததால் சுயேட்சை வேட்பாளராக ஆட்டோ சின்னத்தில் நிற்கிறார். கஜா புயலின் போது அதிமுக மீது ஏற்பட்ட அதிருப்தி, பாஜக உடன் கூட்டணி சேர்ந்ததால் தமாகாவினர் மத்தியில் நிலவி வரும் எதிர்ப்பு ஆகியவை மைனஸ்களாக பார்க்கப்படுகின்றன.

இதுதவிர, அ.ம.மு.க. வேட்பாளராக பொன் முருகேசன் களமிறங்கியிருக்கிறார். கல்லூரி நிறுவனர். கட்சி நிர்வாகிகள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகம் உள்ளது. ஆனால், மக்களிடம் போதுமான அறிமுகம் இல்லை. அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்துள்ள நிலையில் இவர் பிரிக்கும் வாக்குகள் தி.மு.க. வேட்பாளருக்குச் சாதகமாக மாறலாம். அதேநேரம் இவர் மீது பண மோசடி உள்ளிட்ட புகார்கள் இருக்கின்றன. வங்கியில் பல நூறு கோடி ரூபாய் கடன் இருக்கிறது. மூன்று முக்கிய கட்சி வேட்பாளர்களும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே களமிறக்கப்பட்டுள்ளனர். இதுதவிர முத்தரையர் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு வங்கியும் கணிசமான அளவில் உள்ளது. இவர்களின் வாக்குகளை பெறுவோருக்கு தஞ்சை மண்ணில் வெற்றி வந்து சேரும். 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் ’டாப்-5’ காரணிகள் 

1. கஜா புயல் பாதிப்பு 
2. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு
3. காவிரி விவகாரம்
4. பணப்பட்டுவாடா 
5. வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

தி.மு.க, வேட்பாளரான பழனிமாணிக்கம் தொகுதியின் முக்கிய பிரச்சனையான "கஜா புயல் பாதிப்பால் பல்வேறு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. அதனை அதிமுக அரசு சரி செய்ய முன்வரவில்லை. ஆனால் நான் உங்களின் மறுவாழ்வுக்கு உழைப்பேன்" எனக் கூறி பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே கஜா புயல் பாதிப்பின் போது மக்களின் மறுசீரமைப்புக்கு இவர் பெருமளவு பங்காற்றினார். அந்த இமேஜ் தற்போது கை கொடுக்கும் என நம்புகிறார். சமீபத்தில் ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரமும் கை கொடுத்துள்ளது. இதனால் பிரசார ரேஸில் பழனிமாணிக்கம் முன்னணியில் இருக்கிறார். `நான் ஒரு விவசாயி. விவசாய நிலத்தை மலடாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஊருக்குள் அனுமதிக்க மாட்டேன்' எனக் கூறி வாக்கு சேகரிப்பது பிளஸ். 

நடராஜனுக்கு ஆதரவாக எடப்பாடி, ஓபிஎஸ், பிரேமலதா போன்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், அ.தி.மு.க. மீதான அதிருப்தி, மோடி எதிர்ப்பு ஆகியவை நடராஜனுக்குக் கை கொடுக்கவில்லை. அமமுக வேட்பாளர் பொன் முருகேசனோ, ``நான் கல்லூரி நிறுவனர். வெற்றிபெற்றால் கல்விக்கான திட்டங்களை இந்தத் தொகுதிக்கு கொண்டு வருவேன். அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவேன்" எனக் கூறுவதுடன் தொகுதியில் இவர் கல்லூரியில் படித்த மாணவர்களை வைத்துப் பிரசாரம் செய்கிறார். பசையுள்ள பார்ட்டி என்பதால் வைட்டமின் `ப'வையும் தண்ணீர் போல் செலவழித்து வருகிறார். தற்போதைய நிலையில் ஆட்டோவை ஓரம்கட்டிவிட்டு முந்திக் கொண்டிருக்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். 

 
அடுத்த கட்டுரைக்கு