Published:Updated:

``எம்.ஜி.ஆர் பெயர் அரசாணை: தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது!’’ - ஆர்.எஸ்.பாரதி

இந்த விவகாரம் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, இப்படி அரசாணை வெளியிடுவது தேர்தல் விதிகளை மீறும் செயலாகும் என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

``எம்.ஜி.ஆர் பெயர் அரசாணை: தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது!’’ - ஆர்.எஸ்.பாரதி
``எம்.ஜி.ஆர் பெயர் அரசாணை: தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது!’’ - ஆர்.எஸ்.பாரதி

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து, மாநிலக் கட்சியினரும் தேசியக் கட்சியினரும் போட்டிபோட்டுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், ஆளும் கட்சிகள் அதை மீறி நடந்துகொள்கின்றன எனப் பரவலாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, நமோ டி.வி விவகாரம், நானும்கூட காவலன்தான் என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேசியது உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தது. மத்திய அரசிடம் இதற்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இந்த நிலையில் தி.மு.க பிரமுகர் வீடுகளில் வருமானவரிச் சோதனை, ரஃபேல் தொடர்பான புத்தக விவகாரம் என எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்காகத் தமிழகத்திலும் மத்திய அரசின் தாக்கம் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி ஆர் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரை வைக்கக்கோரி தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி, பிரசாரத்துக்காகத் தமிழகம் வந்தபோது, "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர்  சூட்டப்படும்" என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது அதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்போது, இப்படி அரசாணை வெளியிடுவது தேர்தல் விதிகளை மீறும் செயலாகும் என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதுகுறித்து பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க தலைமையில் அமைந்துள்ள கூட்டணி தொடர்ந்து விதிமுறைகளை மீறியே செயல்பட்டு வந்துள்ளது. அதில், இதுவும் ஒன்று. அ.தி.மு.க-வின் இந்தத் தொடர் விதிமுறை மீறல்கள் குறித்து, தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அளித்து வருகிறோம். ஆனால், தேர்தல் ஆணையம்தான் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு  உள்ளது. எங்களுக்கும் புகார்கொடுத்துச் சலிப்பு வந்துவிட்டது. அதனால் இதை அப்படியே விட்டுவிட்டோம். அதோடு, 'இந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்துப் பேசுவோம்' என்றுதான் அ.தி.மு.க தலைமையிலான அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, எம்.ஜி.ஆரின் பெயரில் வைக்கப்பட்டுள்ள இந்த விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்துப் பேசினால், அதை அரசியல் ஆக்கலாம் என்று கணக்குப்போடுகிறது. இப்படியான மலிவான அரசியல் செய்யும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்

செயல்பாடுகளுக்கு இடம் அளிக்கக் கூடாது என்றுதான் அமைதிகாத்து வருகிறோம்" என்றார். 

 "இந்த அரசாணை விவகாரம் தேர்தல் விதிமுறைகளுக்குள் வருமா" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் பேசியபோது, "அரசாணை வெளியிட்டதில் மத்திய அரசுக்குத்தான் அதிக பங்கு இருக்கும் எனக் கருதுகிறேன். அதனால், மத்திய அரசு இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விவாதித்திருக்கலாம். எங்களுடன் இதுதொடர்பாக எந்த ஆலோசனையும் செய்யவில்லை. தேர்தல் ஆணையம் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறது. இதுதொடர்பாகப் புகார் வந்தால் உறுதியாக நடவடிக்கை எடுப்போம்" என்றார் தெளிவாக.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "தி.மு.க ஒரு தீய சக்தி என்று போராடி அந்தக் கட்சியில்

இருந்து வெளியில் வந்து தனிக்கட்சி தோற்றுவித்தவர் புரட்சித் தலைவர். அந்த வெறுப்பின் வெளிப்பாடு தி.மு.க-வுக்கு உள்ளது. 100 ஆண்டுகள் கடந்தும் புரட்சித் தலைவரின் புகழ் நிலைத்து நிற்கிறது. அவருடைய அந்தப் புகழைப் போற்றும் வகையில் நாங்களும் பிரமாண்டமாகக் கொண்டாடி முடித்துள்ளோம். அதோடு புரட்சித்தலைவரின் நினைவு வளைவுகளும் திறக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தோம். அந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தேர்தல் என்ற அந்தக் கண்ணோட்டத்தை வைத்துப் பார்க்கிறார்கள். உலக மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆர் என்ற மாபெரும் கலைஞரைப் போற்றிப் புகழும்போது, இவர்கள் இவ்வாறு சிறுமைபடுத்தினால் அரசியலிலிருந்து தனிமைப்பட்டுப் போவார்கள் என்பது உறுதி. எனவே, புரட்சித்தலைவரைத் தொட்டால், இவர்கள் கெட்டார்கள். இது ஒன்று புதிய திட்டம் அல்ல... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக  வைத்திருந்தோம். அதற்கான அறிவிப்பையும் முன்னதாகப் பெற்றிருந்தோம். அப்படி இருக்கும்போது, இது எப்படித் தேர்தல் நடைமுறைக்குள் வரும்? தேர்தல் விதிமுறைகளைப் பற்றித் தெரியாமல் தி.மு.க-வினர் பேசுகிறார்கள்" என்றார்.

தேர்தல் விதிகள் நடைமுறையில் இருக்கும்போதுதான் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமா? என்கிற குரல்கள்தான் பரவலாக எங்கும் கேட்கிறது.