Published:Updated:

`ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; கடைந்தெடுத்த பாசிச முறை இது!' - துரைமுருகன் காட்டம்

`ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; கடைந்தெடுத்த பாசிச முறை இது!' - துரைமுருகன் காட்டம்
`ஜனநாயக விரோதம் மட்டுமல்ல; கடைந்தெடுத்த பாசிச முறை இது!' - துரைமுருகன் காட்டம்

மத்திய, மாநில அரசுகள் தன் மீது பழிசுமத்தப் பார்ப்பதாக தி.மு.க பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

தி.மு.க கூட்டணி சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு மற்றும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் நிர்வகிக்கும் கிங்க்ஸ்டன் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி இரவு முதல் 30-ம் இரவு வரை தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாய் கைப்பற்றினர். இந்த நிலையில், 1-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் மீண்டும் சோதனை நடத்தினர். காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனுக்குள் மூட்டையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கின. வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணத்துடன் இணைக்கப்பட்டிருந்த பட்டியலும் கைப்பற்றப்பட்டன.

இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், `தேர்தலில் வெற்றி - தோல்வி சகஜம். எதிரும் புதிருமாக நிற்பவர்கள் கருத்துப்போர் புரிவதுமுண்டு. அதுதான் அரசியல். எதிர்த்து நிற்பவரை தனிப்பட்ட முறையில் பழிவாங்க நினைப்பதும், வீண்பழி சுமத்தி அவமானத்துக்கு உள்ளாக்க முயற்சிப்பதும் இன்றைய அரசியலில் ஆளுங்கட்சி தரப்பில் மேலோங்கி நிற்கிறது. இதற்கோர் எடுத்துக்காட்டுதான் வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு - கல்லூரியை வருமான வரித்துறை சோதனை நடத்திய செயல். இத்தோடு நிற்கவில்லை மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள். எங்களைச் சுற்றி ஒரு கண்காணிப்பு வளையத்தையே உருவாக்கி எங்களைக் கண்காணித்து வருகிறார்கள். இதுவும் போதாது என்று மேலும் சில செயல்களில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடப் போவதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. 


எங்கள் வீடு - கல்லூரி சோதனைகளில் சட்டத்துக்குப் புறம்பான பொருள்கள் எதுவும் கைப்பற்ற முடியவில்லை என்பதால், எங்களை எப்படியும் பழிவாங்கியே தீர்வது என்ற முடிவோடு தேர்தல் நெருக்கத்தில் எங்களுக்குச் சொந்தமான இடங்களில் அவர்களாகவே ஏதாவது பொருள்களை வைத்துவிட்டு, இவர்கள் புதியதாகக் கண்டுபிடித்துவிட்டதாக அவைகளைக் காட்டி எங்கள் மீது வீண்பழி சுமத்த ஒரு முயற்சி நடப்பதாக அறிகிறோம். இதன்மூலம் கதிர் ஆனந்தின் வெற்றியைச் சீர்குலைத்து விடலாம் என்று இந்த அரசுகள் பெருமுயற்சி எடுப்பதாகத் தகவல். இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல; கடைந்தெடுத்த பாசிச முறையாகும்'' என்று துரைமுருகன் ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.