Published:Updated:

சாப்பாட்டு மந்திரம்; நோ துட்டு; எம்.ஜி.ஆர் ராசி! - சி.பி.ராதாகிருஷ்ணனின் நட்சத்திர ஸ்டேட்டஸ்

சாப்பாட்டு மந்திரம்; நோ துட்டு; எம்.ஜி.ஆர் ராசி! - சி.பி.ராதாகிருஷ்ணனின் நட்சத்திர ஸ்டேட்டஸ்

மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி சி.பி.ஆர் வாக்கு சேகரித்தாலும் அ.தி.மு.க அணியில் நிற்பதை ப்ளஸ்ஸாகப் பார்க்கிறார். அவர் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?

சாப்பாட்டு மந்திரம்; நோ துட்டு; எம்.ஜி.ஆர் ராசி! - சி.பி.ராதாகிருஷ்ணனின் நட்சத்திர ஸ்டேட்டஸ்

மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி சி.பி.ஆர் வாக்கு சேகரித்தாலும் அ.தி.மு.க அணியில் நிற்பதை ப்ளஸ்ஸாகப் பார்க்கிறார். அவர் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?

Published:Updated:
சாப்பாட்டு மந்திரம்; நோ துட்டு; எம்.ஜி.ஆர் ராசி! - சி.பி.ராதாகிருஷ்ணனின் நட்சத்திர ஸ்டேட்டஸ்

நட்சத்திர வேட்பாளர்: சி.பி.ராதாகிருஷ்ணன் (கோவை) 

பனியன் கம்பெனி டு அரசியல்:

திருப்பூரில் செல்வாக்கான குடும்பத்தில் 1957-ம் ஆண்டு மே மாதம் 4-ம் தேதி பிறந்தார் சி.பி.ராதாகிருஷ்ணன். அப்பா எல்.ஐ.சி ஏஜென்ட். பள்ளிக்காலத்தை சுப்பிரமணிய செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். இதன் பிறகு பிசினஸ் கனவு துளிர்விடத் தொடங்க, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பி.பி.ஏ படித்தார். சேவை மனப்பான்மை அதிகரிக்கவே, ஜனசங்கத்தின் மாணவர் அமைப்பிலும் கால்பதித்தார். கல்லூரிக் காலம் முடிந்ததும், பனியன் கம்பெனி தொழிலில் கால் பதித்தார். பெரிய அளவில் பணம் புரளத் தொடங்கியது. இதன் அடுத்தகட்டமாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து மாவட்டத் தலைவராக உயர்ந்தார். பா.ஜ.க உருவானதும், அரசியல் பணிகளில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். வாஜ்பாய் பெயரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் கைப்பட சுவர் விளம்பங்களை எழுதியது ஹைலைட். 

தேர்தல் என்ட்ரி:

1998-ம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். இதன் பிறகு தொடர்ந்து ஏறுமுகம்தான். பா.ஜ.க தமிழகத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் என அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தார். தற்போது மத்திய கயிறு வாரியத் தலைவராக இருக்கிறார். 

அத்வானி கூட்டத்தில் வெடிகுண்டு:

1998 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தது பா.ஜ.க. இந்தத் தேர்தலில் கோவை தொகுதியை யாருக்குக் கொடுப்பது எனத் தீவிரமாக ஆலோசித்த பா.ஜ.க தலைமை, திருப்பூரில் இருந்த சி.பி.ஆரைக் கோவைக்கு அனுப்பியது. அந்தக் காலகட்டத்தில் அத்வானி கலந்துகொண்ட கூட்டத்தில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது இஸ்லாமிய அமைப்பு ஒன்று. தொடர்ச்சியாக வெடித்த குண்டுகளால் கோவையின் வர்த்தகமும் முடங்கிப்போனது. ஆனால், அதுவே பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது. இதன் பலனாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் சி.பி.ஆர். 1999-ல் மீண்டும் தேர்தல். இந்த முறை தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி சார்பாக நின்று வென்றார் சி.பி.ஆர். தொடர்ந்து, 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைத்தது பா.ஜ.க. அப்போதும் ராதாகிருஷ்ணன்தான் வேட்பாளர். ஆனால், இம்முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயனிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் சி.பி.ஆருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜனிடம் தோற்றார். ஆனால், அதிக வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்தார் சி.பி.ஆர். தற்போது மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் கோவை தொகுதியில் களம் காண்கிறார். 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. நண்பர்கள் வட்டாரம் அதிகம். எம்.ஜி.ஆரைப் போன்றே தன்னையும் சி.பி.ஆர் என அழைப்பதையே விரும்புவார். 

2. பெரும் செல்வந்தர். ஆனால், பாக்கெட்டில் பணம் வைத்திருக்க மாட்டார். மணிபர்ஸும் இருக்காது. எங்காவது நடுவழியில் கார் ரிப்பேர் ஆனால்கூட திண்டாட்டம்தான். ஆனாலும், கவலைப்பட மாட்டார். 

3. வாட்ச் கட்டுவது பிடிக்காது. சட்டைப் பையில் எப்போதும் சாமி படம் இருக்கும். கழிவறைக்குச் செல்லும்போது பாக்கெட்டில் இருக்கும் சாமி படம் இருக்காது. 

4. சாப்பிடும் முன்பு நீண்ட நேரம் மந்திரம் சொல்வார். மூன்று வேளையும் மந்திரம் சொல்வது வழக்கம். 

5. அசைவப் பிரியராக இருந்தவர், அவரது மகள் அபிராமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது, அசைவத்தை ஒதுக்கினார். இன்று வரையில் தொடுவது இல்லை. 

டாப் 3 சர்ச்சைகள்: 

1. கோவையில் கயிறு வாரியக் கண்காட்சியில் ஊழல் நடந்ததாக வெளியான தகவல்.

3. அனைத்து தரப்பு மக்களுக்குமான பிரதிநிதியாகக் காட்டிக்கொண்டாலும், தீவிர இந்துமதப் பற்றாளராக இருப்பது.

சக வேட்பாளர்களின் ப்ளஸ், மைனஸ்: 

சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் சார்பாக பி.ஆர்.நடராஜன் களம் இறக்கப்பட்டுள்ளார். பி.ஆர்.என் கோவையைச் சேர்ந்தவர் என்பதும் 2009-ம் ஆண்டு தேர்தலில் வென்று எம்.பிஇயாக இருந்தவர் என்பதும் ப்ளஸ். எளிதில் அணுகக் கூடியவர், மக்கள் போராட்டங்களில் முன்நிற்பவர் என்பதும் சி.பி.எம் கட்சிக்கான பலம். இவர் தன்னுடைய பிரசாரத்தில், கோவையின் குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நிறுவனத்துக்குத் தாரை வார்த்த அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளையும்  ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால் கோவையின் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டதையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்காதது, பணம் செலவழிக்கமாட்டார் என்பது போன்ற விஷயங்கள் சற்று மைனஸ். 

அ.ம.மு.க. வேட்பாளரான அப்பாதுரை, "நான் எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி" என்பதைச் சொல்லி அ.தி.மு.க அதிருப்தி ஓட்டுகளைக் பிரிக்க முயல்கிறார். மாற்றம் என்ற வார்த்தையை மந்திரமாகக் கொண்டிருக்கும் மகேந்திரன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வாக்கு சேகரித்து வருகிறார். 

மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி சி.பி.ஆர் வாக்கு சேகரித்தாலும் அ.தி.மு.க அணியில் நிற்பதை ப்ளஸ்ஸாகப் பார்க்கிறார். மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடி செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கும் பி.ஆர்.என் பெரும் சவாலாக விளங்கினாலும், கடைசி நேரக் காட்சிகளால் களநிலவரம் மாறும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் தாமரைக் கட்சித் தொண்டர்கள்.