Published:Updated:

தலைவர்களை இழந்து தவிக்கும் பி.ஜே.பி! கோவாவில் யாருக்கு வெற்றி?

தலைவர்களை இழந்து தவிக்கும் பி.ஜே.பி! கோவாவில் யாருக்கு வெற்றி?
தலைவர்களை இழந்து தவிக்கும் பி.ஜே.பி! கோவாவில் யாருக்கு வெற்றி?

தலைவர்களை இழந்து தவிக்கும் பி.ஜே.பி! கோவாவில் யாருக்கு வெற்றி?

ந்திய சுற்றுலாத்தலங்களில் மிகவும் அழகு வாய்ந்த கோவாவில் மொத்தமுள்ள இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ம் தேதி  தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்று கோவா. மொத்தம் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், கோவா வடக்கு, கோவா தெற்கு என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. கொங்கணி, மராத்தி, உருது, கன்னடம் எனப் பல மொழி, கலாசாரப் பின்புலத்தைக் கொண்ட மக்களையும் கொண்டுள்ளது. தலைவர்களின் இறப்பு, நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை, கோவா மக்களின் நீண்டகால கோரிக்கையான மாநில சிறப்பு அந்தஸ்து, சமீபத்தில் கோவாவில் செயல்பட்டு வந்த 88 சுரங்கத் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவை கோவா அரசியலில் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக  உருவெடுத்துள்ளன.

தலைவர்களை இழந்து தவிக்கும் பி.ஜே.பி :

கடந்த மார்ச் 17-ம் தேதி முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் மோடியைப் பிரதம வேட்பாளராக முன்மொழிந்தவர்களில் முக்கியமானவர் மனோகர் பாரிக்கர். தனிப்பட்ட முறையிலும் மோடிக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தவர். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பி.ஜே.பி வெற்றிபெற்றவுடன், மனோகர் பாரிக்கருக்குத் தன்னுடைய அமைச்சரவையில் இடமளித்து மிக முக்கியத் துறையான பாதுகாப்புத் துறையை வழங்கினார். கோவாவில் பி.ஜே.பி-யின் முகமாக இருந்த பாரிக்கரின் இறப்பு தவிர, இன்னும் பிற தலைவர்களின் இறப்பு இந்தத் தேர்தலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் கோவா முன்னாள் துணை முதல்வரான ஃபிரான்சிஸ் டி சோசா காலமானார். கோவாவில் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 35 சதவிகித கிறிஸ்துவர்கள், இஸ்லாம் ஆகிய சிறுபான்மை மக்களைக் கொண்டுள்ளது. ‘ஒரே மதம்; ஒரே நாடு’ என்ற கொள்கையைக்கொண்ட பி.ஜே.பி-யின் சிறுபான்மை மக்களின் ஓட்டுகளைக் கவரும் முகமாக விளங்கியவர் ஃபிரான்சிஸ் டி சோசா. பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சி தலைவர் ஒருவர், "இந்தியா இந்து நாடாக உருவெடுக்கும்" என்ற பேசியபோது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து,  “இந்தியா, இந்து நாடாகவே இருந்தது, இனியும் இந்து நாடாகவே இருக்கும். நான் உட்பட இந்துஸ்தானில் உள்ள அனைவரும் இந்துக்கள்தான். நான் கிறிஸ்துவ இந்து. இந்தியா என்பது ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம்” என்றார். இவரின் இறப்பு, கோவாவில் பி.ஜே.பி-க்கு கிடைத்து வந்த சிறுபான்மை மக்களின் ஓட்டு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகதாயி நதிநீர்ப் பிரச்னை:

தமிழக அரசியலில் காவிரி நதிநீர்ப் பிரச்னை முக்கியப் பங்கு வகிப்பதுபோல... கோவா, கர்நாடக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தது மகதாயி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை. இந்தியாவில் உள்ள மிகச் சிறிய நதிகளில் ஒன்று மகதாயி. கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியைச் சார்ந்த மக்கள் மகதாயி நதியின்  நீர் ஆதாரத்தை நம்பியுள்ளனர். பல ஆண்டுகளாக மகதாயி நதியிலிருந்து 7.6 டி.எம்.சி தண்ணீரை, கோவா அரசிடம் கர்நாடக அரசு கேட்டு வருகிற நிலையில், கோவா மாநில அரசு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. இதற்காக, பல கர்நாடக அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன. ஆனால் கோவா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பி.ஜே.பி சற்று வலுவாக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள  நிலையில் உள்ளதால், மகதாயி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில் பி.ஜே.பி-யால் ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.

வெற்றியைத் தீர்மானிக்கும் சுரங்கப் பிரச்னை:

கடந்த பிப்ரவரி 7-ம் தேதி கோவா மாநிலத்தில் செயல்பட்டு வந்த இரும்புத்தாதுக்களை  வெட்டியெடுக்கும் 88 சுரங்கத் தொழிற்சாலைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. கோவா மாநிலத்தின் நிதி ஆதாரம், முக்கியமாக  அங்கு செயல்பட்டு வரும் சுரங்கத் தொழிற்சாலைகளைச் சார்ந்துள்ளது. கோவாவில் சுரங்கத் தொழிற்சாலைகளுக்குத் தடைவிதித்து ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில், இந்தத் தடையால் கிட்டத்தட்ட  மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

சமீபத்தில் இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சரும், கோவா வடக்குத் தொகுதி மக்களவை உறுப்பினருமான ஸ்ரீபாத் நாயக், “பி.ஜே.பி அரசால் மட்டுமே கோவாவில் நிலவி வரும் சுரங்கத் தொழிற்சாலைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு வழங்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாகச் சுரங்கத் தொழிலாளர் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் தொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குக்கான தீர்ப்பு கோவா தேர்தல் தேதிக்கு முன்பு வெளியாகும்பட்சத்தில், இவை கோவா தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா மக்களின் நீண்டநாள் கோரிக்கை:

தங்களின் நிலம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்கும் விதமாகக் கோவாவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டி, கோவா கடற்கரைப் பகுதிகளைச் சார்ந்த பூர்வக்குடி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். கோவா சுற்றுலாத் துறை உலக அளவில் பிரபலமடைந்துள்ளதால், பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், கோவா கடற்கரைப் பகுதிகள் வணிகமயமாக்கப்பட்டுள்ளதால், கோவா பூர்வக்குடி மக்களின் நிலங்கள் பலவும் வெளிநாடு, வெளிமாநிலத்தைச் சார்ந்தவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. இந்த நடைமுறையைத் தடுக்க அந்த மக்கள் கோவாவுக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

கோவாவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என 2009-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா கந்தி வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவாவுக்குச் சென்றிருந்தபோது, மக்கள் மீண்டும் இந்தக் கோரிக்கையை நினைவுறுத்தியிருந்தனர். அதேபோல், கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கோவாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ``கோவா மக்கள் பொருளாதாரரீதியாகச் சிறப்பு அந்தஸ்து கேட்காமல், தங்களின் நிலம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காகச் சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன் வைக்கின்றனர். மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தால், கோவா மக்களுக்குச் சாதகமான முடிவு எடுக்கப்படும்” என்றார். ஆனால் அடுத்த தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இதற்குத் தீர்வுகாணும் விதமாக எந்த நடவடிக்கையும் இதுவரை மத்திய அரசு எடுக்கவில்லை.

தொகுதி நிலவரம்:

கோவா வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில், ஐந்தாவது முறையாகப் பி.ஜே.பி-யின் சார்பாக ஸ்ரீபாத் நாயக் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். இந்நிலையில், இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் கோவா மாநிலத் தலைவர் கிரிஷ் சௌந்தகர் களமிறங்குகிறார். ஸ்ரீபாத் நாயக் வலுவான போட்டியாளராக இருந்தாலும் சுரங்கத் தொழிலுக்குத் தடை விதிக்கப்பட்டது போன்ற பிரச்னைகளில், கோவா வடக்கு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆட்சியில் உள்ளவர்கள் மீது அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. இவை கோவா வடக்குத் தொகுதியில் பி.ஜே.பி - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டிக்கு வழிகோலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கோவா தெற்கு நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் பி.ஜே.பி - காங்கிரஸ் கட்சிகளை மாறிமாறி வெற்றிபெறச் செய்துவருகின்றனர். பி.ஜே.பி-யின் சார்பாகக் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர கேசவ் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு ஏதிராக முன்னாள் கோவா முதல்வர் ஃப்ரான்சிஸ் சர்தன்ஹா போட்டியிட உள்ளார். இவர் ஏற்கெனவே இரண்டு முறை இதே மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ... மக்களின் பெரும்பான்மையான முடிவு மே 23-ம் தேதிதான் தெரியவரும்!

அடுத்த கட்டுரைக்கு