Published:Updated:

"அந்த மோடி அலையைவிட இந்த மோடி அலை பெரிசு!” - நரேந்திர மோடி

முந்தைய ஆட்சிக் காலத்தில் ஒன்று இரண்டு சாதனைகளைச் செய்துவிட்டு அதைப்பற்றி ஐந்தாண்டுகளுக்கு தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள். ஆனால், எனது ஆட்சி அப்படியா? எந்தத் துறையை எடுத்தாலும் அதில் ஒரு புதுமையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறேன். அதை மூன்று என்கிற எண்ணுக்குள் சுருக்கிவிடுவது என்னுடன் உழைத்தவர்களுக்குச் செய்யும் அநீதி.”

"அந்த மோடி அலையைவிட இந்த மோடி அலை பெரிசு!” - நரேந்திர மோடி
"அந்த மோடி அலையைவிட இந்த மோடி அலை பெரிசு!” - நரேந்திர மோடி

”நான் ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து ஊடங்கங்களைச் சந்திப்பேன். மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன்”, இது 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நரேந்திர மோடி கொடுத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தற்போது தொடர்ச்சியாகத் தேசிய ஊடகங்களைச் சந்தித்துப் பேட்டி கொடுத்து வருகிறார். தேசிய அளவில் வெளிவரும் நாளிதழான இந்துஸ்தான் டைம்ஸ்-க்கு அவர் அளித்த பேட்டியின் தமிழாக்கம்:

"உங்களுடைய பதவிக்காலம் அதிவிரைவாகக் கடந்துவிட்டதே, 2014 முதல் 2019 வரையிலான இந்த ஆட்சிக் காலத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?" 

``மனதுக்கு நிறைவான ஐந்தாண்டுகள் எனச் சொல்வேன். நான் பதவியேற்ற சமயம், நான் எதிர்பார்த்து வந்ததைவிட நிர்வாக நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. நல்ல வேளையாக ஏற்கெனவே ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அனுபவம் எனக்குக் கைகொடுத்தது. வழிபிறக்கும் என நம்பினேன்; வழி பிறந்தது. இந்த ஐந்தாண்டுகளில் இந்தியா முழுவதும் நான் மேற்கொண்ட பயணத்தில் என்னுடைய நம்பிக்கை இன்னும் வலுவடைந்திருக்கிறது. இந்தியா இன்னும் ஏன் வளரும் நாடுகள் பட்டியலிலேயே இருக்கிறது எனத் தெரியவில்லை. நாம் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இடம்பெற வேண்டியவர்கள். 

"உங்களுக்கு மனநிறைவைத் தந்த மூன்று சாதனைகளாக எதைச் சொல்வீர்கள்?" 

``மூன்று என்று குறுக்கிக்கொள்வது மிகமிகக் கடினம். முந்தைய ஆட்சிக் காலத்தில் ஒன்று, இரண்டு சாதனைகளைச் செய்துவிட்டு அதைப்பற்றி ஐந்தாண்டுகளுக்குத் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஆனால், என்னுடைய ஆட்சி அப்படியா. எந்தத் துறையை எடுத்தாலும் அதில் ஒரு புதுமையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறேன். அதை மூன்று என்கிற எண்ணுக்குள் சுருக்கிவிடுவது என்னுடன் உழைத்தவர்களுக்குச் செய்யும் அநீதி.

"நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சில வாக்குறுதிகளைக் கொடுத்தீர்கள். அவை அத்தனையையும் நிறைவேற்றிவிட்டீர்களா?"

நாம் நினைத்த அத்தனையும் நிறைவேறிவிட்டால் உலகம் இயங்குவதே நின்றுபோகும். மக்களுக்கு இன்னும் நிறைய செய்வதற்காக எனக்குள் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டிருக்கிறேன்.

"பணமதிப்பு நீக்க நடவடிக்கை நீங்கள் எதிர்பார்த்ததைச் செய்ததா?"

கறுப்புப் பணத்துக்கு எதிராக யாரும் எடுத்துவைக்கப் பயந்த முதல் அடியை நான் எடுத்து வைத்தேன். முதல் அடியே அனுகூலமாக அமைந்தது. 1,30,000 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது. 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 6,900 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசியல்ரீதியாக யாரும் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அரசியலைவிட தேசத்தின் நலன் முக்கியம்.

"நீங்கள் சொல்லும் இந்த டேட்டா பொய் எனச் சொல்லப்படுகிறதே?" 

``இந்தக் குற்றச்சாட்டை சொல்பவர்கள் தங்களின் ஆட்சியில் பின்பற்றிய அதே முறையைக் கொண்டுதான் இந்த டேட்டாக்களையும் எடுத்துள்ளோம். அவர்களைவிட நாங்கள் சிறப்பாகச் செய்துவிட்ட காழ்ப்புணர்ச்சியில் இப்படியான பொய்யைக் கூறுகிறார்கள். அவர்கள்தாம் இந்தத் தேசத்தைத் துவம்சம் செய்துவிட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தேர்தலில் தோற்றுவிட்டால் வாக்கு இயந்திரத்தில் குற்றம் கண்டுபிடிப்பார்கள். தங்களுக்கு எதிராக வழக்கு திரும்பிவிட்டால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையே தகுதியற்றவராக்குவார்கள். அவர்களிடம் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான், நீங்கள் மோடியை எதிர்ப்பதென்றால் எதிர்த்துக் கொள்ளுங்கள். அதற்காக, இந்தியாவின் நன்மதிப்பை சர்வதேச அளவில் விலை பேசாதீர்கள்.

"காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த உங்கள் விமர்சனம் என்ன?"

``காங்கிரஸ் கட்சி `கஜினி’ படத்தில் வரும் நாயகன் கதாபாத்திரத்தைப்போல. அவர்கள் ஒவ்வொருமுறை சொல்வதையும், அடுத்த முறை மறந்துவிடுவார்கள். இந்தியாவில் வறுமை ஒழிப்புதான் அவர்களுடைய முக்கியக் கொள்கை என்றால், இந்த 72 வருடத்தில் 71 பைசாவேனும் அவர்கள் மக்களுக்குக் கொடுத்திருப்பார்களா? ஜவஹர்லால் நேரு தொடங்கி தற்போது ராகுல்காந்தி வரை 'வறுமையை ஒழிப்போம்' என்று வாயளவில் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

"தற்போது இந்தியாவின் சில முக்கியக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் உங்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது என பிரசாரம் செய்துவருகிறார்களே?"

"அவர்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் முந்தைய ஆட்சியின்போது, சுகபோகமாக இருந்தவர்களாகத்தான் இருக்கக்கூடும். முந்தைய ஆட்சி அவர்களுக்கு விருதுகளை வழங்கியிருக்கும். முந்தைய ஆட்சியில் அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கும். மற்றபடி இதில் கருத்துக்கூற வேறொன்றும் இல்லை." 

"ரஃபேல் ஊழல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே...?"

``அது ஊழலும் இல்லை. அதில் சர்ச்சையும் இல்லை. இந்திய ஊடகங்கள், சார்பு நிலையற்றுச் செயல்படுகிறதென்றால் அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமும் இதுதொடர்பாகக் கேள்விகளை எழுப்ப வேண்டும். எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தேசிய பாதுகாப்பில் ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார் எனில், தேசிய பாதுகாப்பு பற்றி கேள்வி கேட்க வேண்டியது அவரிடம்தான். உச்ச நீதிமன்றம் தொடங்கி பிரெஞ்சு நாடாளுமன்றம்வரை இதில் எவ்விதச் சிக்கலும் இல்லை என்று கூறிவிட்டார்கள். இருந்தும் ராகுல்காந்தி மட்டும் தொடர்ந்து ஊழல் ஊழலென்று கதறுகிறார். 

"ஒருவேளை மீண்டும் நீங்கள் வெற்றி பெற்றால், மக்களுக்கான உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?" 

"தேர்தலையொட்டி இதுவரை 70 - 80% வரை இந்தியா முழுவதும் பயணித்துவிட்டேன். கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் மோடி அலை பெரிதாக இருக்கிறது. அதனால், பாரதிய ஜனதா மட்டுமல்ல அதன் கூட்டணிக்கட்சிகளும் சென்ற தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும். நாங்கள் வெற்றிபெற்ற பிறகு, மக்களுக்குச் செய்ய வேண்டியது குறித்து அறிவிப்போம்."