Published:Updated:

சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரித்த திரைக் கலைஞர்கள்... களைகட்டிய மதுரை!

சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரித்த திரைக் கலைஞர்கள்... களைகட்டிய மதுரை!
சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரித்த திரைக் கலைஞர்கள்... களைகட்டிய மதுரை!

மற்ற வேட்பாளர்களை நிறுத்தி பத்து நிமிடங்களும், சு.வெ-வை நிறுத்தி ஒரு நிமிடமும் தத்தமது திட்டங்களைப் பேசிவிட்டால் போதும். வெற்றி யாருக்கு என்பது தெரிந்துவிடும்" என மதுரை வேட்பாளர்களுக்கு நேரடியாகச் சவால்விட்டார்.

லை இரவுகளில் படைப்பாளிகளை உற்பத்திசெய்து கொடுத்துக்கொண்டிருந்த த.மு.எ.க.ச., அதே படைப்பாளிகளை ஒன்றுதிரட்டி எழுத்தாளரும், மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளருமான சு.வெங்கடேசனுக்கு வாக்குகேட்டு, கலைவிழா நடத்தி மதுரையை அதிர வைத்திருக்கிறது. 

திரைக்கலைஞர்கள் ரோகிணி, பூ ராமு, இயக்குநர்கள் லெனின்பாரதி, ராஜூமுருகன், கோபிநயினார், கரு.பழனியப்பன் என `இடதுபுறம்' பயணிக்கும் நட்சத்திரப் படைப்பாளர்கள் கூடி, கைகளை உயர்த்தி வாழ்த்துக் கோஷம் முழக்கினர். இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோரும் கைகோத்தனர்.

மாலை கவிய, இந்தக் கலைஞர்களின் சங்கமம் `முரசு' அதிர்வில் தொடங்கியது. `அமைப்பின் அரசவைப் பாடகர்' அடைமொழியோடு மேடையேறினார், கரிசல்குயில் கிருஷ்ணசாமி. தஞ்சை பிரகதீஸ்வரனும் தன் பங்குக்கு ஒன்று பாட, நச்சென்று மொத்தம் நான்கு பாடல்கள். கூட்டத்தினர் அனைவருக்கும் சு.வெங்கடேசன் மாஸ்க் தரப்பட்டது. `நாட்டையே உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்' புத்தகம் தடைசெய்யப்பட்ட அரைமணி நேரத்தில், இணையத்தில் அதை 10 லட்சம்பேர் தரவிறக்கம் செய்துவிட்டனர் என்ற செய்தியைச் சொன்னதோடு, புத்தகம் இந்தக் கூட்டத்தில் விற்பனைக்கு உள்ளது என்ற அறிவிப்பையும் வெளியிட்டார், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த மதுக்கூர் ராமலிங்கம். 

தொடக்கவுரையாற்றிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், ``ஓர் எழுத்தாளனைவிடச் சிறந்த அரசியல்வாதி இருக்கவே முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக சு.வெ. குரல் ஒலிக்கும்" என்றார். திரைப்பட இயக்குநர் மகேந்திரன், மறைந்த பாடலாசிரியர் கல்யாணசுந்தரத்தின் மனைவி கௌரவம்மாள், தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவாஜி சிலையை மதுரையில் அமைப்பதற்குப் பட்ட பாட்டினைச் சொல்லி, ``அதைப் போலவே கலைஞர்களின் அங்கீகாரத்துக்காக சு.வெ. போராடுவார், போர்வீரனாக நிற்பார்" எனப் பேசிய மேடைக்கலைவாணர் நன்மாறன், `` `சண்டியர்' நிருபரின் சமூகக் கோபம் மாறாமல் அப்படியே இருக்கிறார்" என நடிகை ரோகிணியை வாழ்த்தினார். அங்கே கடலை விற்றுக்கொண்டிருந்த பெரியவர் தன் வியாபாரத்தை விட்டுவிட்டு, நன்மாறனின் அங்கதப் பேச்சை மெய்மறந்து கேட்டு நின்றார்.

இயக்குநர் லெனின்பாரதி, ``இது, ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் நடக்கும் தேர்தல். கருத்துச் சுதந்திரத்துக்குத் தடை விதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சு.வெ.-வை, இந்து விரோதி என்கிறார்கள். ஆடு, கோழி பலியிடத் தடை விதித்த பண்பாட்டை நசுக்கியபோது அதற்கு எதிராகக் கருமாத்தூரில் கலைவிழா எடுத்து நடத்திக் காட்டியவர்" என்றார். ``கறுப்பு நிறம்தான் சரி, வெள்ளை நிறம் ஆகாது என்று மருத்துவத்தில் நான் சொல்வதைத்தான் இந்தத் தேர்தலுக்கும் குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டுக்கு மரத்துப்போய் விட்டது, இதைக் குணமாக்கும் சிகிச்சை நாள்தான், ஏப்ரல் 18" என்று மருத்துவத் தொனியிலேயே கருத்துகளைச் சொன்ன கு.சிவராமன், ``மோகனோடு பழகியதில்லை. சு.வெ-விடம் மோகனை உணர்கிறேன்" என்றார். தொகுப்பாளர் மதுக்கூரார், ``முதல்முறையாக ஒரு மருத்துவர் உண்மை பேசியிருக்கிறார், அதுவும் அரசியல் மேடையில்" என கிச்சுகிச்சு மூட்டினார்.

``அவர்களுக்குத் தேசம் என்பது மண்; எங்களுக்கு மக்கள். சௌவ்கிதார் எனச் சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடிதான் 44 வீரர்களைக் காக்கத் தவறியிருக்கிறார். இனிமேல், `கோ பேக் மோடி' அல்ல, `நோ மோர் மோடி' " எனக் கூறிய திரைக்கலைஞர் பூ ராமு, ``ரஃபேல் புத்தகத்தைப் பிரபலப்படுத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி" என்றார். இயக்குநர் கோபி நயினார் பேசுகையில், ``கலைஞர்கள் மக்கள் பக்கமும் கம்யூனிஸ்ட் பக்கமும்தான் இருப்பார்கள். தமிழகத்தில் நம்மை ஆள்வோரை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்தத் தேர்தலும், இந்தக் கூட்டணியின் பிரசாரக் கூட்டங்களும் கைதிகள் விடுதலையாகும் உணர்வைத் தருகிறது" என்றார். பேசுவதற்காக ரோகிணி வந்துநின்ற நிமிடம், சு.வெங்கடேசன் நிகழ்ச்சிக்கு வருகை தந்து, மேடையேறினார்.

மரபணு மாற்று விதைகளை எதிர்த்துப் போராடிய நம்மாழ்வாரை நினைவுகூர்ந்தபடியே தன் பேச்சைத் தொடங்கிய திரைக்கலைஞர் ரோகிணி, ``யாருக்கு எப்போது என்ன பிரச்னை என்றாலும் முன்நிற்பவர்கள், தோழர்களே! இங்கே மேடையில் இருப்போர் அனைவரும் அறத்தோடு வளர்ந்து வந்தவர்கள். படைப்பாளிகளாகிய நாங்கள் உங்களோடு இருப்போம். சு.வெ. வென்று வந்ததும் மதுரையின் நீர்நிலைகளைத் தூர்வாரி, அவற்றை மேன்மைப்படுத்தும் பணிகளைச் செய்வார்" என உறுதி கூறினார். கமென்ட் அடித்த மதுக்கூரார், ``பார்லிமென்ட்டையும் தூர்வாரப் போகிறார்" என்றார். மேடையில் அத்தனை படைப்பாளிகளும் எழுந்துநின்று கைகள் கோத்து `மதுரையை மீட்போம்' என முழங்கினர்!

``மதுரை வாக்காளர்கள் சு.வெ-வுக்கு ஓட்டு போடலைன்னா, அந்த ஓட்டு செல்லாத ஓட்டுக்குச் சமம்" என்று தொடங்கிய இயக்குநர் ராஜூமுருகன் தொடர்ந்து பேசுகையில், ``நான் இங்கு நிற்பதற்குக் காரணமே கம்யூனிஸ்ட் இயக்கம்தான். கம்யூனிஸ்ட்களுக்கு இந்த நாடு கடன்பட்டிருக்கிறது. அதிகாரவர்க்கத்துக்கு எதிராய் நாடகம் போட்டதற்காக நாடகம் நடந்துகொண்டிருந்த இடத்திலேயே கொல்லப்பட்டவர், சப்தர்ஹஸ்மி. அவரது தங்கை சம்னம்ஹஸ்மியைச் சந்தித்தேன். சப்தரின் நீட்சியாக நாடகம் போட்டுக்கொண்டிருக்கிற சம்னம், `இதுவரையிலும் தப்பிவிட்டேன். இந்த ஆட்சி அகலாவிட்டால் அடுத்த ஆண்டுகளில் நான் கொல்லப்படுவது உறுதி' என்றார். அவர் சொன்னது முற்போக்குப் படைப்பாளிகளாகிய நமக்கும் பொருந்தும்" என்றார்.

``நான் கம்யூனிஸ்ட் தந்தையின் மகன்" என்ற பாடலாசிரியர் யுகபாரதி, தானெழுதிய `தேர்தல் வருது, ஜனங்க ஜாக்கிரதை' பாடலை பற்றிப் பேசினார். ஆளுங்கட்சியினர், தங்களுக்கும் பாட்டெழுதித் தரச்சொல்லி கேட்டதாகவும் தான் மறுத்துவிட்டதாகவும் கூறினார். ``கொடுங்கோல் ஆட்சியையும் தெர்மாகோல் ஆட்சியையும் பார்த்துவிட்டோம், இனி செங்கோல் ஆட்சியை நோக்கிச் சொல்வோம்" என ரைமிங்காகப் பேசிய நந்தலாலா, ``நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் எல்லாம் சின்னச் சின்ன மருந்து மாத்திரைகளைப்போல. முற்றிய புற்றுநோயைச் சரிசெய்ய இவை சரிப்பட்டு வராது. அறுவைசிகிச்சைதான் முழுமையான தீர்வு. அதுதான் இந்த மதச்சார்பற்ற கூட்டணி" என்றார்.

இவர்களைத் தொடர்ந்து இயக்குநர் கரு.பழனியப்பன், ``தலைமுறைக்கான தேர்தல் இது. `மேலிருப்பவன் தம்மைப் பார்த்துக்கொள்வான்' என்ற மெத்தனத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை வெகு அலட்சியமாகக் கையாளுகிறார், தமிழக முதல்வர். மேலிருப்பவனைக் கீழிறக்கப் போகிறோம். கீழிருப்பவர்கள் தானாக முடிந்துவிடுவார்கள். கறுப்புப் பணம் 11,000 கோடியை மீட்பதாகச் சொல்லி, அதற்காக 27,000 கோடி ரூபாய் செலவு செய்த பிரதமரே! `ப்ராக்ரஸ் ரிபோர்ட் தருவேன்'னு சொன்னீர்களே, அதைக் காட்டுங்கள், அத்தனையும் ஜீரோ மார்க்தான்" என்றார். மேலும், ``சட்டமன்றத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை அமைத்துவிட்டது குறித்து கேட்டதற்குக் கலைஞர், `கம்யூனிஸ்ட் இல்லாத சபை அமைஞ்சிருச்சே' என்று வருத்தப்பட்டாராம். எதையும் மக்கள் பக்கமிருந்து பார்த்து அணுகுகிறவர்கள் என்பதால் கம்யூனிஸ்ட்கள் நாட்டின் தேவை. நாட்டையே உலுக்கிய ஆஷிபா சம்பவத்தை வெளிக்கொண்டுவந்தது, அந்தப் பகுதியில் உள்ள ஒரு கம்யூனிஸ்ட்காரர்தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய கரு.பழனியப்பன், ``சு.வெங்கடேசன் நல்ல எழுத்தாளரும், சிந்தனையாளருமாக இருக்கிறார். அ.தி.மு.க-காரர்கள் பேசும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுகிறார்கள். மற்ற வேட்பாளர்களை நிறுத்தி பத்து நிமிடங்களும், சு.வெ-வை நிறுத்தி ஒரு நிமிடமும் தத்தமது திட்டங்களைப் பேசிவிட்டால் போதும். வெற்றி யாருக்கு என்பது தெரிந்துவிடும்" என மதுரை வேட்பாளர்களுக்கு நேரடியாகச் சவால்விட்டார். இறுதியாகப் பேசிய சு.வெ., ``அமைப்பின் இந்த அன்புக்கும், தொடர் ஆதரவுக்கும் நன்றி" என்றார். அவரையும் விட்டுவைக்காத மதுக்கூர், ``த.மு.எ.க.ச. கட்டிய டெபாசிட் பணத்தை ஜெயித்து வந்ததும் திரும்ப அமைப்புக்கே வழங்கிவிடுவார் என நம்புகிறோம்" எனக் கூற, கூட்டத்தில் சிரிப்பொலிகள்! 

அத்தனை பேரும் ஆவலோடு காத்திருந்த புதுகை பூபாளத்தின் நாட்டுநடப்பு நையாண்டி, வெடிச் சிரிப்புகளால் நிறையத் தொடங்கியது. தங்கள் நகைச்சுவை அதிரடிகளால் நிகழ்வைச் சிரிப்போடும் சிந்தனையோடும் சிறப்போடும் முடித்துவைத்தனர், பிரகதீஸ்வரன் அண்ட் செந்தில் டீம்!

அடுத்த கட்டுரைக்கு