Published:Updated:

``பா.ம.கவுக்காக ஆப்பிள் சின்னத்தில் வாக்களிப்பீர்....!’’ - திண்டுக்கல்லின் பிம்பிளிக்கி பிலாப்பி நிலவரம்

``பா.ம.கவுக்காக ஆப்பிள் சின்னத்தில் வாக்களிப்பீர்....!’’ - திண்டுக்கல்லின் பிம்பிளிக்கி பிலாப்பி நிலவரம்
``பா.ம.கவுக்காக ஆப்பிள் சின்னத்தில் வாக்களிப்பீர்....!’’ - திண்டுக்கல்லின் பிம்பிளிக்கி பிலாப்பி நிலவரம்

39 ஆண்டுகளுக்குப் பிறகு உதயசூரியன் உதிக்குமா? அல்லது அ.தி.மு.க.வின் வாக்குவங்கியை நம்பி களம் காணும் பா.ம.க.வின் மாம்பழம் பழுக்குமா? திண்டுக்கல் கள நிலவரம்!

தொகுதி: திண்டுக்கல்

திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழநி, நிலக்கோட்டை, நத்தம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

திப்பு ஆண்ட பூமி:

பூட்டுக்கும் பிரியாணிக்கும் புகழ் பெற்ற தொகுதி. விவசாய பூமி. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மாநிலத்தவரையும் கவர்ந்த புகழ் பெற்ற பழநி தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ள தொகுதி. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த திப்பு சுல்தான் ஆண்ட பூமி. சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற சுப்ரமணிய சிவா பிறந்த வத்தலகுண்டு, கோபால நாயக்கர் வாழ்ந்த விருப்பாட்சி ஆகிய ஊர்கள் இந்தத் தொகுதியில்தான் இருக்கின்றன. தமிழகத்திலேயே தோட்டக்கலை பயிர்கள், மலைப்பயிர்கள், ஆரஞ்ச், ஆப்பிள் வரை அனைத்து விதமான பயிர்களும் இங்கு விளைகின்றன. உலகப்புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான கொடைக்கானல் இதன் பெருமையில் ஒன்று. விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், பூட்டு, லாக்கர், பீரோ தொழிலுக்கு பெயர் போன ஊர் திண்டுக்கல். பஞ்சாலை தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை, சின்னாளபட்டி சேலை, பிரியாணி போன்றவை திண்டுக்கல்லின் பெருமையான அடையாளங்கள்.

பிரபாகரனுக்குப் போர் பயிற்சி:

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீராங்கனையான வீரமங்கை வேலுநாச்சியார் போர்ப் பயிற்சி பெற்றதும் ஆங்கிலேயரை எதிர்த்துப் படைகளை திரட்டியதும் திண்டுக்கல் விருப்பாட்சி பகுதியில்தான். ஹைதர் அலி கொடுத்த 5,000 வீரர்களுடன் வெள்ளையரை எதிர்த்து போரிடக் கிளம்பியதும் திண்டுக்கல்லிலிருந்துதான். பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயர்களுக்கு அடிவயிற்றைக் கலக்கச் செய்த மாவீரன் திப்பு சுல்தான் நடமாடிய பகுதி. பிரபாகரன் மற்றும் அவர் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் போர் பயிற்சி எடுத்த சிறுமலை இங்குதான் இருக்கிறது. உலக புகழ்பெற்ற காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம், சுங்குடி சேலைக்குப் பெயர் போன சின்னாளபட்டி இங்கு அமைந்துள்ளது. 

எம்.ஜி.ஆருக்கு என்ட்ரி:

மறுசீரமைப்புக்கு முன்பாக, உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் வரை பரந்து விரிந்திருந்த தொகுதி, 2008 மறு சீரமைப்புக்குப் பிறகு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளுக்குள் அடங்கியது. அ.தி.மு.க. கட்சியின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொகுதி. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியவுடன் முதன் முதலில் போட்டியிட்ட தொகுதி. அதுவரை காங்கிரஸ், தி.மு.க. வசம் இருந்த தொகுதி இது. 1973-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலிருந்து அ.தி.மு.க. கோட்டையாக மாறியது. அதன் பிறகு நடந்த 12 மக்களவை தேர்தலில் 8 முறை அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. ஆகவே, அ.தி.மு.க.வுக்கு இது ராசியான தொகுதி. அ.தி.மு.க வரலாற்றில் முதன்முறையாக திண்டுக்கல் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது அ.தி.மு.க. தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. கோட்டையாக மாறிய பிறகு, பெரும்பாலும் இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்குக் கொடுத்துவிடுவது தி.மு.க.வின் வழக்கம்.  

தலை முதல் பூட்டு வரை:

தலைக் காயங்களுக்கான சிறப்பு சிகிச்சைக்கு மாவட்டத்தில் மருத்துவ வசதிகள் இல்லை. மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை. இந்த ஒரு காரணத்துக்கான பறிபோன உயிர்கள் ஏராளம். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இங்கு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக அதிகாரிகளையும் நியமித்தார்கள். ஆனால், அதன்பிறகு வந்த அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டுவிட்டது. 

பூட்டுத் தொழிலுக்கு பெயர் பெற்றது திண்டுக்கல். இங்கு செய்யப்படும் பூட்டுக்கள் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தத் தொழிலுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் சிறு தொழிலாகவே உள்ளது. இதற்கான கூடுதல் தொழில்நுட்பங்களைக் கொண்டுவந்து தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்பது தொழிலாளர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு. இதேநிலைதான் தோல் மற்றும் பஞ்சாலை தொழில்களுக்கும். 

திண்டுக்கல் மாப்பிள்ளை, சென்ட் ஃபேக்டரி? 

குடிநீர் பிரச்னை திண்டுக்கல்லின் நீண்டகால பிரச்னை. திண்டுக்கல்லுக்கு பெண் கொடுத்தால் குடிநீருக்காகக் குடங்களை எடுத்துக்கொண்டு அலைய வேண்டும். எனவே திண்டுக்கல்லுக்கு பெண் இல்லை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. தற்போது அந்த எண்ணம் மட்டுமே மாறியிருக்கிறது. ஆனாலும் குடிநீர் பிரச்னை தீரவில்லை. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவருவதாக சொன்னார்கள். ஆனால் திண்டுக்கல்லுக்கு மட்டுமே கொண்டு வந்துள்ளார்கள். திண்டுக்கல்லை தாண்டி கிராமங்களுக்கு இந்தத் திட்டம் சென்றடையவில்லை. வைகையிலிருந்து திண்டுக்கல்லுக்கு குடிநீர் கொண்டுவரப்படும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 10 ஆண்டுகளுக்கு தி.மு.க. ஆட்சியின் போது சொல்லப்பட்டது. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. 

அதேபோல், விவசாயம் என்பது இந்தப் பகுதியில் நீண்டகாலமாகவே இருந்தும் வரும் பிரச்னை. மலைகள் சார்ந்த பகுதி என்றாலும் ஜீவ நதிகள் எதுவும் இங்கு கிடையாது. இருப்பினும் நிலத்தடி நீர் மட்டத்தை நம்பி விவசாயப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், அதிலும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே நடைபெறும் மணல் கடத்தல் நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக குறைத்து வருகிறது. மேலும் இந்தப் பகுதியில் பூக்கள், தக்காளி, முருங்கை என விவசாய பொருள்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. பூக்களை அதிக அளவு ஏற்றுமதி செய்தாலும் மீதமுள்ள பூக்களை வைத்து வாசனை திரவியம் தயாரிக்கலாம். இதற்காக சென்ட் தொழிற்சாலை கொண்டு வர வேண்டும் என்பது இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை. இதேபோல் தக்காளி, முருங்கை ஆகியவற்றுக்கு மதிப்பு கூட்டப்பட்ட தொழிற்சாலை வர வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கை. 

கட்சிகளின் செல்வாக்கு? 

அ.தி.மு.க. கூட்டணி சார்பாக பா.ம.க. களத்தில் உள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ஜோதிமுத்து தொகுதிக்கு அறிமுகம் இல்லாத நபர் என்பது மைனஸ். பா.ம.க.வுக்கு எனத் தொண்டர் படையும் செல்வாக்கும் இல்லாத தொகுதி. அ.தி.மு.க.வின் வாக்குவங்கியை மட்டுமே எதிர்பார்த்துப் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் என இரண்டு தரப்புக்கும் உட்கட்சி பூசல் நிலவுகிறது. இது ஜோதியைப் பிரகாசிக்கவிடாமல் செய்கிறது. இத்தனை தேர்தல்களில் இரட்டை இலைக்கு வேலை பார்த்த தொண்டர்கள், மாம்பழத்துக்கு வேலை பார்க்கத் தயக்கம் காட்டுகிறார்கள். கடைசி நேர பணப் பட்டுவாடா மூலமாக மாம்பழத்தை பழுக்க வைத்துவிடலாம் என நம்பிக்கையோடு வலம் வருகிறது பா.ம.க.

தி.மு.க. வேட்பாளராக வேலுச்சாமி போட்டியிடுகிறார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாத சாதாரண தொண்டர். இவருக்கு சீட் கொடுத்ததை உடன்பிறப்புகள் வரவேற்கிறார்கள். தொகுதியில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருப்பது பிளஸ். தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தொகுதி முழுக்க வலம் வருவதும் தி.மு.க.வுக்கு கைகொடுத்துள்ளது. வேட்பாளர் சார்ந்த கவுண்டர் இன மக்கள் அதிகம் வசிக்கும் ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய பகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி செந்தில்குமார் ஆகிய இருவரும் கடுமையாகப் பணியாற்றி வருவது பிளஸ். 

அ.ம.மு.க. சார்பில் ஜோதிமுருகன் வேட்பாளராக நிற்கிறார். இவர் சார்ந்துள்ள பிள்ளைமார் சமூகம் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் துணை நிற்பது பிளஸ். நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் நிற்கிறார். மக்களிடம் இவர் வாக்கு கேட்கும் முறை, எதார்த்த பேச்சு ஆகியவை பிளஸ். மக்கள் நீதி மைய வேட்பாளரான டாக்டர்.சுதாகரன், அரசியலுக்கே புதியவர். மற்ற கட்சிகள் எல்லாம் முதல்கட்ட பிரசாரத்தை முடித்த நிலையில், இவர் இன்னும் திண்டுக்கல் நகர் பகுதியைத் தாண்டவில்லை. 

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. பணப்பட்டுவாடா
2. கூட்டணி கட்சியினரின் செயல்பாடு
3. வாக்குறுதிகள்
4. தலைவர்களின் பிரசாரம்
5. வேட்பாளரின் செல்வாக்கு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால், செல்கிற இடங்களில் எல்லாம், வாய் உளறி ஏதாவது பேசிவிடுகிறார். மாம்பழத்தில் வாக்கு கேட்பதற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். அ.தி.மு.க. தரப்பில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக கொடுத்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் இருக்கும் உட்கட்சி மோதலைப் பயன்படுத்தி தேர்தல் வேலை செய்கிறது தி.மு.க. 1980-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொகுதியில் உதயசூரியன் உதிக்கவில்லை. 39 ஆண்டுகளுக்குப் பிறகு உதயசூரியனை உதிக்க வைக்க வேண்டும் எனத் தொண்டர்களும் உற்சாகத்தோடு வேலை செய்கிறார்கள். பூத் கமிட்டி, கிளைச்செயலாளர்களுக்கு உரிய கவனிப்பை நடத்தி முடித்திருக்கிறது அ.தி.மு.க. கூட்டணி. தி.மு.க.வில் இன்னும் செலவு  கணக்கு தொடங்கவில்லை. பணத்தை வாரியிறைத்தாலும் தற்போதைய ரேஸில் சூரியனே முந்திக் கொண்டிருக்கிறது. 

 
அடுத்த கட்டுரைக்கு