Published:Updated:

ஜாஃபர்சேட் விடுப்புக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்

விகடன் விமர்சனக்குழு

சென்னை, மார்ச்.29,2011

தமிழக காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஜாஃபர்சேட் 48 நாட்கள் விடுமுறையில் செல்கிறார். இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியது. ##~~##

இதையடுத்து, தமிழக உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பொறுப்பில் புதிதாக ஒருவரை நியமிக்க 3 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் ஆணையம் வாங்கியுள்ளது.

அண்மையில் தமிழக உளவுப் பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஜாஃபர்சேட்டை, தேர்தல் ஆணையம் டெல்லிக்கு அழைத்து சில விளக்கங்களை கேட்டது.

அதைத் தொடர்ந்து அவரை மேற்கு வங்காளத்தில் தலைமை தேர்தல் பார்வையாளராக நியமித்து அங்கு செல்ல வற்புறுத்தியது. ஆனால், ஜாஃபர்சேட் அங்கு செல்ல மறுத்து, அதற்கு பதிலாக விடுமுறையில் செல்கிறேன் என்று கூறிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் தேர்தல் ஆணையத்திடம் விடுமுறையில் செல்வதற்கு அனுமதி கேட்டிருந்தார்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அவர் வகிக்கும் பொறுப்பு மிகவும் முக்கியமானது என்றும், அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திங்கட்கிழமை அவரது 48 நாட்கள் விடுமுறைக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. மே 15-ம் தேதி வரை அவர் விடுமுறையில் இருப்பார்.

ஜாஃபர்சேட்டுக்கு பதிலாக உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பதவியில் புதிதாக ஒருவரை நியமிக்க 3 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு 3 பேர் கொண்ட பட்டியலை, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த 3 பேர்களில் இருந்து ஒருவரை உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக தேர்தல் ஆணையம் நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.