Published:Updated:

முட்டைக்கு ஃப்ரிட்ஜ் கொடுப்பவர் யார்..! அ.தி.மு.க.வா... கொ.ம.தே.க.வா? - நாமக்கல் நிலவரம்

முட்டைக்கு ஃப்ரிட்ஜ் கொடுப்பவர் யார்..! அ.தி.மு.க.வா... கொ.ம.தே.க.வா? - நாமக்கல் நிலவரம்
முட்டைக்கு ஃப்ரிட்ஜ் கொடுப்பவர் யார்..! அ.தி.மு.க.வா... கொ.ம.தே.க.வா? - நாமக்கல் நிலவரம்

அ.தி.மு.க.வின் உட்கட்சி சலசலப்புகள் இருந்தாலும் காளியப்பனுக்காக பம்பரமாகச் சுற்றி வேலை செய்து வருகிறார் அமைச்சர் தங்கமணி. இருப்பினும், இலை மலருமா அல்லது கொ.ம.தே.க. கொடியேற்றுமா?

தொகுதி: நாமக்கல் 

நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், சங்ககிரி, ராசிபுரம் (எஸ்.சி), சேந்தமங்கலம் (எஸ்.டி)

அதியமான் மரபும் காந்தி பேச்சும்:

`நாமகிரி' என்று அழைக்கப்படும் 65 மீட்டர் உயரமுள்ள பாறை ஒன்று நகரின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்தே நாமக்கல் உருவானது. இதன் பழைய பெயர் `ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என்கிறார்கள். ஆனால், மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்ற பேச்சும் தொகுதிக்குள் உள்ளது. 

நாமகிரி பாறையின் அருகே ஹரிஜன இயக்கத்துக்கு ஆதரவு கேட்டு 1934 பிப்ரவரி 14 அன்று மகாத்மா காந்தி பேசிய கூட்டத்துக்கு 15,000 மக்கள் வந்திருந்தது ஹைலைட்டான விஷயம். இப்பாறையின் ஒருபுறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கி.பி.784 ம் ஆண்டு அதியமான் மரபைச் சேர்ந்த குணசீலன் கட்டியதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

தொகுதி பற்றிய குட்டிக் கதை ஒன்று:

கொல்லிமலையில் தேவர்களும் மகரிஷிகளும் தவமிருந்தபோது அசுரர்களால் துன்பம் நேரிட்டதாகவும் அதைத் தடுக்க தேவரான விஸ்வகர்மா ஒரு பெண் சிலையைச் செய்ததாகவும், அதற்கு உயிர் கொடுத்த தேவர்கள், அந்தப் பெண்ணின் வசீகரத்தில் மயங்கி வருகின்ற அரக்கர்களை எல்லாம் கொன்றதாகவும் கதை ஒன்று வலம் வருகிறது. 

சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் ஆளப்பட்டது கொல்லிமலை. கொல்லிப்பாவை என்ற தெய்வத்தின் பெயரால் உருவானது கொல்லிமலை என்றும் சொல்கிறார்கள். எந்தவொரு தவற்றைச் செய்தாலும் `கொல்லிப்பாவை' அம்மன் வடிவில் வந்து பழிவாங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. 

தொகுதியின் அரசியல் வரலாறு:

ராசிபுரம் தொகுதியை நீக்கிவிட்டுப் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி இது. 2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க.-வைச் சேர்ந்த காந்திசெல்வன் நாமக்கலிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.கவின் வைரம் தமிழரசியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக பணியாற்றினார். அடுத்து நடைபெற்ற 2014 மக்களவை தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்திடம் தோல்வியுற்றார் காந்திசெல்வன். கடந்தகால தேர்தல்களைக் கவனித்தால் அ.தி.மு.கவின் கோட்டையாக நாமக்கல் இருக்கிறது. கவுண்டர், வன்னியர், அருந்ததியர் இன மக்கள் கணிசமாக வாழ்கின்ற தொகுதி. 

தலையாய பிரச்னை? 

நாமக்கல்லில் ரிங் ரோடு அமைக்க வேண்டும் என்பதே தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. முட்டை மற்றும் கோழிப்பண்ணை, லாரி பாடி கட்டுதல், கார்மென்ட்ஸ் எனத் தொழில் நகரமாக இருப்பதால் சாலைவசதி அவசியம் என்கிறார்கள் இப்பகுதிவாசிகள். 

வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கு தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும். குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும்வகையில் குளம், ஏரி போன்றவைகளைத் தூர்வார வேண்டும், திருமணி முத்தாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

முட்டைக்கு குளிர்பதனக் கிடங்கு:

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் முட்டைக்குப் பெயர் பெற்ற நாமக்கல்லில், முட்டைகளை குளிர்விக்கும் குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. கோழிப்பண்ணை மற்றும் முட்டை பண்ணையை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை அடங்கியுள்ளது.

அடிக்கடி தண்ணீர்ப் பஞ்சம் நிலவுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். தொகுதி முழுக்க குடிப்பதற்கே தண்ணீர் இல்லை. இதனால் விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. முறையான நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லாததால், வாரம்தோறும் தெருவில் இறங்கி குடிநீருக்காக மக்கள் போராடும் நிலை ஏற்படுகிறது. திருமணிமுத்தாறு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தண்ணீர்ப் பஞ்சம் நிச்சயம் தீரும். இத்திட்டம் பற்றி அரசு கவனத்தில் கொள்ளவே இல்லை. கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்றளவும் மின்சாரம் இல்லாத நிலை உள்ளது. 

கொல்லிமலையிலிருந்து `பாக்சைட் மணல்' எடுப்பதை நிறுத்த வேண்டும் என நீண்டநாள்களாகப் பேசி வருகின்றனர் இப்பகுதி மக்கள். 

தற்போதைய நிலவரப்படி கட்சிளின் செல்வாக்கு என்ன? 

அ.தி.மு.க - பி.ஜே.பி. அரசின் மேல் உள்ள அதிருப்தி, தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக போட்டியிடும் சின்ராஜுக்கு சாதகமாக அமையும். தி.மு.க., அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் ஒரே சமூகத்தைச் (கவுண்டர்) சேந்தவர்கள் என்பதால் யாருக்கு அதிகளவில் இந்தச் சமூகத்தினர் வாக்களிப்பாளர்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அ.ம.மு.க வேட்பாளர் சாமிநாதன் அ.தி.மு.க.வின் கணிசமான வாக்குகளை பிரிப்பார். திருமாவளவன் உள்ள தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றிருப்பது, கொங்கு மண்டலத்தில் உள்ள கவுண்டர்களிடையே அதிருப்தி ஏற்படுத்திருக்கிறது. இது அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்குச் சாதகமாக இருக்கிறது.

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. பா.ஜ.க. மீதான அதிருப்தி
2. பணப்பட்டுவாடா
3. அ.தி.மு.க. எதிர்ப்பு  
4. தி.மு.க. கூட்டணிகள் பலம் 
5. வேட்பாளர்களின் செல்வாக்கு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக சின்ராஜ் போட்டியிடுகிறார். முட்டைக் கோழி பண்ணை சங்கத் தலைவராக இருந்ததால், தொகுதி முழுக்க நல்ல அறிமுகமான நபராக இருக்கிறார். அ.தி.மு.க. சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர் காளியப்பன், கட்சியின் மாவட்டப் பொருளாளர் என்ற பொறுப்பை வகித்திருந்தாலும் தொகுதிக்கு அறிமுகம் இல்லாத நபர் என்பது மைனஸ். தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் முழு உத்வேகத்தோடு தொகுதி முழுக்க ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். என்னதான் கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிட்டாலும், தி.மு.க.வே களமிறங்கியதுபோல உடன்பிறப்புகள் வேலை பார்த்து வருவது கொ.ம.தே. கட்சிக்கு பிளஸ். 

``ஒரு பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டேன்" என மக்களிடம் சத்தியம் செய்து பிரசாரம் செய்து வருகிறார் சின்ராஜ். ``நாமக்கல் தொகுதி முழுவதும் மின்சார வசதி, குடிநீர் வசதி செய்து தரப்படும். நிச்சயம் குடிநீர்ப் பஞ்சத்தை தீர்க்கும் திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுவேன்" என மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்துகிறார். அ.தி.மு.க. வேட்பாளரோ, ``கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதியான ரிங் ரோடு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்" என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி பிரசாரம் செய்கிறார். 

அ.தி.மு.க.வின் உட்கட்சி சலசலப்புகள் இருந்தாலும் காளியப்பனுக்காக பம்பரமாகச் சுற்றி வேலை செய்து வருகிறார் அமைச்சர் தங்கமணி. இருப்பினும், இலை மலருமா என்பதற்கான பதில், வாக்குப் பதிவு நாளில்தான் தெரியவரும். 

 
அடுத்த கட்டுரைக்கு