Published:Updated:

`அய்யனாரப்பா... முனீஸ்வரா... ஆடு, கோழி வாங்கிக்கப்பா!' - அரக்கோணத்தின் ஆக்‌ஷன் கிங் ஆவாரா ஏ.கே.மூர்த்தி?!

`அய்யனாரப்பா... முனீஸ்வரா... ஆடு, கோழி வாங்கிக்கப்பா!' - அரக்கோணத்தின் ஆக்‌ஷன் கிங் ஆவாரா ஏ.கே.மூர்த்தி?!
`அய்யனாரப்பா... முனீஸ்வரா... ஆடு, கோழி வாங்கிக்கப்பா!' - அரக்கோணத்தின் ஆக்‌ஷன் கிங் ஆவாரா ஏ.கே.மூர்த்தி?!

``பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடு கிடையாது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்’’ எனப் பிரசாரத்தில் அனல் பறக்கப் பேசி வருகிறார் மூர்த்தி. ஜெகத்தின் பணபலத்தை முறியடித்து மாம்பழத்தைப் பழுக்க வைப்பாரா?

நட்சத்திர வேட்பாளர்: ஏ.கே.மூர்த்தி (அரக்கோணம்) 

வட்டச் செயலாளர் டு ரயில்வே இணை அமைச்சர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள கீழ்மாம்பட்டு எனும் குக்கிராமத்தில் 1964-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி அய்யாசாமி உதந்திக்கவுண்டர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் ஏ.கே.மூர்த்தி. வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். சொந்த கிராமத்திலேயே பள்ளிப்படிப்பை முடித்த மூர்த்தி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவில் எம்.ஏ பட்டம் பெற்றார். பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்குமுன்பு சென்னையில் சொந்தமாகக் காய்கறி மற்றும் பழங்கள் வணிகம் செய்தார். மூர்த்தியின் மனைவி பத்மினிதேவி. இவர்களுக்கு விஜயமகேஷ் என்ற ஒரு மகனும் சமித்ரா என்ற மகளும் உள்ளனர். மகன் லண்டனில் எல்.எல்.எம் சட்டப்படிப்பும் மகள் சென்னையில் பி.ஆர்க் எனும் கட்டடக் கலையும் பயில்கின்றனர். சென்னையில் உள்ள தி.நகரில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். 

டாக்டர்.ராமதாஸ் மீதான ஈர்ப்பால், பா.ம.க-வில் சாதாரண தொண்டனாக அடியெடுத்துவைத்தார். பின்னர், சென்னை மாநகர வட்டச் செயலாளராகப் பொறுப்பேற்ற மூர்த்தி படிப்படியாக உயர்ந்து தென் சென்னை மாவட்டச் செயலாளர், மாநில துணை பொதுச் செயலாளர், மாநில தொழிற்சங்கத் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்திருக்கிறார். தற்போது, வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளராகவும் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராகவும் கட்சிப் பணியாற்றி வருகிறார். செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதியில் (மறுசீரமைப்புக்கு முன்பு) தொடர்ந்து இரண்டு முறை பா.ம.க சார்பில் வெற்றிபெற்றிருக்கிறார். மத்திய ரயில்வே துறை இணையமைச்சராகப் பதவி வகித்த மூர்த்தி, பா.ம.க. மக்களவைக் கொறடாவாகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

ரயில் சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். ரயிலில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காகத் தொட்டில் அமைப்பது, மருத்துவக் குழுவுடன் தனி `கோச்’ இணைப்பது ஆகியவற்றைக் கொண்டுவர முயன்றவர். அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனை எதிர்த்துக் களமிறங்கியிருக்கும் ஏ.கே.மூர்த்தி `நட்சத்திர’ வேட்பாளராக ஜொலிக்கிறார். 8,29,61,484 ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துகளும் 77,10,578 ரூபாய்க்குக் கடன் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார் மூர்த்தி. 

`ஆக்‌ஷன் கிங்' மூர்த்தி:

வடமாவட்டங்களில் தர்மபுரிக்கு அடுத்தபடியாக சாதியை மையப்படுத்தி வெற்றி, வாய்ப்பைத் தீர்மானிக்கின்ற தொகுதிகளில் ஒன்றாக அரக்கோணம் பார்க்கப்படுகிறது. வன்னியர் சமூக மக்கள் பெரும் வாக்குவங்கியாக இருப்பதால், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இத்தொகுதியைக் கேட்டுப் பெற்றிருக்கிறது. தவிர, முதலியார் சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர். அனைத்துக்கட்சிகளும், இந்த இரண்டு சமூகத்திலிருந்துதான் வேட்பாளர்களைக் களமிறக்குகின்றனர். கடந்த காலங்களில், முதலியார் சமூகத்தினர் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளனர். அதன்பிறகு, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே வெற்றி பெற்றுவருகிறார்கள். சிட்டிங் எம்.பி கோ.ஹரியும் வன்னியர்தான்.  

இதே சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஏற்கெனவே இந்தத் தொகுதியில் 1999 மற்றும் 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றிருக்கிறார். அதேபோல், பா.ம.க சார்பில் அரங்க.வேலுவும் அரக்கோணம் தொகுதியில் ஒருமுறை வெற்றிபெற்று மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்துள்ளார். பணபலத்தாலும் வன்னியர்கள் வாக்குவங்கியாலும் மீண்டும் வெற்றிபெற்றுவிடலாம் என்ற வியூகத்தில் களமிறங்கியிருக்கும் ஜெகத்ரட்சகனுக்கு, ஏ.கே.மூர்த்தி பெரும் சவாலாக விளங்குகிறார். சாதிய அடையாளம் இல்லாமல் பொது வேட்பாளராகவும் வித்தியாசமான வேட்பாளராகவும் தன்னை வாக்காளர்கள் பார்ப்பதாக ஏ.கே.மூர்த்தியே தெரிவித்திருக்கிறார். 

``தி.மு.க முதலாளி கட்சி. நாங்கள் பாட்டாளி கட்சி. எந்த நேரத்திலும் சாமானிய மக்கள் என்னைச் சந்திக்கலாம். சாராய ஆலை அதிபர்கள்தான், தி.மு.க வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, இரவு, பகலாக அவர்கள் சாராயம் ஊற்றிக்கொடுக்கிறார்கள். நான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன். இப்போதும் விவசாயம் செய்கிறேன்’’ என்று சென்டிமென்ட்டாக வாக்காளர்களைக் கவர்கிறார் மூர்த்தி. ``தைவான் நாட்டின் உதவியுடன் காலணி தொழிற்சாலை அமைத்து, 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தருவேன்’’ என நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். 

அ.தி.மு.க, தே.மு.தி.க-வுக்கும் குறிப்பிட்ட வாக்குவங்கி இருக்கிறது. தலித் சமூக மக்களின் வாக்குகளைக் கவரவும் முயல்கிறார். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எனக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வருகையால் உற்சாகத்தில் இருக்கிறார் ஏ.கே.மூர்த்தி. 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. பா.ம.க-வின் `ஆக்‌ஷன் கிங்’ என்று ராமதாஸ் மற்றும் அன்புமணியால் செல்லமாக அழைக்கப்படுகிறார் 

2. ராமதாஸின் அன்புக் கட்டளைக்கு பணிந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கரை வேட்டிக் கட்டாமல் பேன்ட் அணிகிறார் 

3. விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், இப்போதும் விவசாயம் பார்க்கிறார். ஊர்ப் பக்கம் சென்றால் சொந்த நிலத்தில் வரப்பு வெட்டுவது, பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளைச் செய்கிறார்.

4. வசதி, வாய்ப்புகள் பெருகினாலும் பொதுமக்களிடமும் பா.ம.க-வின் அடிமட்ட தொண்டர்களிடமும் சிரித்த முகத்துடன் எளிமையாகப் பழகுவது

5. தனக்கு உதவிசெய்பவர்களுக்கு எந்தச் சூழ்நிலையிலும் தீங்கு நினைக்காமல் விசுவாசமாக இருப்பவர்.

டாப் 3 சர்ச்சைகள்: 

1. சென்னை தி.நகர் போப் தெருவில் பீடி அதிபருக்குச் சொந்தமான 2 மாடி வீட்டை மனைவி பெயரில் போலி ஆவணம் தயாரித்து அபகரித்துக்கொண்டதாகக் கூறப்பட்ட புகார்.

2. 6 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருப்பது.

3. தலித் சமூகத்தினர் மீது வெறுப்புணர்வு காட்டுகிறார் எனப் பரவலாகப் பேசப்படுவது. 

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்: 

அரக்கோணம் தொகுதி மக்களுக்கு ஏ.கே.மூர்த்தி புதிய முகம். பணம் செலவழிப்பதில் கஞ்சத் தனம் செய்வதால் கூட்டணிக் கட்சியினர் மட்டுமன்றி பா.ம.க-வினரே வாக்கு சேகரிக்க வராதது மைனஸ். அதே நேரத்தில், தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஏற்கெனவே இந்தத் தொகுதியில் 10 ஆண்டுகள் எம்.பி-யாக இருந்தவர் என்பது பிளஸ். தொகுதிப் பக்கம் ஒரு சில முறை வந்ததும் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றிகூட தெரிவிக்காதது ஜெகத்தின் மிகப் பெரிய மைனஸ். `தமிழகத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஒருவர். அனைத்து நாடுகளிலும் தொழில் முதலீடு செய்தவர். ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவித்த இலங்கையில் சிங்களர்களை வாழவைக்க ரூ.27 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்திருக்கிறார். இங்குள்ள மக்களை வாழவைப்பதற்காக எந்த முதலீடுகளையும் செய்யவில்லை' என ஜெகத்தின் மீது பா.ம.க விமர்சனங்களை முன்வைப்பது ஏ.கே.மூர்த்திக்குப் பிளஸ்ஸாக மாறியிருக்கிறது. 

`இந்துக்களுக்கு எதிரான கட்சி தி.மு.க' என மற்ற கட்சிகள் பரப்புரை செய்கின்றன. இந்த விமர்சனத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் கோயில் கோயிலாகச் சுற்றிவருகிறார் ஜெகத்ரட்சகன். ஏ.கே.மூர்த்தியும் மாம்பழத்துடன் கோயில்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தரிசனம் செய்கிறார். பக்திப் பழமாக மாறிய மூர்த்தி, ``அய்யனாரப்பா... முனீஸ்வரா எப்படியாவது என்னை வெற்றிபெறச் செய்துவிடு. உனக்கு ஆடு, கோழிகளைப் பலிகொடுக்கிறேன்’’ என்று வேண்டுதல்களை வைத்திருக்கிறார். மூர்த்திக்கு வில்லனே, அ.ம.மு.க தான். அக்கட்சியின் வேட்பாளர் பார்த்திபன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சோளிங்கர் எம்.எல்.ஏ என்பதால் அ.தி.மு.க வாங்கு வங்கியைக் கூடை கூடையாக அள்ளுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். அ.தி.மு.க கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகளை தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனும், அ.ம.மு.க வேட்பாளர் பார்த்திபனும் பணத்தை இரைத்து வசியம் செய்வதால் ஏ.கே.மூர்த்தி விழிபிதுங்கி நிற்கிறார். இதனால் அரக்கோணம் தொகுதியில் மாம்பழம் பழுக்கும் முன்பே, சூரியன் உதிக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. 

கடந்த முறை, ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் ஏ.கே.மூர்த்தி போட்டியிட்டார். வந்தவாசி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பெரிய காலனிப் பகுதியில் பிரசாரம் செய்த அவருக்கு, ஒருசமூக இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பா.ம.க-வினருக்கும், அந்த இளைஞர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. கற்கள் வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்தனர். ஆட்டோ உட்பட சில வாகனங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. அந்த இளைஞர்கள், ஏ.கே.மூர்த்திக்குப் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தனர்.

அந்தத் தேர்தலில் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார் மூர்த்தி. மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பமில்லாமல் அரக்கோணத்தில் களமிறங்கியிருக்கிறார். சமூக ரீதியிலான பிரச்னைகளை தவிர்ப்பதற்காக ஏ.கே.மூர்த்தி பல்வேறு வியூகங்களை அமைத்துவருகிறார். ``பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடு கிடையாது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்’’ எனப் பிரசாரத்தில் அனல் பறக்கப் பேசி வருகிறார் மூர்த்தி. "ஜெகத்தின் பணபலத்தை முறியடித்து மாம்பழத்தைப் பழுக்க வைப்பாரா?" என்ற சந்தேகமும் தொகுதி முழுக்க வலம் வருகிறது. 

அடுத்த கட்டுரைக்கு