Published:Updated:

தேனியின் தோனியே... காணாப் போச்சு கேணியே..! - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் ஜெயிப்பாரா?

தேனியின் தோனியே... காணாப் போச்சு கேணியே..!  - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் ஜெயிப்பாரா?
தேனியின் தோனியே... காணாப் போச்சு கேணியே..! - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் ஜெயிப்பாரா?

`ஓ.பன்னீர்செல்வத்தின் மீதான அதிருப்தியால் தொகுதி மக்களிடம் என்ன மாதிரியான தாக்கத்தையும் ரவியால் ஏற்படுத்த முடியாது' என எதிர்த் தரப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இதை மீறி ரவீந்திரநாத் குமார் தேனியில் தடம் பதிப்பாரா?

நட்சத்திர வேட்பாளர்: ப.ரவீந்திரநாத் குமார் (தேனி) 

பன்னீர்செல்வம் பிளான்:

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கவிதாபானு, ரவீந்திரநாத்குமார், பிரதீப்குமார் என மூன்று பிள்ளைகள். பள்ளிப்படிப்பை தேனியில் முடித்தவர் கோவை பி.எஸ்.ஜி கலைக்கல்லூரியில் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதன் பின்னர் சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் எம்.பி.ஏ மனிதவள மேலாண்மை படிப்பையும் நிறைவு செய்தார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த ரவிக்கு, ஏதாவது ஒரு பொறுப்பை வாங்கிக்கொடுத்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஓ.பி.எஸ். அதன்படி, தேனி மாவட்டத்தின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா. `ரவி யார்?' என்பதற்கான விடை அனைவருக்கும் தெரியும். ஆனால், எப்போது இருந்து கட்சியில் இருக்கிறார் என்று கேட்டால் பதில் சற்று சிரமம்தான். ஆனால், ``என்னுடைய 18 வயதிலிருந்து கட்சியில் இருக்கிறேன். பல ஆண்டுகளாகக் கட்சிப் பணியாற்றி வருகிறேன். நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறேன்" என பயோடேட்டா வாசிக்கிறார் ரவி. 

`தலைகாட்டாத' தர்மயுத்தம்!

2016 சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பாக, ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்கிய ஐவர் கூட்டணி மீது ஊழல் புகார் கிளம்பியது. அப்போது, ஐவர் கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள், 30,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதில் ரவீந்திரநாத் குமாருக்கும் தொடர்பு உண்டு என்ற தகவல் தேனி தொகுதியில் ரீங்காரமிட்டது. இதன் தொடர்ச்சியாக ஓ.பி.எஸ்ஸுடன் சம்பந்தப்பட்டவர்களின் பதவிகள் பறிபோயின. இதில், ரவீந்திரநாத் குமாரின் தேனி மாவட்ட அ.தி.மு.க, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையும் ஒன்று. 

அதைத் தொடர்ந்து அரசியலிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்த ரவி, தனது தந்தையின் தர்மயுத்த காலகட்டத்தில் கூட தலைகாட்டவில்லை. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கை கோத்தபின்னர் தேனி மாவட்ட அரசியலில் பேனர்களில் தலைகாட்டினார் ரவி. பின்னர் அரசியல் மேடைகளில் டி.டி.வி.தினகரனையும், தங்க தமிழ்ச்செல்வனையும் வறுத்தெடுத்தார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி, `எம்.பி தேர்தலில் நிற்க இருக்கிறேன்' எனச் சொல்லாமல் சொன்னார் ரவி. 2014 ம் ஆண்டே தேனியில் சீட் வாங்க முயற்சி செய்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. ஆனால், பார்த்திபனுக்கு சீட் ஒதுக்கினார் ஜெயலலிதா. 

இந்தத் தேர்தலில் எம்.பி சீட் கிடைத்த கையோடு தொகுதிக்கு வந்தவர் தடபுடலாக படை பரிவாரங்களுக்கு மத்தியில் பிரசாரத்தை தொடங்கினார். `தேனியின் தோனியே' என அவரை ஆர்ப்பாட்டமாக வரவேற்றனர் ஆதரவாளர்கள். குழந்தைகளை தூக்கி கொஞ்சுவது, பெயர் சூட்டுவது என எம்.ஜி.ஆர் பாணியில் பாட்டியைக் கட்டி அணைப்பது என தினம்தினம் மிரள வைக்கிறார். தனக்கென ஓர் இளைஞர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு, அவர்கள் மூலமாக தன்னை புரமோட் செய்து கொள்கிறார். இளைஞர்களைக் கவரும் வகையில் தேனிக்கு மாபெரும் விளையாட்டுத் திடல், மதுரையில் காளைச் சின்னம், வேலை வாய்ப்பு என உறுதிமொழிகளை வாரி இறைக்கிறார். இதற்கிடையே, ரவி பேசும் வீடியோக்கள், அவருடைய பேச்சு பாணி போன்றவை வலைதளங்களில் ட்ரோல் ஆகி வருகின்றன. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

தந்தையே துணை!

வாரிசு அரசியல் என்பதை தாண்டி வேட்புமனுத் தாக்கலில் சொத்து மதிப்பை குறைவாக மதிப்பிட்டு காட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டி தேர்தல் ஆணையத்தின் கதவைத் தட்டியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். `ஓ.பன்னீர்செல்வத்தின் மீதான அதிருப்தியால் தொகுதி மக்களிடம் என்ன மாதிரியான தாக்கத்தையும் ரவியால் ஏற்படுத்த முடியாது. பணத்தின் மூலமாக தேனி மக்களை விலைபேச முடியாது' என எதிர்த் தரப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். 

குறிப்பிட்ட சமுதாய வாக்குகளை மட்டுமே தங்க தமிழ்ச் செல்வனால் பெறமுடியும் எனக் கணக்கு போட்டுவைத்திருக்கிறார் ரவீந்திரநாத் குமார். `எப்படியும் தனது தந்தை தன்னை வெற்றிபெற வைத்துவிடுவார்' என்ற அதீத நம்பிக்கையோடு வலம் வருகிறார். அதிகாரம், பண பலம் என இரண்டு அஸ்திரத்தை இந்தத் தேர்தலில் தாராளமாகப் பயன்படுத்த திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். `தேனி மக்களுக்கு ஓ.பி.எஸ் எதுவும் செய்யவில்லை' என்பது ரவிக்கான பெரிய மைனஸ். 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. எது செய்வதென்றாலும் தனது தந்தையிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்வது ரவீந்திரநாத்குமாரின் வழக்கம்.

2. தன்னுடைய பர்சனல் மொபைல் எண்ணை தானாக யாருக்குக் கொடுக்கிறாரோ, அவரிடம் மட்டுமே போனில் பேசுவார். மற்றவர்கள் போன் செய்தாலும் எடுக்க மாட்டார்.

3. தனது தந்தையைப் போல, முழுக்கை வெள்ளைச் சட்டையை முழங்கை வரை மடித்துக்கொள்வார்.

4. கைகளை உயர்த்திப் பேசுவது, சிறிது இடைவெளிவிட்டுப் பேசுவது எனத் தனக்கெனத் தனி பாணியில் மேடையில் பேசுவதற்கு முயல்கிறார்.

5. எங்கு சென்றாலும், எவ்வளவு தூரம் சென்றாலும், வீட்டிலிருந்து சாப்பாடு வரவழைத்து சாப்பிடுவதையே விரும்புவார்.

டாப் 3 சர்ச்சைகள்: 

1. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனை தேர்தலில் நிறுத்தி வாரிசு அரசியல் செய்கிறார் என்ற விமர்சனம்.

2. கட்சி நிர்வாகிகள் அனைவரிடமும் எளிமையாகப் பழகுவதில்லை. பாரபட்சத்துடனே பழகுகிறார் என்ற சர்ச்சை.

3. லட்சுமிபுரம் கிணறு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நாணயம் தவறிப் போன சர்ச்சை.

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்:

ரவிக்குப் பிரதான போட்டியாகக் கருதப்படுபவர் தங்க தமிழ்ச் செல்வன். `ரவி வெற்றிபெற்றுவிடக் கூடாது' எனத் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். அ.தி.மு.க.வின் பிரசார யுக்தியை அறிந்து அதற்கேற்ப பிரசாரம் செய்து வருகிறார். தொகுதியில் அதிகம் அறியப்பட்ட நபராக இருப்பது தங்கத்தின் பிளஸ். பணத்தை தாராளமாக செலவு செய்ய முடியாதது தங்கத்தின் மைனஸ். அ.தி.மு.க. தரப்பு பணத்தை வாரி இறைத்து வருகிறது. அவர்களுக்கு இணையாக வேறு யாராலும் செலவு செய்ய முடியவில்லை. இருப்பினும் தேர்தல் நெருக்கத்தில் பணம் வந்துவிடும் என நம்பிக்கையோடு வாக்கு சேகரிக்கிறார் தங்கம். 

கடந்த காலத் தேர்தல்களின்போது தேனி வந்தால் யாருடைய வீட்டில் தங்குவாரோ, அதே வீட்டில்தான் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.தங்கியிருக்கிறார். அந்த வீட்டை தேனி போயஸ் கார்டன் என்றுதான் அழைக்கிறார்கள். `நான் ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததில்லை எனக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ``நான் எம்.பியானால் ஆறே மாதத்தில் தேனிக்கு ரயிலை கொண்டுவருவேன், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்த பாடுபடுவேன்" எனத் தன் பங்குக்கு வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார். கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுக்கு முறையாகப் பணப்பட்டுவாடா நடக்காமல் இருப்பது இளங்கோவனின் மைனஸ். இருப்பினும் அ.தி.மு.க வாக்குகள் பிரிவதால், கை ஓங்கும் என நம்புவது பிளஸ். இந்த முக்கோண மோதலில், `பரிசுப்பெட்டி, கையை வீழ்த்தி இலை மலருமா?' என்பதற்கான விடை, வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும். 

அடுத்த கட்டுரைக்கு