Published:Updated:

`5 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தாக்குதல்!'- மோடியைச் சாடும் திருமுருகன் காந்தி

`5 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தாக்குதல்!'- மோடியைச் சாடும் திருமுருகன் காந்தி
`5 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தாக்குதல்!'- மோடியைச் சாடும் திருமுருகன் காந்தி

ரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்ற கடந்த 5 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தாக்குதல் நடத்தி இருப்பதாக மே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது .  

சென்னையில் இன்று மே பதினேழு இயக்கத்தின் ஒருகிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, ப்ரவீன், லேனாகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய திருமுருகன் காந்தி, ``கூட்டாட்சி முறையை அழிக்கும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, மாநிலங்களின் கல்வி அதிகாரத்தைப் பறித்து கல்வியை தனியார்மயமாக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை, உயர்கல்வி ஆணைய மசோதா, நீட் தேர்வு திணிப்பு, இடஒதுக்கீட்டை அழிக்கும் நோக்கில் உயர்சாதியினருக்கு பொருளாதார ரீதியில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, மீனவர்களை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றக் கூடிய கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பானை 2018, சாகர்மாலா, பாரத் மாலா திட்டங்கள், திட்டக் குழுவை அழித்துவிட்டு உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்கும் வகையில் எச்.இ.எல்.எப் (HELP) கொள்கை (Hydrocarbon Exploration and Licensing Policy), நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா என தொடர்ச்சியான மக்கள் விரோத மசோதாக்கள் மற்றும் கொள்கைகளை பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது.

குறிப்பாக இந்தியாவின் ராணுவத் தளவாடங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்த அனுமதித்தும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். மனித வாழ்வை மீறும் சட்டங்களும், மசோதாக்களும் ஒருபுறம் இருக்க, தமிழர்களுக்கு எதிராக கீழடி வரலாற்றை அழிக்க முயலும் சூழ்ச்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து நீர்த்துப் போன ஆணையம் அமைப்பு, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு திணிப்பு, நெடுவாசல், திருக்காரவாசல், புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான அனுமதி அளித்துள்ளனர். மேலும் 15-வது நிதி ஆணையக் குழுவின் நடைமுறைகளை மாற்றி தமிழகத்துக்கான நிதியைக் குறைக்கும்  நடவடிக்கை, உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரும் ஏழு தமிழர் விடுதலையை அறிவிக்க மறுப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவு எனத் தொடர்ந்து  தமிழர் விரோதமாகப்  பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது.

பொருளாதார மற்றும் வாழ்வாதார ரீதியாக மட்டுமல்லாமல் பண்பாடு கலாசார ரீதியாகவும் அனைத்து தேசிய இனங்களின் பன்முகத்தன்மையை அழித்து வருகிறது. இந்தி, சம்ஸ்கிருதத்தைத் தொடர்ச்சியாக திணித்து வருகிறது. இந்துத்துவ பயங்கரவாதத்தை வளர்த்தெடுக்க ஊக்குவிப்பதன் மூலமாகச் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கல்வி, நீதித்துறை, அதிகாரவர்க்கம், ராணுவம் என அனைத்துத் துறைகளும் இந்துத்துவ மயமாக்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை அனைத்து துறைகளிலும் தலைமைப் பதவிக்கு திட்டமிட்டு அமர்த்தி வருகின்றனர். குறிப்பாக பல்கலைக்கழங்களின் தலைவர்களாகத் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஆட்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்களும், அவர்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. தேச விரோத வழக்குகள், பயங்கரவாத தடுப்பு வழக்குகள் என மோசமான வழக்குகள் அனைவர் மீதும் ஏவப்படுகின்றன. போராடுகின்ற மக்களைத் தாக்குவது, துப்பாக்கியால் சுடுவது எனப் பல நிகழ்வுகள் தொடர் கதையாகியுள்ளன. இப்படியான மோசமான மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அவர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர்க்குமாறு மே பதினேழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது" என்றார்  திருமுருகன்  காந்தி.   

அடுத்த கட்டுரைக்கு