Published:Updated:

பெரம்பலூரில் ஜெயலலிதாவையே மிஞ்சும் காஸ்ட்லி பிரசாரம்! பாரிவேந்தருக்குக் கை கொடுக்குமா?!

பெரம்பலூரில் ஜெயலலிதாவையே மிஞ்சும் காஸ்ட்லி பிரசாரம்! பாரிவேந்தருக்குக் கை கொடுக்குமா?!
பெரம்பலூரில் ஜெயலலிதாவையே மிஞ்சும் காஸ்ட்லி பிரசாரம்! பாரிவேந்தருக்குக் கை கொடுக்குமா?!

பெரம்பலூர் தொகுதியில் புரளும் பணப்பட்டுவாடாவும் அ.தி.மு.க. அதிருப்தி கோஷ்டிகளும், பாரிவேந்தரை பாராளுமன்றத்துக்கு அனுப்புமா?

நட்சத்திர வேட்பாளர்: பாரிவேந்தர் (பெரம்பலூர்)

சைக்கிள் வாத்தியார் டு பாரிவேந்தர்:

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் என்ற கிராமம்தான் பச்சமுத்துவின் சொந்த ஊர். தந்தையார் பெயர் ராமசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து என்பதை சுருக்கி டி.ஆர்.பச்சமுத்து ஆனார். சிறுவயதிலேயே அவரது தந்தை காலமானதால் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். எப்போதும் பச்சமுத்துவை வறுமை சூழ்ந்து கொண்டிருந்தது. சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆத்தூரில் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.எஸ்சி கணிதப் படிப்பை முடித்தார். பின்பு சென்னைப் பல்கலைக்கழகத்தில், முதுநிலை கணிதத்தை நிறைவு செய்தார். இதன் தொடர்ச்சியாக, டுட்டோரியல் கல்லூரிகளில் கணிதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் அப்போது கணித ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. அங்கும் விண்ணப்பித்து வேலைக்குச் சேருகிறார். காலை 6 மணி முதல் 10 மணி வரை அறிவியல் கல்லூரிகளில் கணக்கு வாத்தியார் வேலை. 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாநகராட்சி பள்ளியில் கணித ஆசிரியர் வேலை எனக் கடுமையான பணி. 

இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். அரசு தமிழகத்தில் கல்லூரிகள் நடத்தும் பொறுப்பை தனியார்களிடம் ஒப்படைத்தது. பச்சமுத்துவுக்கு ஏற்றம் தொடங்கியது இந்தக் காலகட்டத்தில்தான். தனது தந்தையின் நினைவாக 1985-ம் ஆண்டு எஸ்.ஆர்.எம் கல்லூரியைத் தொடங்கினார். இந்த நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிதாக கல்லூரிகளை உருவாக்கிக் கொண்டே சென்றது. சைக்கிளில் சென்று ஆசிரியர் பணியைத் தொடங்கிய பச்சமுத்து இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்பு பாரிவேந்தராக மாறத் தொடங்கினார். கல்வி நிறுவனங்களோடு ஊடகத் துறையிலும் கால்பதித்தவர், ஐ.ஜே.கே என்ற கட்சியையும் தொடங்கினார். 

20,000 கோடி சொத்து:

பாரிவேந்தரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். இவரின் வளர்ச்சியில் பல்வேறு விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கின்றன. மருத்துவ மாணவர்களின் கல்வி சேர்க்கையில் மோசடி, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கல்வி நிறுவனங்களை நடத்துவது என இன்று வரையில் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. தற்போது பெரம்பலூர் தொகுதியில் இரண்டாவது முறையாக களம் காண்கிறார். கடந்த முறை இதே தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது 2,38,887 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார். ஆனால் இந்த முறை தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். இது அவருக்குக் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துக்கொண்டிருக்கிறார். 

காஸ்ட்லி காரில் வந்து இறங்கும் பாரிவேந்தர், ஜெயலலிதா பாணியில் கூண்டு வைத்த வேனில் பிரசாரம் செய்கிறார். ``நான் வெற்றி பெற்று வந்தால் அனைத்துக்கும் அரசுப் பணத்தையே நம்பியிருக்க மாட்டேன். எனது சொந்த பணத்தைச் செலவு செய்வேன்" என்பதை தவறாமல் பிரசாரத்தில் முன்வைக்கிறார். அத்துடன், ``எஸ்.ஆர்.எம் கல்லூரியில், மாணவ, மாணவிகளுக்கு இலவச படிப்பு, மருத்துவமனைகளில் வறுமைக்கோட்டில் கீழ் உள்ளவர்களுக்கு முற்றிலும் இலவசம், நடுத்தர வர்க்கத்தினருக்கு முக்கால்வாசி பணம் குறைப்பு" என அசர வைக்கிறார். மேலும், சமுதாய ஓட்டுக்களைப் பெறுவதற்காக முக்கிய நிர்வாகிகளையும் நன்றாக கவனித்திருக்கிறார். 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. பல்கலைக்கழகத்தில் வேந்தராக இருப்பதால் இவரை வேந்தர் என்றும் காசை வாரி வழங்குவதால் இவரை பாரிவேந்தர் எனவும் அழைக்கின்றனர். இதே பெயரை கெஜட்டிலும் மாற்றிக் கொண்டார். 

2. `நன்றாக உழையுங்கள், ஒருநாள் உழைப்புக்கான பலன் கிடைக்கும். அதற்கு நானே உதாரணம்' என்பது இவருடைய தாரக மந்திரம்.

3. காலை 5 மணிக்கு எழும் இவர், இரவு 11 மணிக்கு மேல்தான் தூங்கச் செல்வார். அதிகநேரம் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

4. அரசு செய்யும் எனக் காத்திருக்காமல், சொந்தப் பணத்தில் நலத்திட்டங்களை நிறைவேற்றுவேன் எனக் கூறுவது. 

5. தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு, இயன்ற உதவிகளைச் செய்து அனுப்புவது.

டாப் 3 சர்ச்சைகள்: 

1. மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடியில் சிறைக்குச் சென்றது.

2. திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் எனக் கூறிவிட்டு, தி.மு.க கூட்டணியில் சீட் வாங்கியது. 

3. கல்விக் கட்டண கொள்ளை, நீர்நிலை ஆக்கிரமிப்புகள்.

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, அ.ம.மு.க சார்பில் தொட்டியம் ராஜசேகர்  எனப் பலர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க. சிட்டிங் எம்.பி மருத ராஜா, தொகுதிக்கு எனச் சொல்லிக்கொள்ளும்படியாக எதையும் செய்யாதது அ.தி.மு.க.வுக்கு மைனஸ், மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, பண மதிப்பிழப்பு போன்றவை பாரிவேந்தருக்கான பிளஸ். தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே, `என்.ஆர். சிவபதிக்கு சீட் கொடுக்கக் கூடாது' என்று முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த 5 ஒன்றிய செயலாளர்கள் எடப்பாடியைச் சந்தித்து முறையிட்டனர். அதனையும் மீறி சீட் வாங்கியதால், உள்கட்சி மோதல் வெடித்திருப்பது சிவபதிக்கான மைனஸ். 

இதையும் தாண்டி, ``உங்கள் முகம் தெரிந்த ஒருவருக்கு ஓட்டு போடுங்கள். நான் உங்களில் ஒருவன். உங்களோடு இருப்பேன்" என உருகி உருகி வாக்கு சேகரிக்கிறார் சிவபதி. நான் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை. சிவபதி ஜெயித்துவிடக் கூடாது எனத் தேர்தல் வேலை பார்த்து வருகிறார் அ.ம.மு.க வேட்பாளர் தொட்டியம் ராஜசேகர். இதில், முத்தரையர் வாக்குகளும் அ.தி.மு.க வாக்குகளும் பிரிவது பாரிவேந்தருக்கான பலமாகப் பார்க்கப்படுகிறது. `தொகுதியில் புரளும் பணப்பட்டுவாடாவும் அதிருப்தி கோஷ்டிகளும், பாரிவேந்தரை பாராளுமன்றத்துக்கு அனுப்புமா?' என்பதற்கான விடையை அறிந்து கொள்ளக் காத்திருக்கிறார்கள் அறிவாலய நிர்வாகிகள்.

அடுத்த கட்டுரைக்கு