Published:Updated:

`நடிகர்' சுதீஷ் ஜஸ்ட் மிஸ் ஆகி, அரசியல்வாதியான கதை! - கள்ளக்குறிச்சியைக் கைப்பற்றுவாரா எல்.கே.சுதீஷ்?

`நடிகர்' சுதீஷ் ஜஸ்ட் மிஸ் ஆகி, அரசியல்வாதியான கதை! - கள்ளக்குறிச்சியைக் கைப்பற்றுவாரா எல்.கே.சுதீஷ்?
`நடிகர்' சுதீஷ் ஜஸ்ட் மிஸ் ஆகி, அரசியல்வாதியான கதை! - கள்ளக்குறிச்சியைக் கைப்பற்றுவாரா எல்.கே.சுதீஷ்?

"விஜயகாந்த் மச்சானுக்கு வெற்றி தேடி வருமா... 2009 நிலைதானா?" எனக் கள்ளக்குறிச்சி தொகுதிக்குள் பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது. எல்.கே சுதீஷூக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

நட்சத்திர வேட்பாளர்: எல்.கே.சுதீஷ் (கள்ளக்குறிச்சி) 

அத்தானுக்காக துறந்த ஆசை! 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம்தான் சுதீஷின் சொந்த ஊர். அப்பா பெயர் கண்ணைய்யா, அம்மா அம்சவேணி. சகோதரிகள் ராதா ராமச்சந்திரன், பிரமலதா விஜயகாந்த். பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். சுதீஷின் அப்பா கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சக்கரை ஆலையில் சிறப்பு அலுவலராகப் பணியாற்றியவர். இதனால் குடும்பமே மூங்கில்துறைப்பட்டில் வசித்து வந்தது. `மலை ஏறப் போனாலும் மச்சான் தயவு வேணும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, விஜயகாந்த் தயவால் அரசியலில் கால் பதித்தார். தே.மு.தி.கவின் மாநில துணைச் செயலாளராக இருக்கிறார். தொடக்க காலத்தில் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து விஜயகாந்தை வைத்துப் படங்களைத் தயாரித்து வந்தார். கூடவே, விஜயகாந்தின் கால்ஷீட்டுகளைக் கவனிக்கும் மேலாளராகவும் இருந்தார். சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் சுதீஷின் கனவாக இருந்தது. 

அந்தக் கனவு, தன் அக்கா பிரேமலதாவை விஜயகாந்த் திருமணம் செய்ததால் நனவாகும் என நம்பினார். இந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர் சுதீஷை அணுகினார். ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தவர், அந்தத் தயாரிப்பாளரை விஜயகாந்தை சந்திக்க அனுப்பி வைத்தார். இதற்குத் தடை போட்ட விஜயகாந்த், `வீட்டில் ஒருவர் நடிகராக இருந்தால் போதும். நடிக்கும் எண்ணத்தைத் தூக்கிப் போட்டுவிடு' எனக் கூறியதால், நடிப்பு ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதுகுறித்து நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போதெல்லாம், `அத்தானுக்காக (விஜயகாந்தை அப்படித்தான் அழைப்பார்) என் ஆசையைத் துறந்தேன்' என்று சொல்லி சிலாகிப்பார். பின்னாளில் விஜயாகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பின்பும் அவருக்கு உதவியாளராக இருந்தார். இதன் பலனாக இளைஞர் அணிச் செயலாளர் பதவி தேடி வந்தது. 

2014 மக்களவைத் தேர்தலின்போது கூட்டணி விஷயங்கள் அனைத்தையும் முன்னின்று செயல்படுத்தியவர் சுதீஷ். விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்படவே, பிரேமலதாவுக்கு அடுத்தபடியாக கட்சிக்காரர்கள் மத்தியில் இவருக்கான செல்வாக்கு பெருகியுள்ளது. 

தொகுதி வரலாறு:

மறுசீரமைப்பில் கள்ளக்குறிச்சி தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடந்த 2009 நாடாளமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் ஆதிசங்கர், பா.ம.க வேட்பாளர் தனராசு ஆகியோரை எதிர்த்துக் களமிறங்கினார் சுதீஷ். அந்தத் தேர்தலில் 1,32,223 வாக்குகளைப் பெற்றார். தொகுதி மக்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல அறிமுகம் உண்டு. அதேபோல 2014 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தே.மு.தி.க சார்பாக போட்டியிட்ட ஈஸ்வரன் 1,04,183 ஓட்டுகளைப் பெற்றார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், உறவினர்கள், நண்பர்கள் என 25 பேர் அடங்கிய ஒரு குழுவினரை தொகுதிக்கு அழைத்து வந்தார் சுதீஷ். "அவர்களோடுதான் பிரசாரம் செய்கிறார். அவர்களின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்கிறார். அதனால் லோக்கல் கட்சிக்காரர்களை சரியாக அணுகவில்லை. பிரசாரத்துக்கு வரும் லோக்கல் கட்சிக்காரர்கள் செலவுக்கு பணம் கேட்டால் அ.தி.மு.க.-வினரை பார்க்கச் சொல்கிறார்" என தே.மு.தி.கவினர் மத்தியில் அதிருப்தி குரல் தென்படுகிறது. 

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. தொழில் நிறுவனங்களை நிர்வகிப்பதில் சுதீஷ் நல்ல திறமைசாலி. ஆனால், அரசியலையும் தொழிலாக நினைத்து செயல்படுவதுதான் முரண்.

2. தொழில்முறை பங்குதாரர்களும் நண்பர்களும், `எல்.கே.எஸ்' எனச் சுருக்கமாக அழைப்பது வழக்கம்.

3. தினமும் காலையில் பொங்கல் சாப்பிடுவதையே அதிகம் விரும்புவார்.

4. ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்ட சுதீஷ் திருப்பதி வெங்கடாசலபதி பக்தர். வருடம் ஒரு முறை திருப்பதி கோயிலுக்குச் சென்று வருவார்.

5. மைத்துனர் விஜயகாந்த் பேச்சைத் தட்ட மாட்டார். அவர் சொல்வதையே வேதவாக்கு என நினைப்பார்.

டாப் 3 சர்ச்சைகள்: 

1. கட்சிக்காரர்களை நெருங்கவிட மாட்டார். கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு மரியாதை தர மாட்டார்.

2. குடும்ப அரசியல் செய்வது.

3. அ.தி.மு.கவுடன் கூட்டணி பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே, துரைமுருகனை தே.மு.தி.க நிர்வாகிகள் சந்தித்தது. இதற்கு சுதீஷின் செயல்பாடுகள்தாம் காரணம் என்ற விமர்சனம்.

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்: 

எல்.கே.சுதீஸுக்குக் கடும் போட்டியாக இருப்பவர் தி.மு.க. வேட்பாளர் கெளதம சிகாமணி. இவர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் என்பதால் தொகுதியில் நன்றாக அறியப்பட்டுள்ளார். தன் மகனின் வெற்றிக்காக தெருத் தெருவாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார் பொன்முடி. கட்சியின் சீனியர், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்பதால் தொகுதி முழுவதும் தன் ஆதரவாளர்களைக் களமிறக்கிவிட்டிருக்கிறார். கூட்டணி மற்றும் சமுதாய பலம் கை கொடுப்பது கௌதம சிகாமணிக்கு பிளஸ். 

அதே வேளையில், கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமான பிறகும் இங்குள்ள கட்சியில் சீனியர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் பொன்முடியின் மகனுக்கு சீட் கொடுத்ததில் கடும் அதிருப்தி நிலவுகிறது. கோஷ்டி பூசல்களால் கௌதம சிகாமணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க. மீது இருக்கும் கடந்தகால கசப்பான அனுபவங்களும் தி.மு.க.வுக்கு மைனஸ். 

அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிப்பதும், பா.ம.கவுக்கெனத் தொகுதியில் இருக்கும் செல்வாக்கையும் தனக்கான பிளஸ்ஸாகப் பார்க்கிறார் சுதீஷ். ஆனால், கள நிலவரம் என்பது வேறு மாதிரியாக இருக்கிறது. "சென்னையில் வசிக்கக் கூடியவர். வெற்றி பெற்றால் சென்னைக்குச் சென்று விடுவார். தொகுதியில் ஏதாவது பிரச்னை என்றால் செலவு செய்து சென்னைக்குச் சென்றுதான் பார்க்க வேண்டும்" என எதிர்த்தரப்பினர் பிரசாரம் செய்து வருவது மைனஸ்.

அ.ம.மு.க. வேட்பாளர் கோமுகி மணியன். எம்.ஜி.ஆர் காலத்து எம்.எல்.ஏ. என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இதனால் அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்களும் அதிருப்தியாளர்களும் கோமுகி மணியனுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். புதிய கட்சி என்பதாலும் கூட்டணி பலம் இல்லாததாலும் கோமுகிக்குப் பெரிய மைனஸ். 

`வருங்கால' அமைச்சர்! 

தே.மு.தி.க வேட்பாளர் சுதீஷ், தன்னுடைய பிரசாரத்தில், "வெற்றி பெற்றால் காவிரி, வசிஷ்ட நதி, ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள கல்லாறு ஆகியவற்றை இணைக்கப்படும். ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் டு உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சில ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அதனால் அடிக்கடி விபத்து நேர்கிறது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையான 4 வழிச் சாலையாக சீரமைக்கப்படும். விபத்தில்லா சாலையாக உருவாக்குவோம். அதிக கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களை உள்ளடக்கிய தொகுதி என்பதால் கிராமப்புற ஏழை எளிய மணவர்களின் வேலைவாய்ப்புக்காக தொழிற்பேட்டையும், மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியிலேயே வனத்தில் சேகரிக்கப்படும் பொருள்களை விற்பனை செய்ய வனச் சந்தைகளையும் ஏற்படுத்துவோம்" என வாக்குறுதிகளை அள்ளிவீசி வாக்கு சேகரிக்கிறார். 

தி.மு.க. வேட்பாளர் கெளதம சிகாமணியோ, "தி.மு.க தேர்தல் அறிக்கையில் உள்ள நலத்திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்கப் பாடுபடுவேன்' என்கிறார். அ.ம.மு.க வேட்பாளர் கோமுகி மணியனோ, `வசிஷ்ட நதியில் உள்ள தடுப்பணைகள் தூர்வாரப்படும். பச்சமலைக்குப் புதிய சாலை, ஆத்தூர் புதிய மாவட்டம், தொகுதி முழுக்க போக்குவரத்து வசதி' எனப் பிரசாரம் செய்கிறார். இதில், சுதீஷுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "சுதீஷ் வெற்றி பெற்றால் டெல்லி அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிப்பார்" என ஆசையைத் தூண்டிவிட்டுச் சென்றுவிட்டார். இதன் காரணமாக, `வருங்கால அமைச்சர்' என சுதீஷைக் குளிர வைக்கிறார்கள் முரசுக் கட்சித் தொண்டர்கள். "விஜயகாந்த் மச்சானுக்கு வெற்றி தேடி வருமா...2009 நிலைதானா?" எனக் கள்ளக்குறிச்சி தொகுதிக்குள் பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது. 

அடுத்த கட்டுரைக்கு