Published:Updated:

பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!

கன்னியாகுமரி தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் என்னென்ன?

பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!
பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!
பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!

தொகுதி: கன்னியாகுமரி

கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தலை ஓண விருந்தும் `தேன்கனி' பலாவும்!

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி என 2009 ம் ஆண்டு அறியப்படுவதற்கு முன்புவரையில் நாகர்கோவில் தொகுதியாகத்தான் பார்க்கப்பட்டது. அப்போது, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டார், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் இருந்தன. கன்னியாகுமரி சட்டசபை தொகுதியானது, திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருந்தது. தொகுதி மறுசீரமைப்பில் திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டு கன்னியாகுமரி சேர்க்கப்பட்டது. தற்போது கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் அடங்கிவிட்டது.

நாகர்கோவில் தொகுதியாக இருந்த வரையில், இங்கு வெற்றிபெறும் கட்சி அல்லது கூட்டணிக் கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது சென்டிமென்டாக இருந்தது. தற்போது கன்னியாகுமரியாக மாறிய பிறகும் இதே சென்டிமென்ட் தொடர்கிறது. விருதுநகர் மக்களால் தோற்கடிக்கப்பட்ட காமராஜர், அடுத்ததாக நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய பெருமை, இப்பகுதி மக்களையே சாரும். 

பாலை நிலம் தவிர்த்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களை உள்ளடக்கிய தொகுதி. மேற்குத்தொடர்ச்சி மலையும் அதைச் சார்ந்த பகுதி எனச் சுமார் 30 சதவிகிதம் வனப்பகுதிகள் உள்ளன. பணப் பயிரான ரப்பர், மலைப் பயிர்களான ஏலமும் கிராம்பும் விளைகின்றன. இத்தொகுதியில் விளையும் பலாப் பழத்துக்கு அதீத ருசி உண்டு. பலாப் பழத்தை பிரிக்கும்போது அதிலிருந்து ஊறும் தேன் கனியின் சுவை பார்ப்பவர்களைச் சுண்டியிழுக்கும். மருத்துவக் குணம் நிறைந்த மட்டி வாழைப்பழம், இந்தத் தொகுதியின் சிறப்பு. தென்னை மரங்களும் வயல்வெளிகளும் நிரம்பியுள்ள எழில் சூழ்ந்த பகுதி இது. 

பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!

மீன்பிடிதொழில் ஜோராக நடக்கிறது. ஆழ்கடல் தூண்டில் மீன்பிடித் தொழிலில் தூத்துர், சின்னத்துறை மீனவர்கள் கைதேர்ந்தவர்கள். கேரள மாநிலத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1956-ம் ஆண்டுவரை இருந்ததால் கேரள கலாசாரம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது கேரளத்தைபோன்று இந்தத் தொகுதியிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தலை ஓண விருந்து இங்கு தனிச்சிறப்பு. கேரள எல்லையோர மக்கள் மலையாளம் கலந்து பேசுகிறார்கள். வேலை, தொழில் சம்பந்தமாக கேரளத்துடன் நெருக்கம் கொண்டது கன்னியாகுமரி. 

திருவிதாங்கூர் படைக்கு டச்சு தளபதி!  

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த சமயத்தில் பத்மநாபபுரம் அரண்மனையின் தலைநகராக கன்னியாகுமரி இருந்தது. பத்மநாபபுரம் அரண்மனையை கைபற்றும் நோக்கத்துடன் டச்சுப்படை கடல் வழியாகக் குளச்சல் பகுதிக்கு வந்தது. திருவிதாங்கூர் படையின் பெரும்பகுதி கொச்சி சமஸ்தானத்துடன் போர்புரிந்துகொண்டிருந்தது. இதனால் உள்ளூர் மக்களுடன் இணைந்து பனை மரத்தடிகளை மாட்டு வண்டியில் வைத்து பீரங்கி போன்று தயார் செய்து குளச்சல் கடற்கரையில் நிறுத்தி வைத்தனர். கப்பலிலிருந்து பார்த்தபோது பீரங்கிகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டது போன்று காட்சியளித்ததால் டச்சுப்படை தயங்கி நின்றது. அப்போது உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் டச்சுக் கப்பலில் ஓட்டையிட்டு எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தினர். அச்சத்தில் கரை நோக்கி வந்த டச்சுப்படையினரை போரிட்டு வீழ்த்தியது திருவிதாங்கூர் படை. டச்சுத் தளபதி டிலனாயைக் கைது செய்து மன்னர் முன்பு கொண்டு நிறுத்தினர். டிலனாயின் திறமையைக் கண்டு அவரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தளபதி ஆக்கினர். அவர் தனக்குத் தெரிந்த ஆயுதப் பயிற்சிகளை திருவிதாங்கூர் படைக்கு அளித்தார். டச்சு தளபதி டிலனாய் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் கல்லறை தக்கலை அருகே புலியூர்குறிச்சி கோட்டைக்குள் அமைந்துள்ளது.

பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!

மண்டைக்காடு கலவரம்! 

`கேரள மாநிலத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்' என இரண்டாம் சுதந்திரப் போராட்டம் நடந்த தொகுதி. கேரள மாநிலத்தைப் போன்று தேசிய கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தொகுதி. அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக களம் கண்டால் பா.ஜ.க அமோகமாக வெற்றி பெற்றுவிடும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டு சேர்ந்தால் அந்தக் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார் என்பது கடந்தகால வரலாறு. 2004-ல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் பெல்லார்மின் வெற்றிபெற்றார். 2009-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார். கடந்த 2014 தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டதால் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். மதம் சார்ந்த அரசியல் இந்தத் தொகுதியை ஆட்டிப்படைக்கிறது. 

பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!

இந்துக்களில் பெரும்பான்மையினர் பா.ஜ.கவில் இருக்கிறார்கள். சிறுபான்மை மதத்தினர் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளில் அதிகம். வெற்றிவாய்ப்பைத் தீர்மானிப்பதும் சிறுபான்மையினர் வாக்குகள்தாம். 1982-ம் ஆண்டு மண்டைக்காடு கோயில் விழாவின்போது மதக்கலவரம் ஏற்பட்டபிறகுதான் மதம் சார்ந்து வாக்குகள் பிரிந்தன. அப்போது பா.ஜ.க., சங்பரிவார் அமைப்புகள் இந்துக்களுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்ததால் இன்றளவும் இந்துக்கள் பா.ஜ.க. பக்கம் நிற்கின்றனர். பா.ஜ.க.வுக்கு எதிராக நிற்கும் கட்சிகள் சிறுபான்மையினர் வாக்குகளை ஒருங்கிணைக்கின்றன. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.கவின் முகமாகப் பார்க்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சியின் டென்னிஸ் ஆறுமுறை எம்.பியாக இருந்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு என்று யாரும் நிரந்தர வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. தற்போது போட்டியிடும் ஹெச்.வசந்தகுமார் ஏற்கெனவே தொகுதியில் அறிமுகமானவர்தான்.

பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!

தலையாய பிரச்னை? 

1. தொழில் வளர்ச்சிக்காக வர்த்தக துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. பா.ஜ.கவும் காங்கிரஸும் ஆதரவு, எதிர்ப்பு அரசியல் நடத்துவதை மக்கள் ரசிக்கவில்லை.

2. ரப்பர் உற்பத்தி மிகுந்து இருக்கிறது. ஆனால், ரப்பர் விலை நிரந்தரம் இல்லை. ரப்பர் பூங்கா அமைக்க வேண்டும் என்பது நெடுநாளைய கோரிக்கை

3. பூவுக்குப் புகழ்பெற்ற தோவாளையில் நறுமணத் தொழிற்சாலை (சென்ட்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, கோரிக்கையாகவே உள்ளது 

நீண்டகாலப் பிரச்னைகள்? 

படித்தவர்கள் நிறைந்த மாவட்டம். ஆனால், படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு உள்ளூரிலே வேலைவாய்ப்பை ஏற்படுத்த இதுவரை எந்த மக்கள் பிரதிநிதியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அனைவரும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களை நோக்கிப் பயணப்படுகின்றனர். 

கன்னியாகுமரியில் சுற்றுலாதளங்களை மேம்படுத்தி அது தொடர்பான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவதும் மீன்பிடித் தொழிலை ஊக்குவித்து சார்பு தொழில்களை ஏற்படுத்துவதும் நீண்டகால கோரிக்கையாக உள்ளன. 

பனை பீரங்கிக் குண்டு டெல்லியில் வெடிக்குமா? - கன்னியாகுமரி கள நிலவரம்!

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள்!  

1. பா.ஜ.க வேட்பாளரின் 40,000 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்ட பிரசாரம்

2. மீனவர்கள் எதிர்க்கும் வர்த்தக துறைமுகத் திட்டம்

3. உள்ளூர் வேட்பாளர், வெளியூர் வேட்பாளர் கோஷம்

4. தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்

5. பெரும்பான்மை ஆதரவு, சிறுபான்மை பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள்

கட்சிகளின் செல்வாக்கு? 

பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நேரடி மோதலில் களத்தில் உள்ளன. பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கும் கடும்போட்டி நிலவுகிறது. சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக கிடைப்பது காங்கிரஸ் கட்சிக்குப் பிளஸ். அ.ம.மு.க. வேட்பாளர் பொறியாளர் லட்சுமணன் தொகுதியில் ஓரளவு அறிமுகமான நபர். அ.தி.மு.க. வாக்குகளை இவர் பிரிப்பது காங்கிரஸ் வேட்பாளருக்கு பிளஸ். பணப்பட்டுவாடா உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் இருக்கிறார். இவர்களைத் தவிர, மக்கள் நீதி மய்யமும் நாம் தமிழர் கட்சியும் வாக்குகளைப் பெறுவதற்குப் போராடி வருகின்றன. இருப்பினும், `தாமரையை வீழ்த்துமா கை?' என்பதற்கான விடையை அறிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.