Published:Updated:

`ஓட்டு போடுங்கன்னு கால்ல விழ முடியாது!' - தம்பிதுரையை மீண்டும் எம்.பி ஆக்குமா கரூர்?!

`ஓட்டு போடுங்கன்னு கால்ல விழ முடியாது!' - தம்பிதுரையை மீண்டும் எம்.பி ஆக்குமா கரூர்?!

கரூர் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் என்னென்ன?

`ஓட்டு போடுங்கன்னு கால்ல விழ முடியாது!' - தம்பிதுரையை மீண்டும் எம்.பி ஆக்குமா கரூர்?!

கரூர் தொகுதியில் ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் என்னென்ன?

Published:Updated:
`ஓட்டு போடுங்கன்னு கால்ல விழ முடியாது!' - தம்பிதுரையை மீண்டும் எம்.பி ஆக்குமா கரூர்?!

தொகுதி: கரூர்

கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி, வேடச்சந்தூர், மணப்பாறை, விராலிமலை என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

வஞ்சி மாநகரத்தின் வரலாறு: 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும், திருச்சி மாவட்டத்தில் வரும் மணப்பாறை, திண்டுக்கல் வேடச்சந்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை எனப் பரந்து விரிந்து  கிடக்கும் தொகுதி இது. 

6 முறை காங்கிரஸும் 6 முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேபோல், தி.மு.க.வும், த.மா.கா.வும் தலா ஒருமுறை வென்றுள்ளன. ஆரம்பத்தில், காங்கிரஸ் கோட்டையாக இருந்த கரூர் தொகுதி, எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கிய பிறகு அ.தி.மு.க.வுக்கான ஆதரவு பெருகிவிட்டது. `எம்.ஜி.ஆர் பக்தர்கள்' நிரம்பிய தொகுதி. 

கரூர் தொகுதியில் பிரதான தொழில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். தவிர, வீட்டு உபயோகத் துணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கரூர் முதன்மை வகிக்கிறது. பஸ் பாடி கட்டுதல், கொசுவலை உற்பத்தி, முருங்கை உற்பத்தி என்று இந்தத் தொகுதியின் தொழில்கள் அதிகம். 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமையான வரலாற்றைத் தாங்கி நிற்கும் கரூர், தமிழகத்தின் மிகப்பழைமையான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்து மத நம்பிக்கையின்படி, `பிரம்மா தனது படைப்புத் தொழிலை இங்குதான் தொடங்கினார்' என்றும், அதனாலேயே `கருவூர்' என்று அழைப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

பண்டைய காலத்தில் வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்பட்ட இவ்வூர், சேரப்பேரரசின் தலைநகராக விளங்கியிருக்கிறது. அதேபோல், முந்தைய காலத்தில் ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கரூர் இருந்திருக்கிறது. தங்க நகை ஏற்றுமதி அப்போதே கரூரில் களைகட்டியிருக்கிறது. இதற்கு தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே சாட்சி. தவிர, கரூவூரை கிரேக்கப் புலவர்கள் பலர் தங்கள் பாடல்களில், `கோருவூரா' என்று குறிப்பிட்டு, தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

கப்பல் வாணிபத்தில் மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரைப் பகுதிக்கு போக, கரூரைதான் பிரதான வழியாக வைத்திருக்கிறார்கள் நம் பண்டைய தமிழர்கள். கொங்கு நாட்டின் ஒருபகுதியாக உள்ள கரூர் தொகுதியில் வரும் மணப்பாறை மாடுகளுக்கும் முறுக்குக்கும் பிரசித்தி பெற்ற ஊர். 

கருணாநிதிக்கே அரசியல் என்ட்ரி:

முன்னாள் முதல்வர் கருணாநிதி முதன்முதலாகப் போட்டியிட்டது இங்குள்ள குளித்தலை தொகுதியில்தான். இங்கு நடைபெற்ற நங்கவரம் விவசாயப் போராட்டம்தான், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மக்கள் மத்தியில் தி.மு.க.-வுக்கு ஓர் எழுச்சியைக் கொடுத்தது என்கிறார்கள். 

இரட்டை இலை மேஜிக்:

கரூர் நாடாளுமன்றத் தொகுதி ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்தது. எம்.ஜி.ஆர் வருகைக்குப் பிறகு, `யார் வேட்பாளர் எனப் பார்க்கமாட்டோம். இரட்டைஇலைச் சின்னத்தைப் பார்த்ததும், எதையும் யோசிக்காம அதுல ஓட்டை போடுவோம்' என்று சொல்லும் மக்கள் இந்தத் தொகுதியில் இன்னமும் இருக்கிறார்கள். அதனால், நான்கு முறை இந்தத் தொகுதியின் எம்.பியாக இருக்கிறார் தம்பிதுரை, ஒவ்வொரு தேர்தலின்போதும், வாக்கு கேட்டு போகும்போது, மக்களின் எதிர்ப்புகளை எதிர்கொள்வார். ஆனால், கடைசியில் அவரே வெற்றி பெறுவார். எம்.ஜி.ஆரும் இரட்டை இலையும் செய்யும் மேஜிக் இது. தொகுதி முழுக்க அறிந்த வேட்பாளர்தான் தம்பிதுரை. அதேபோல், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் தொகுதிக்குப் பரிட்சையமானவர்தான். இருந்தாலும், இந்த முறை வாக்காளர் மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கணிக்க முடியாத சூழலே நிலவுகிறது. 

மணல் கொள்ளையும் சாயப்பட்டறை சிக்கலும்! 

1. தமிழகத்திலேயே அதிக அளவு மணல் கொள்ளை நடப்பது இங்கேதான். காவிரி, அமராவதி, நொய்யல் எனக் கரூரில் பாயும் ஆறுகளில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. இதனால், விவசாயமும், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது.

2. சாயப்பட்டறை கழிவு பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அமராவதி ஆற்றில் கலந்து, விவசாயத்தையும் நிலத்தடி நீரையும் பாதித்துவிட்டது ஐம்பதுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளின் கழிவுகள்

3. கரூர் தொகுதியில் நீக்கமற அனைத்துப் பகுதிகளிலும் நிறைந்திருக்கும் பிரச்னை குடிநீர்த் தட்டுப்பாடு. இப்போதைய எம்.பி தம்பிதுரை பிரசாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம் மக்கள், ``தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுது. அதை செஞ்சு கொடுக்காம என்ன தைரியத்துல ஓட்டு கேட்டு வந்தீங்க?" என்று வாக்குவாதம் செய்வதிலிருந்தே, நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். 

நீண்டகாலப் பிரச்னை?

சாயக்கழிவு பிரச்னை தீர, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை

கட்சிகளின் செல்வாக்கு? 

கரூரில் உள்ள அரவக்குறிச்சி தொகுதி தவிர்த்து, மீதமுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக இருப்பவர்கள் அ.தி.மு.கவினர்தான். அரவக்குறிச்சி தொகுதியில் கடைசியாக எம்.எல்.ஏவாக இருந்த செந்தில்பாலாஜியும் அ.தி.மு.க. வேட்பாளராக நின்று ஜெயித்தார். அதனால், அ.தி.மு.க. பலமுள்ள தொகுதியாகத்தான் கரூர் நாடாளுமன்றத் தொகுதி இருக்கிறது. ஆனால், இந்த முறை அ.தி.மு.க பலமாக உள்ளதா என்றால், பெரிய கேள்விக்குறிதான். கரூர் மாவட்டத்தில் தி.மு.கவை பலமாக்கி வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி. வேடசந்தூர் தொகுதியில் கணிசமாக காங்கிரஸ், கம்னியூஸ்ட் கட்சிகளுக்கு வாக்குகள் உள்ளன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. 

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், அ.ம.மு.க வலுவிழந்து உள்ளது. காரணம், அ.ம.மு.கவில் இருந்து சமீபத்தில் தி.மு.கவுக்கு தாவிய செந்தில்பாலாஜி, அ.ம.மு.கவை 60 சதவிகிதம் உடைத்து, தி.மு.கவில் சேர்த்துவிட்டார். அதோடு, அ.தி.மு.கவிலும் அ.ம.மு.கவினர் பலர் சேர்ந்துவிட்டனர். மக்கள் நீதி மய்யத்திற்கோ, நாம் தமிழர் கட்சிக்கோ பெரிய அளவில் இங்கே செல்வாக்கு இல்லை. ஓட்டுகளைப் பிரிப்பதற்கு மட்டுமே பயன்படுவார்கள். 

தம்பிதுரை நான்குமுறை கரூர் தொகுதியின் எம்.பியாக இருந்திருக்கிறார். அதுவும், கடைசி இருமுறை தொடர்ச்சியாக எம்.பியாக இருந்திருக்கிறார். ஆனால், தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும்படி அவர் எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை என்ற வெறுப்பு, மக்கள் மத்தியில் உள்ளது. அதோடு, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு உள்ளிட்ட காரணிகளால், கரூர் மாவட்டத்தில் 20,000 சிறு, குறு தொழில் முனைவோர்களும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். அதைச் சரிசெய்ய தம்பிதுரை முயலவில்லை. 

தம்பிதுரை தனது வெற்றிக்கான பிரமாஸ்திரமாக பணப் பட்டுவாடாவைதான் மலைபோல நம்பி இருக்கிறார். அ.தி.மு.க ஓட்டுகளை அ.ம.மு.க தங்கவேல் பிரிப்பதும் தம்பிதுரைக்கான பெரிய மைனஸ்.

ஏப்ரல் 18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் 

1. மணல் கொள்ளை

2. சாயக்கழிவு

3. குடிநீர்த் தட்டுபாடு

4. வேலைவாய்ப்பின்மை

5. தொழில் நசிவு

பிரசாரத்தில் என்ன நடக்கிறது?

அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் தீவிர எதிர்ப்பு. இதனால், தனது பிரசாரத்தின்போது அவரோடு பயணிக்க எந்த மீடியாவையும் அனுமதிப்பதில்லை. மக்களின் எதிர்ப்பையும் மீறி சளைக்காமல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். " கைச்சின்னத்துக்கு ஓட்டு போட்டால், கையளவுகூட உங்களுக்கு குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. காவிரியில் நமக்குச் சேர வேண்டிய தண்ணீரை  நமக்கு தராமல் வஞ்சிப்பதே கர்நாடக மாநில காங்கிரஸ்தான். அதேபோல, இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சிதான். ரத்தக்கறை படிந்த சின்னம் கைச் சின்னம். அந்தச் சின்னத்துக்காக உங்கள் ஓட்டு?" என மக்களிடம் பிரசாரம் செய்கிறார் தம்பிதுரை. 

அதேநேரம், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி செல்லும் இடமெல்லாம் பெண்களும் இளைஞர்களும் ஆர்வமாகக் கூடுகிறார்கள். ஜோதிமணியோடு நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். ``பத்து வருடங்களாக எம்.பியாக இருந்ததோடு, பிரதமரே எழுந்து நின்று மரியாதை செய்யும் அளவிலான துணை சபாநாயகர் பதவியை வகித்தவர் தம்பிதுரை. ஆனால், ஊருக்கு ஊர் அவரால் குடிநீர்கூட கொடுக்க முடியவில்லை. இந்திய அளவில் ஜவுளி ஏற்றுமதியில் நான்காவது இடம் வகிக்கும் மாவட்டம் கரூர். ஆனால், மத்திய அரசின் ஜி.எஸ்.டி. விதிப்பு, பணமதிப்பிழப்பு அறிவிப்பு போன்ற விசயங்களால், தொழில்கள் நசிந்துவிட்டன. இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். அதைச் சரிசெய்யவோ, அதைப்பற்றி நாடாளுமன்றத்தில் பேசவோ தம்பிதுரை செய்யவில்லை. 

'ஓட்டுப்போட்ட மக்களை மதிக்கவாவது செய்தாரா... ஓட்டுப்போட்டா போடுங்க... போடாட்டிப் போங்க... ஓட்டுக்காக உங்க கால்ல எல்லாம் விழமுடியாது' என்ற மக்களிடம் கோபப்படுகிறார். இவருக்கு மறுபடியும் ஓட்டுப்போட்டால், கரூர் தொகுதி இன்னமும் சீரழியும்" என டச்சிங்காகப் பேசுகிறார் ஜோதிமணி. மேலும், ``அவரது பணபலம், எனது மக்கள் பலத்திற்கு முன்பு செல்லாக்காசாகிவிடும்" என நம்பிக்கையோடு சுழன்று வருகிறார் ஜோதி. இலையை வீழ்த்தி ஜோதியின் பிரகாச ஒளி தென்படுமா எனக் காத்திருக்கிறார்கள் கதர்க் கட்சித் தொண்டர்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism