Published:Updated:

மவுன்ட் ரோடு பன் பட்டர் ஜாம், சாம் பால் சடுகுடு, ஏர்செல் வழக்கு! - மத்திய சென்னையில் தயாநிதி மாறனின் ஸ்டேட்டஸ்

மவுன்ட் ரோடு பன் பட்டர் ஜாம், சாம் பால் சடுகுடு, ஏர்செல் வழக்கு! - மத்திய சென்னையில் தயாநிதி மாறனின் ஸ்டேட்டஸ்
மவுன்ட் ரோடு பன் பட்டர் ஜாம், சாம் பால் சடுகுடு, ஏர்செல் வழக்கு! - மத்திய சென்னையில் தயாநிதி மாறனின் ஸ்டேட்டஸ்

கடைசி நேர காட்சிகளால், களநிலவரத்தை மாற்றியமைத்துவிட முடியும் என நம்பிக்கையோடு உழைத்து வருகின்றனர் உடன்பிறப்புகள். தயாநிதி மாறனின் ஸ்டேட்டஸ் என்ன?

நட்சத்திர வேட்பாளர்: தயாநிதி மாறன் (மத்திய சென்னை)

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 1966-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி முரசொலி மாறனுக்கு மகனாகப் பிறந்தார். அமெரிக்காவின் ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் தயாநிதியின் தந்தை முரசொலி மாறன். மத்திய சென்னை தொகுதியைத் தன்னுடைய கோட்டையாக மாற்றி வைத்திருந்தார் மாறன். அவர் இறந்த சமயத்தில் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தது. `யாரை வேட்பாளராக அறிவிக்கப்போகிறது தலைமை?' என உடன்பிறப்புகள் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது தயாநிதி மாறனின் பெயரை அறிவித்தார் கருணாநிதி. 'பணக்கார வீட்டுப் பிள்ளை, பெரிய பிசினஸ்மேன், களத்தில் இறங்கி வேலை செய்வார்?’ என அனைவரும் நினைத்தனர். ஆனால், அந்த எண்ணத்தை முறியடிக்கும் வகையில் கட்சி நிர்வாகிகளை அரவணைத்துத் தேர்தல் வேலை பார்த்தார். இதன் பயனாக, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க-வின் பாலகங்காவை சுமார் 1,34,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவியும் தேடி வந்தது. அடுத்து, மதுரை தினகரன் அலுவலக எரிப்பு, ஏர்செல் மேக்சிஸ் விவகார குற்றச்சாட்டு என அரசியலில் ஏக ஏற்ற இறக்கங்கள். தற்போது மீண்டும் மத்திய சென்னை வேட்பாளர்! 

அரசியல் ப்ளஸ் பிசினஸ்: 

திடீரென கட்சிக்குள் வந்தவர் என்றாலும் தனக்கென தனி செல்வாக்கைக் கொண்டிருந்தார். அரசியல்வாதி என்பதைத் தாண்டி பிசினஸ்மேன் என்ற வரையறைக்குள்ளே இருந்தார். சமீபத்தில் நடந்த தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன், `கட்சிக்காக அதிகம் பொருள் கொடுப்பவர்களில் முதன்மையானவர்கள் சன் குழும நிர்வாகிகள். தயாநிதி, இந்த இயக்கத்துக்கு நிதியை அள்ளி அள்ளிக் கொடுக்க வேண்டும்' என வேடிக்கையாகக் கூறினார். 

தொகுதி நிலவரம்: 

கருணாநிதி இருந்தபோது தினகரன் அலுவலக எரிப்பு வழக்கில் குடும்பத்துக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டாமல் இருந்து வந்தனர் மாறன் சகோதரர்கள். பின்னர் இந்த மனக்கசப்பு நீங்கி மீண்டும் பழையபடி கருணாநிதியுடன் இணைந்தனர். அந்தக் காலகட்டங்களில் கருணாநிதி கலந்துகொள்ளும் கூட்டங்களில் அவருடன் மறக்காமல் சென்றுவிடுவார் தயாநிதி. கட்சி பணிகளில் தீவிரம் காட்டாவிட்டாலும் தாத்தாவுக்கு உதவியாக இருந்து பணிகளைச் செய்து வந்தார். இதற்கிடையே இந்த முறையும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மத்திய சென்னையில் போட்டியிடக்கூடிய வாய்ப்பை ஸ்டாலின் அவருக்கு அளித்துள்ளார். இதற்காக, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உதயநிதி ஸ்டாலின் முதல் பலரும் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற ஆளும் கட்சிகள் மீதான வெறுப்பு உள்ளிட்டவற்றை முக்கிய காரணியாக வைத்து வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார்.

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. ஊருக்குத்தான் தயாநிதி மாறன். தாத்தா கருணாநிதி, மாமா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் `அன்பு' என்றே அழைப்பது வழக்கம்.

2. சாதாரண கட்சி தொண்டரில் ஆரம்பித்து வி.வி.ஐ.பி-கள் வரை எந்த ஒரு சூழ்நிலையிலும் சிரித்த முகத்துடனேயே பேசுவார்.

3. அரசியலில் களமிறங்கிய நாள் முதல் இன்று வரையில், பொதுக்கூட்டத்தில் பயன்படுத்தும் ஒரு வார்த்தை... ``இங்கே கூடியிருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே..." என்பதுதான். 

4. நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது பொழுதுபோக்கு.

5. புளு கலர் ஆடைகளையே விரும்பி அணிவார். அண்ணாசாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு நேரில் சென்று பன் பட்டர் ஜாம் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம். 

டாப் 3 விமர்சனங்கள்: 

1. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஒன்றை நிறுவியதாகவும் அதனால், தொலைத்தொடர்புத்துறைக்கு 1.79 கோடி நஷ்டம் என்று குற்றம்சாட்டப்பட்டது. சி.பி.ஐ விசாரணையும் நடத்தியது. வேட்புமனு உறுதிமொழிப் படிவத்தில், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு அப்பீல் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். 

2. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு உட்பட நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நேரடியாக ஆஜராகாமல் இருப்பது.

3. தேர்தலின்போது மட்டும் கட்சி நிர்வாகிகளுடன் உறவாடுவது.

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்

மத்திய சென்னை தொகுதியில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய வாக்குகள் இருக்கின்றன. இந்த வாக்குகளை அ.ம.மு.க-வின் வேட்பாளர் தெஹ்லான் பாகவியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமீலா நாசரும் பிரித்துவிடுவார்கள் என்ற அச்சம் தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. பா.ம.க-வின் வேட்பாளர் டாக்டர் சாம்பால், கிறிஸ்துவர். இந்த மூவரும் சிறுபான்மையினர் ஓட்டைக் கவரும் ரேஸில் தயாநிதி மாறனுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்கள். இவர்களின் தீவிர தேர்தல் பிரசாரம், தயாநிதி மாறனுக்கான வாக்குவங்கியில் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.  

பா.ம.க வேட்பாளர் டாக்டர் சாம்பால், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணித்தலைவர். 13 கல்வி நிறுவனங்கள், சலூன், ஜிம், ஹோட்டல்கள் என சுமார் 5,000 பணியாளர்களைக் கையில் வைத்திருக்கிறார். யாரும் எந்த நேரமும் இவரைத் தொடர்புகொள்ள முடியும் என்பது ப்ளஸ். இவரைப்பற்றி சமூக வளைதளங்களில் அவதூறாக போட்டோ வெளிவர, டென்ஷன் ஆகிவிட்டார். அவை ஜோடிக்கப்பட்டவை என்பதை புரியவைக்க படாதபாடு பட்டுவருகிறார். இதற்குக் காரணமே தயாநிதி மாறன்தான் என சைபர் கிரைமில் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வைத்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுகள் தனக்கான மைனஸ் என நினைக்கிறார் சாம்பால். 

அ.ம.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெஹ்லான் பாகவி, இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருவது ப்ளஸ். இஸ்லாமிய வட்டாரத்தைத் தாண்டி பெரிய அறிமுகம் இல்லாதவர் என்பது மைனஸ். மக்கள் நீதி மய்யத்தின் கமீலா நாசரோ, ''மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்று சொல்வதைவிட, மக்கள் பிரச்னைகளை சந்திக்கக் கூடாது என்ற எண்ணத்துடன்தான் தேர்தல் களம் காண்கிறோம். மத்திய சென்னை தொகுதியில் அடிப்படையான பெரிய பிரச்னை தண்ணீர்ப் பற்றாக்குறை. அதைத் தவிர்த்து அடித்தட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கப் பெரும் அவதிப்படுகின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளின் கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள். நான் படிக்கும்போது இருந்த அவலம் இன்னும் தொடர்கிறது' என அடித்தட்டு மக்கள் மத்தியில் வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொள்கிறார். அதேநேரம் தொகுதியில் அதிகம் அறிமுகம் இல்லை என்பது இவருக்கான மைனஸ் பாயிண்ட்டாக உள்ளது.

மத்திய சென்னை தொகுதியில் நிலவும் தி.மு.க உட்கட்சி குழப்பம், பூத் வாரியாக பண விநியோகம் தொடங்காதது, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியலையே தயாரிக்காதது எனத் தயாநிதி மாறன் தரப்பில் ஏகப்பட்ட குழப்பம் நீடித்து வருகிறது. கடைசிநேர காட்சிகளால், களநிலவரத்தை மாற்றியமைத்துவிட முடியும் என நம்பிக்கையோடு உழைத்து வருகின்றனர் உடன்பிறப்புகள். 

அடுத்த கட்டுரைக்கு